பக்கம் எண் :

68

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் போதனைப் பகுதி

தேன் மொழி பொழிந்த தெய்வத்தூதர்


திருமறை தனையும் என்றன்
    வாழ்வியல் நெறியும் கொண்டால்
வரும்குறை இல்லை - என்றே
    மாநபி மொழிந்தார் நெஞ்சே


குர்ஆன் சிறப்பு

கற்க!கற் பிக்க இன்பம்
    கடலென நல்க வல்ல
அற்புத மறையைப் பற்றி
    அறைந்திடல் எளிதோ ? நெஞ்சே


உள்ளத்தில் ஒளியைச் சேர்த்தே
    உயருற வழியைக் காட்டி
வெள்ளம்போல் கருத்த ளிக்கும்
    விரிமறை குர்ஆன் என்றார்

· திருமறை-திருக்குர்ஆன்
· வாழ்வியல் நெறி திருஹதீது.


ஓதியே இன்பம் காண
    உணர்ந்துமே மேன்மை எய்த
நீதியை அளிக்க வல்ல
    நேர்மறை குர்ஆன் நெஞ்சே


உலகத்தை உள்ள டக்கி
    ஒளிர்ந்திடும் திரும றைக்குள்
நலமுடன் நுழந்து விட்டால்
    நம்மைநாம் மறப்போம் நெஞ்சே


அறிவதன் மாண்பு ணர்த்தி
    அகமதைக் கொள்ளை கொள்ளும்
செறிவுறு திரும றைக்குள்
    சிந்தையை வைப்பாய் நெஞ்சே


மறையினை ஓதா இல்லம்
    மண்ணில்பா ழான இல்லம்
மறையினில் ஆழ்வீர் ! - என்ற
    மன்னரும் அவரே நெஞ்சே

இல்லாத பொருளே இல்லை;
    இணையிலாக் ‘குர்ஆன்’ இங்கு-
சொல்லாத பொருளே இல்லை;
    சோபிதம் பாராய் நெஞ்சே


ஹதீது - நபி இயல்

சொல்லுக்கே உணர்வை ஊட்டும்
    சொற்றிறன் தன்னைப் பெற்று
வெல்லும்ஓர் நிலையைக் கொண்ட
    வேந்தரும் நபியே நெஞ்சே


ஊனதும் உருகும் வண்ணம்
    உயர்மொழிச் செல்வம் தந்த
தேனனை நாய கத்தின்
    தேசதும் பெரிதே நெஞ்சே

எண்ணம்

எண்ணத்தைப் போன்றே இங்கு
    என்றைக்கும் செயலாம் ; அந்த
எண்ணமே பலனாம்-என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே


செயல்களை இறைவன், செய்யும்
    நோக்கத்தால் காண்பான் - என்ற
உயர்மொழி தன்னைப் பார்த்தே
    உனைத்திருத் திக்கொள் நெஞ்சே


உள்ளம்

இதயம்கெ டாதி ருந்தால்
    இன்னுடல் கெடுவ தில்லை
இதயம்கெட் டால் உடல்தான்
    கெட்டிடும் - என்றார் நெஞ்சே


நல்லுடல் உடையை மேலோன்
    நாடியே பார்ப்ப தில்லை ;
உள்ளம்ஒன் றினையே பார்ப்பான் -
    உணருக ! என்றார் நெஞ்சே


கல்வி, அறிவு

*உம்மியாய் வாழ்ந்தா ராயின்
    உயர்கலை ஞானந் தன்னைச்
செம்மையாய்த் தந்த அண்ணல்
    செய்தியும் வியப்பே நெஞ்சே


* உம்மி - எவரையும் ஆசானாகக் கொண்டு கல்வி பயிலாத மாநபி


கல்வியை, கல்விக் கான
    கண்ணியம் தன்னைப் பெற்று
நல்லிசை கொள்வீர் - என்று
    நவின்றிட லானார் நெஞ்சே


செத்தபல் பிணங்க ளுக்குள்
    உயிருள்ள ஒருவ னாவான்
வித்தையைக் கற்போன் - என்று
    விளக்கிய தவரே நெஞ்சே


வீரனின் குருதி தன்னில்
    மிகைத்ததே அறிஞன் ஏந்தும்
பேரறக் கோல்என் றன்றே
    பேசிய தவரே நெஞ்சே


ஆனநல் கல்வி தன்னை
    அடைந்திட வேண்டு மென்றால்
சீனமும் செல்க ! - என்ற
    செல்வரும் அவரே நெஞ்சே


அறிஞனால் இழக்கப் பட்ட
    அறிவதைத் தேடு தற்கே
அறிஞனே உரியோன்-என்ற
    ஆற்றலைப் பாராய் நெஞ்சே


ஒருமணித் துளிசிந் தித்தல்
    ஓரிர வெல்லாம் செய்யும்
பெருவழி பாடாம்-என்ற
    பெருமையைப் பாராய் நெஞ்சே


சிந்திக்கும் செயலைப் போன்றோர்
    செல்வமே இல்லை-என்றே
அந்தமாய் எடுத்து ரைத்த
    அழகதும் என்னே நெஞ்சே


ஆயுதம் அறிவே என்றும்
    ஆர்வமே ஊர்தி என்றும்
நேயமாய் எடுத்து ரைத்த
    நேசரும் அவரே நெஞ்சே


கற்றவர் யாரோ ? என்றால்
    கற்றதை வாழ்வில் கொண்டு
நிற்பவர்-என்று ரைத்த
    நேர்மையைப் பாராய் நெஞ்சே


கற்றவர் தன்னைப் போற்றிக்
    களிப்பவர் என்னைப் போற்றி
நிற்பவர் என்று சொன்ன
    நேர்மையைப் பாராய் நெஞ்சே


கற்றவை வாழ்விற் கென்று
    கருத்துடன் போற்று வோர்கள்
பொற்புடன் வாழ்வார் என்று
    புகன்றதும் அவரே நெஞ்சே


அடுத்தவர் அறிவைப் போற்றி
    ஆராய்ந்து பேசி டும்நல்
எடுப்பது வேண்டும்-என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே


மக்களின் அறிவுக் கேற்ப
    மகிழ்வுரை செய்வீர் !-என்றே
பக்குவ மாயு ரைத்த
    பண்பினைப் பாராய் நெஞ்சே


அறிவினில் விளக்க மின்றி
    அரும்பணி செய்வோ ரெல்லாம்
வெறுமையாய்ச் செக்கை சுற்றும்
    வேடிக்கை-என்றார் நெஞ்சே


இருவர்உட் கார்ந்தி ருக்க
    இடையில்மற் றொருவர் செல்லல்
முறையில்லை-என்று ரைத்த
    முறைமையைப் பாராய் நெஞ்சே


அதிகமாய்ச் சிரித்து வக்கும்
    அறிவிலார் இதய மும்தான்
அதிவிரை வாக வீழும்
    அறியென்ற தவரே நெஞ்சே


பேசுதல் வெள்ளி - என்றால்
    பெருமௌனம் தங்க மாகும்
மாசிலா திந்த வாக்கை
    மொழிந்ததும் அவரே நெஞ்சே


நாவுக்குக் கற்புண் டென்றால்
    நல்லதோர் ‘மௌனம்’-என்று
நாவுக்கு நெறிவ குத்த
    நல்லவர் நபியே நெஞ்சே


தீயவர் தொடர்பில் நல்ல
    தனிமையே சிறந்த-தென்ற
தூயவர் தம்மை எண்ணித்
    தோத்திரம் செய்வாய் நெஞ்சே


ஒழுக்கத்தில் மேம்பட் டோரை
    உற்றவ ராகக் கொள்க!
ஒழுக்கஞ்சேர் பெரியோ ரேநல்
    உத்தமர்-என்றார் நெஞ்சே


பெற்றவர் பிள்ளை கட்குப்
    பிரியமாய் அளிப்ப தற்கு
நற்பொருள் ‘ஒழுக்கம்’-என்று
    நவின்றிட லானார் நெஞ்சே


எண்ணிலா வளங்கள் தம்மை
    ஏற்றமாய் அளிக்க வல்ல
நுண்ணறி வதுவே செல்வம்
        என்றதும் அவரே நெஞ்சே


மகிழ்ச்சியின் திறவு கோலே
    மாண்புறு பொறுமை-என்ற
மகிமைசேர் நாய கத்தின்
    மாண்பதும் பெரிதே நெஞ்சே


பொறுமை, அடக்கம்

நான்எனும் அகந்தை கொள்ளல்
    நன்றன்று-என்ற தான
தேன்மொழி தன்னைத் தந்த
    திருநபி அவரே நெஞ்சே


பணிவும்நற் றாழ்வும் வாழ்வில்
    பெருமையில் நிலையும் கொண்டே
அணியென வாழ்வீர் ! என்ற
    அண்ணலைப் பாராய் நெஞ்சே


அழுக்காறை யேவி டுத்தே
    அகன்றுமே நிற்பீர்-என்றே
விழுமிய கருத்தைச் சொன்ன
    வேந்தரை நினைவாய் நெஞ்சே


நன்மைகள் அனைத்தி னுக்கும்
    நற்பாதை யைஅ ழைக்கும்
வன்மைசேர் அடக்கம்-என்று
    வாழ்ந்தவர் அவரே நெஞ்சே


இறைவனின் ஏவ லின்கீழ்
    இருந்துமே பணிவு கொள்வோன்
இறைவனால் உயர்வான் என்ற
    இன்மொழி பெரிதே நெஞ்சே


பிறர்குறை பேசி நம்மின்
    பெருங்குறை காட்டு கின்றோம்;
பிறர்குறை வேண்டாம்-என்ற
    பெருமையும் என்னே நெஞ்சே


இறந்தவர் தமைப்ப ழித்தல்
    இழிந்தது; புன்மை-என்ற
சிறந்தநல் மொழிய ளித்தார்
    சிந்தித்துப் பாராய் நெஞ்சே


உள்ளத்தில் ஒன்று வைத்தே
    உதட்டிலே ஒன்று பேசும்
கள்ளத்தை வெறுத்து நின்ற
    கண்ணியர் அவரே நெஞ்சே


விறகினை உண்ணும் தீபோல்
    விளங்கிடும் குணங்கள் தம்மை
இறந்திடச் செய்!பொ றாமை
    இழிந்தது-என்றார் நெஞ்சே


கல்லுக்கும் கொடிய தாகும்
    கயவர்கள் உள்ளம்-என்ற
சொல்லுக்கும் இணையும் உண்டோ?
    சொல்லுவாய் எனது நெஞ்சே


உயர்ந்தவர் தம்மைக் கண்டே
    உளந்தள ராது நம்மில்
அயர்ந்தவர் தம்மைக் காண
    அறைந்தவர் அவரே நெஞ்சே


சீற்றத்தை அடக்கு வோனே
    சிறப்புடைப் பலவான்-என்றே
ஏற்றமாய் எடுத்து ரைத்த
    எந்தையும் அவரே நெஞ்சே


உள்ளத்தில் கர்வம் உள்ளோர்
    உண்மையில் சொர்க்கத் திற்குள்
செல்லவே முடியா-தென்று
    செப்பிட லானார் நெஞ்சே


அடக்கத்தைப் போன்றே இங்கண்
    அரியநோன் புகளும் இல்லை;
அடங்கியே வாழ்வீர்-என்ற
    ஆற்றலைப் பாராய் நெஞ்சே


இடக்கையும் அறியா வண்ணம்
    ஈந்திட வேண்டும்-என்றே
அடக்கத்தை எடுத்து ரைத்த
    அருமையைப் பாராய் நெஞ்சே


இன்னாச்சொல் இயம்பு வாரும்
    இடுக்கணைப் பொறுக்கா தோரும்
என்வழி சேரார்-என்ற
    ஏந்தலும் அவரே நெஞ்சே


கருணை

மக்களுக் கிரக்கங் காட்டா
    மனிதனின் இடத்தில் அல்லாஹ்
எக்காலும் இரக்கங் காட்டான்-
    என்றதும் நபியே நெஞ்சே


மற்றவர் இடத்தில் அன்பு
    காட்டாத மாந்தர் எல்லாம்
வெற்றென மாய்வர்-என்ற
    வீரரும் அவரே நெஞ்சே

உயிர்களைப் பொறுத்த மட்டில்
    உயரிறைக் காக அஞ்சும்
நயமொழி உரைத்த அண்ணல்
    நல்லுளம் பாராய் நெஞ்சே


மண்ணக உயிர்க ளெல்லாம்
    மக்களைப் போன்ற தென்ற
பொன்னுரை புகன்ற வள்ளல்
    பொற்பதும் பெரிதே நெஞ்சே


பயணங்கொள் ஒட்ட கத்தின்
    பசியினைத் தீர்த்த பின்பே
அயர்விலா நிலையில் அண்ணல்
    அமர்ந்திடு வாரே நெஞ்சே


ஊர்தியாய்ப் பயன் படுத்த
    உகந்ததைப் பயன் படுத்திச்
சோர்வினில் இறங்கி அன்பைச்
    சொரிக!என் றாரே நெஞ்சே


நாயின்தா கத்தைத் தீர்க்கும்
    நற்செயல் அதுவுங் கூட
நேயமாய்ச் சொர்க்கம் சேர்க்கும்
    நினைஎன்ற தவரே நெஞ்சே


பறவையின் கூட்டைக் கண்டால்
    பாழ்செய்ய வேண்டாம்-என்றே
பரிவுடன் எடுத்து ரைத்த
    பாசத்தைப் பாராய் நெஞ்சே


எறும்புவாழ் புற்றில் நீவிர்
    என்றைக்கும் சிறுநீர் தன்னைப்
பெருக்காதீர்-என்று ரைத்த
    பெட்பதும் பெரிதே நெஞ்சே


பாதையில் கிடக்கும் முள்ளைப்
    பரிவுடன் எடுப்போ ருக்கும்
ஆதர வுள்ள அல்லாஹ்
    அருளுவான்-என்றார் நெஞ்சே


படைப்புக்கள் இடத்தில் அன்பைப்
    பரிவுடன் செலுத்து வோரைப்
படைத்தவன் நேசிக் கின்றான்-
    பார்எனப் பகர்ந்தார் நெஞ்சே


படைத்தவன் ஆணை யாகப்
    பரிவுடன் நடநது் கொள்வோன்
தடையின்றித் தரணி தன்னில்
    தலையாவான் - என்றார் நெஞ்சே


மக்களின் துக்கந் தன்னில்
    மகிழ்ந்துற வாடி நிற்போன்
முக்கிய மானோன்-என்று
    மொழிந்திட லானார் நெஞ்சே


மண்ணகத் தோர்க்கி ரங்கின்
    மாபெரி யோனின் ஆசி
விண்ணனை இறங்கும் என்றே
    விளக்கிட லானார் நெஞ்சே


தான்உண்டு களிப்ப வற்றைத்
    தன்னுடைத் தோழர் கட்கும்
பான்மையாய்த் தருக !-என்ற
    பரிவுரை பாராய் நெஞ்சே


தனியாக உணவை உண்போர்
    தகுநன்றி யைம றப்போர்
மனிதரில் கீழோர்-என்ற
    மாண்பினைப் பாராய் நெஞ்சே


அண்டயர் பசியால் வாட
    அறுசுவை உணவு தன்னை
உண்பதோ ?-என்று கேட்ட
    உத்தமர் அவரே நெஞ்சே

உணவினை ஆக்கு முன்னம்
    உவந்துமே அயல வர்க்கும்
உணவினைச் சேர்த்துச் செய்ய
    உரைத்ததும் அவரே நெஞ்சே


உழைத்தவர் உடலின் வேர்வை
    உலர்ந்திடும் முன்னம் அன்பாய்
அழைத்தவர் கூலி தன்னை
    ‘அளித்திடு’ என்றார் நெஞ்சே


நிர்க்கதி யாக வாழ்வோர்
    நெஞ்சது புழுங்கும் போது
நற்பரன் சன்னி தானம்
    நடுங்கிடும் - என்றார் நெஞ்சே


பேணுநர் அற்றோ ருக்குப்
    பீழைகள் தருவோ ருக்குத்
தேனுடை சொர்க்க வாசல்
    திறந்திடா தென்றார் நெஞ்சே


தற்சார்பில் வாழு கின்ற
    தகுதிசேர் வாழ்க்கை ஒன்றே
நற்காப்பு உடைய தென்று
    நவின்றிட லானார் நெஞ்சே


உலகமே எதிர்த்த போதும்
    ‘உண்மை’யே வேண்டும்-என்று
நிலையாக உரைத்து நின்ற
    நேசரும் என்னே நெஞ்சே


தன்கையால் பாடு பட்டுத்
    தன்னுடை உணவை உண்ணல்
பொன்னான வாழ்க்கை-என்று
    புகன்றதைக் கொள்வாய் நெஞ்சே


உழைத்திட வலிமை பெற்றும்
    உழைக்காமல் உண்ணு கின்றோன்
பிழைக்கவன் கருணை இல்லை -
    பேரிடர் என்றார் நெஞ்சே


காட்டிலே விறகொ டித்துக்
    கைநோக உழைப்பை ஏற்ற
பாட்டுக்குப் பெருமை தந்த
    பண்பதும் பெரிதே நெஞ்சே


செருப்பினைத் தைப்ப தும்தான்
    செய்பணி ஆகும்-என்று
விருப்பொடு செய் என்ற
    வித்தகர் அவரே நெஞ்சே


இதந்தரும் சுவனந் தன்னில்
    இன்தொழில் புரிவ தென்றால்
முதன்மையாய் நிற்பேன்-என்றும்
    மொழிந்தவர் அவரே நெஞ்சே


வாயதும் வாழ்வு தானும்
    வையத்தில் மாறா வண்ணம்
தூயநல் அன்பால் வாழ்தல்
    தூயதாம் என்றார் நெஞ்சே

அளக்குங்கால் நிறுக்குங் காலை
    அளபொருள் குறைப்ப வர்க்கே
அளப்பரும் துன்பம் - என்றும்
    அறைந்தவர் அவரே நெஞ்சே


பாத்திமா திருடி னாலும்
    பாத்திடேன்; கைது ணிப்பேன்
மாற்றிடேன் முடிவை-என்ற
    மன்னரும் அவரே நெஞ்சே


மரணத்தில் வீழு முன்னே
    மாண்புறு வாழ்வைக் கொள்ளார்
தரணியில் வாய்ப்பி ழந்த
    தன்மையர்-என்றார் நெஞ்சே


பொருளொன்றே நோக்கம் என்று
    புவியினில் வாழு வோர்கள்
வெறுமையாய் மடிவார்-என்ற
    விளக்கத்தைத் தந்தார் நெஞ்சே

பொருளுடன் பண்பைக் கொண்டு
    பொற்புடன் அன்பைப் போற்றி
அருளுடன் வாழ்க!-என்றே
    அறைந்தவர் அவரே நெஞ்சே


மனத்திற்கு விரோத மின்றி
    மாபொருள் சேர்ப்பீர் என்று
குணமுடன் எடுத்து ரைத்த
    கொண்டலும் அவரே நெஞ்சே


ஒட்டகப் பண்ணை யாளர்
    உயர்வின்றிக் கோழிப் பண்ணை
நட்டத்தில் பங்கேற் காமல்
    நடக்கஎன் றாரே நெஞ்சே


கடமையிற் கடமை நல்ல
    கருணைசேர் வழியில் நின்றே
உடைமைகள் தேடல்-என்ற
    உயர்மொழி தந்தார் நெஞ்சே

அறிவிலான் நோயால் வாடி
    வருந்திடு வோனைக் காணப்
பரிவுடன் அணுகி னாலும்
    துன்பமே என்றார் நெஞ்சே


சுத்தமாய் வாழ்தல் இங்கே
    இறைவனின் வழியாம்; தூய்மை
உத்தம நெறியிற் சேர்க்கும்
    என்றவர் உரைத்தார் நெஞ்சே


செய்செயல் தவறே என்று
    சித்தத்தில் பட்ட தென்றால்
செய்யாது விடுக! என்றே
    செப்பிய தவரே நெஞ்சே


பயிரிட்ட நிலம்த விர்த்துப்
    பாக்கியைப் பகிர்ந்த ளித்தே
உயர்வுடன் வாழ்வ தற்கும்
    உயர்மொழி தந்தார் நெஞ்சே

ஆற்றினுக் கருகி ருக்கும்
    அறியஓர் வாய்ப்பென் றாலும்
ஆற்றுநீர் எடுப்ப தற்கும்
    அளவுகொள்!என்றார் நெஞ்சே


ஆடைக்கும் நெறிகள் சொல்லி
    அமைதியை அளிக்க வந்தார்
பீடுறு வாழ்வை எண்ணிப்
    பார்த்திடல் இன்பம் நெஞ்சே


செல்வத்தால் உள்ளம் மாறிச்
    செருக்குற்றே அலைவோர் தம்மை
வல்லவன் பாரான் - என்ற
    வாய்மையும் என்னே நெஞ்சே


நன்றியில் சிறந்த உள்ளம்
    நல்லதோர் ‘செல்வம்’ என்றே
அன்றைக்கே எடுத்து ரைத்த
    அறிஞரும் அவரே நெஞ்சே

நேர்வழி செல்வோர் எல்லாம்
    நரகத்தை அடையார்-என்ற
சீர்மைசேர் மொழியு ரைத்த
    செம்மலும் அவரே நெஞ்சே


பதுக்கியே வைத்தி ருந்து
    பெருவில பகர்வோ ருக்கே
இதயமே இல்லை-என்ற
    இயல்பதும் என்னே நெஞ்சே


பொருள்தனை விற்ப தற்காய்ப்
    பொய்யதைச் சொல்வோ ருக்கே
அருள்நலம் இல்லை - என்றும்
    அறைந்தவர் அவரே நெஞ்சே


கையூட்டு வழங்கு வோரும்
    கையூட்டு வாங்கு வோரும்
வெய்யதுன் படைவார் என்ற
    வேந்தரும் அவரே நெஞ்சே


நிறைபொருள் செல்வம் அன்று
    நிறைவுளம் செல்வம் - என்றே
அறைந்ததை எண்ணுந் தோறும்
    ஆனந்தம் பெருகும் நெஞ்சே


எதனைநீ உவக்கின் றாயோ
    அதனையே எல்லோ ருக்கும்
இதயத்தோ டுவந்து வாழ்ந்தே
    உயருக! என்றார் நெஞ்சே


இம்மையில் விதைப்ப தற்கே
    மறுமையில் விளைவாம் - என்ற
செம்மொழி ஒன்று போதும்
    சிந்தனை செய்வாய் நெஞ்சே


பெற்றோர் சிறப்பு

இறையவன் மீது அன்பை
    இன்புடன் கொள்வ தென்றால்
நிறைவுடன் பெற்றோர் தம்மை
    நினைத்திடல் வேண்டும்-என்றார்

அன்னையின் அடியின் கீழே
    அமைந்தது சொர்க்கம்-என்ற
பொன்மொழிக் கீடு செய்யப்
    பொன்மொழி உண்டோ? நெஞ்சே


முதியோரை ஆத ரித்து
    முதுமையில் இறைவ னன்பை
இதமுடன் பெறுவீர்-என்ற
    இன்னுரை அறிவாய் நெஞ்சே


நன்மக்கள் பெறுவ தற்கு
    ‘நற்சிந்தை’ வேண்டும்-என்ற
முன்மொழி உணர்ந்தால் இங்கே
    மூர்க்கங்கள் உண்டோ? நெஞ்சே


தாயிக்கும் தந்தை யர்க்கும்
    தகுபணி செய்வோன் சொர்க்க
வாயிலின் வழியே செல்லும்
    வளத்தவன் என்றார் நெஞ்சே


பெற்றவர் உள்ளம் நோகப்
    பேரின்பம் துய்க்கும் மக்கள்
குற்றத்தால் இறைவ னும்தான்
    கோபிப்பான்-என்றார் நெஞ்சே

சிறியோர்க்கி ரங்கா தோரும்
    பெரியோரை மதியா தோரும்
நெறியில்நம் பக்கம் அல்லார்-
    நீசரே என்றார் நெஞ்சே


குழந்தைகள் இடத்தில் அன்பைக்
    கொள்ளுவோர் நரகத் தீயில்
விழுந்திட மாட்டார்-என்று
    விளம்பிய தவரே நெஞ்சே


ஏழைகள் ஏழை யாக
    இருப்பது கூடா தென்றே
வாழையாய் வாழ்வோ ருக்கும்
    வரிவகுத் தாரே நெஞ்சே

பொது நீதி

நேர்மைக்குப் பணிந்தே உள்ள
    நேசத்தைப் போற்றி வாழ்வீர்
பாரகம் ஒன்றாய் ஆகும்
    பாரெனப் பகர்ந்தார் நெஞ்சே


பார்த்தெனை நேசிப் போரில்
    பாராமல் நேசிப் போர்க்கு
நேர்த்தியோ டேழு வாழ்த்து;
    நிச்சயம் என்றார் நெஞ்சே


இற்றைநாள் மக்க ளுக்கும்
    இனிவரும் மக்க ளுக்கும்
உற்றஓர் தூதன்-என்றே
    உரைத்திட லானார் நெஞ்சே


ஏழ்மைஎன் பெருமை என்றார்
    துக்கம்என் துணைவன் என்றார்
ஆழ்ந்திதை நோக்கும் போது
    அற்புதம் விளையும் நெஞ்சே

என்றனை நம்பு வோரின்
    எண்ணத்தை நிறைவு செய்வேன்
என்றநம் நாய கத்தை
    எண்ணிடல் இன்பம் நெஞ்சே


உள்ளத்தில் ஒன்றா வண்ணம்
    ஓதிடும் மொழிகள் தம்மை
வல்லவன் கேளான் என்ற
    வார்த்தையைப் பாராய் நெஞ்சே


குற்றத்தை நெஞ்சில் எண்ணிக்
    குறைவுற்று வருந்து வோர்கள்
குற்றத்தில் மீள்வர்-என்ற
    குணமணி அவரே நெஞ்சே


சொர்க்கத்தைத் திறப்ப தற்குத்
    தொழுகையே சாவி-என்ற
அற்புத அண்ண லாரை
    அடிக்கடி நினைவாய் நெஞ்சே


அல்லவை செய்தோ ருக்கும்
    அகத்தினில் அன்பு கொண்டு
நல்லவை செய்க ! என்று
    நவின்றிட லானார் நெஞ்சே


நன்மையை விளக்கு வோர்கள்
    நன்மையைப் பெறுவார்-என்று
திண்ணமாய் எடுத்து ரைத்த
    தெளிவினைப் பாராய் நெஞ்சே


பகையுற்றோர் சேர்வர் என்றால்
    பொய்யதைப் பகர்ந்த போதும்
தகைமைத்தே-என்று ரைத்த
    தலைவரும் அவரே நெஞ்சே


ஒட்டுக்கே ளாதீர் மற்றும்
    உளவுபா ராதீர் என்றும்
மட்டனை மொழிபு கன்ற
    மன்னரும் அவரே நெஞ்சே


மதுபானம் செய்வோ ரெல்லாம்
    மாதீமை செய்வோர்-என்றே
இதமுடன் உரைத்த வர்தான்
    இதயத்துள் நபியே நெஞ்சே


தன்மீது பொய்யைச் சொல்வோர்
    தழல்நர குக்குச் சென்றே
இன்னலில் உழல்வர்-என்ற
    இயல்பினைப் பாராய் நெஞ்சே


அளவின்றிக் குடிப்ப தாலும்
    அளவின்றி உண்ப தாலும்
நலமுடை இதயங் கெட்டு
    நலிந்திடும் என்றார் நெஞ்சே


புகழுக்குப் போரைச் செய்வோர்
    புவியினில் வீர ராகார் ;
புகழ்ஏக னுக்குச் செய்தோர்
    புனிதரே என்றார் நெஞ்சே

உறக்கத்தை, உணவு தன்னை
    உலகத்தில் குறைத்த மக்கள்
துறக்கத்தில் மண்ணில் மேலோர்;
    தூயவர் என்றார் நெஞ்சே


திக்கிலார் தம்மைக் காக்கும்
    தேசுடை யோர்கள் இல்லம்
முக்கிய மான தென்று
    மொழிந்திட லானார் நெஞ்சே


பேணுநர் அற்றோ ருக்குப்
    பெட்புடன் உதவி செய்வோர்
மாண்புடன் சேர்வர் என்பால்
    மறுமையில் - என்றார் நெஞ்சே


மக்களின் தொண்ட னாகி
    மகிழ்வுடன் உழைத்து வாழ்வோர்
மக்களிற் சிறந்தார் - என்ற
    மன்னவர் அவரே நெஞ்சே

பசியதை உணவ தாக்கித்
    தொழுகையை உறக்க மாக்கி
நசையுடன் தொழுவீர் - என்று
    நவின்றதைப் பாராய் நெஞ்சே


பசியினால் உள்ளந் தன்னைப்
    பரிசுத்தம் செய்வீர் என்றும்
பசிதாக மதனால் வெற்றி
    பாரில்உண் டென்றார் நெஞ்சே


செயற்கரும் செயல்க ளாற்றிச்
    செயல்திற னோடு பாரில்
வியப்புடன் வாழ்வீர் - என்று
    விளம்பிட லானார் நெஞ்சே


உள்ளத்தைத் தொட்டுப் பேசும்
    உயரிய ஆற்ற லோடு
கள்ளத்தை ஒட்டி வக்கும்
    கனிமொழி தந்தார் நெஞ்சே


சொற்போரில் கண்ணி யத்தைச்
    சோர்வின்றிக் கொள்வீர் என்ற
நற்றிற மொழியை ஏற்று
    நடந்திடு வாயென் நெஞ்சே


*ஈமானின் கிளைக ளாக
    இருப்பவை பணிவ டக்கம்
தாமாக இதையு ணர்ந்து
    தழுவுவீர் - என்றார் நெஞ்சே

*ஈமான் - இறை நம்பிக்கை. பணிவும் அடக்கமும் இறை நம்பிக்கையின் பேரில் வரக் கூடிய நற்குணங்களாகும்.


வாக்காலும் செயல தாலும்
    வருத்தத்தை ஊட்டா தோரே
நோக்கினில் ‘முஸ்லிம்’ - என்ற
    நுண்மையைப் பாராய் நெஞ்சே


மக்களுக் காக இங்கு
    மாண்புடன் பணிகள் செய்வோன்
மக்களின் தலைவன் - என்ற
    மணிமொழி பாராய் நெஞ்சே


நிலையிலா உலகில் நீஒர்
    நில்லா விதேசி - என்றே
விலையிலா மணியைப் போன்ற
    விளக்கத்தைத் தந்தார் நெஞ்சே


மனிதனின் உதவிக் காக
    மனத்தினால் நன்றி சொல்லான்
புனிதனாம் இறைவ னுக்கும்
    பொய்யனாம் என்றார் நெஞ்சே


சீற்றத்தால் அறிவி ழக்கும்
    செம்மையில் நீதி மான்கள்
மாற்றங்கள் உரைத்தல் தீது ;
    மாறது என்றார் நெஞ்சே


இறைவனைப் பார்ப்ப தற்கிங்
    கியலாத போதும் நம்மை
இறையவன் பார்ப்பா னென்றே
    இயம்பிட லானார் நெஞ்சே

உயிரது கண்கள் முன்னம்
    உதிப்பதோ? இல்லை, ஆனால் -
உயிருண்டே என்ப தைப்போல்
    உயரிறை உள்ளான் நெஞ்சே


நீதியைக் காப்போ ரெல்லாம்
    நேர்மையைக் கொள்வா ராயின்
கோதிலா இறைவன் ஆங்கே
    குடிபுகுந் திடுவான் நெஞ்சே


காயையும் கனிய வைக்கும்
    கனிவுடை மொழியைக் கொண்ட
நாயகர் பெருமை சொல்ல
    நாளொன்று போதா நெஞ்சே


மானுடம் வென்ற தென்ற
    மாண்பினைத் தேடித் தந்த
தேன்மொழி நபியை வாழ்த்தித்
    தெளிவெலாம் பெறுவாய் நெஞ்சே

இந்த நூலை-இணையற்ற பொன்னூலை-இசைத்து மகிழும் பெரும் பேறு பெற்ற புண்ணியச் சீலர்களே! இந்த 11வ இறுதிப் பகுதியைக் குரல் ஒத்தவர்கள் இருவர் இருவராக அமர்ந்து - இரண்டு இரண்டு கவிதைகளாக - புவி புகழும் புர்தா ஷரீபை ஓதும் வகைபோல் உள்ளச்சமும் உயர்ந்த பக்தியும் கொண்டு ஓதிவருவீர்களாக!

திருமக்காவில் - புனிதமிக்க ‘கஅபா’ ஷரீபில் வைத்து ஓதி முடிக்கப்பெற்றதும் பெருமானாரின் பெருமைக்குரிய சன்னிதியில் சமர்ப்பணம் செய்யப் பெற்றதுமான பாக்கியமிக்க இப்பாடல்களை ஒவ்வொரு இல்லத்திலும் ஓதி ஓதி மகிழ்வீர்களாக! குடும்ப சகிதமாகப் பாடிப் பாடிப் பரவசம் அடைவீர்களாக! சித்த சுத்தியோடு ஓதப்படும்போது - அதன் வாயிலாகப் பெறற்கரும் பெரும் பேறனைத்தும் வாய்க்கும்; வணிகம் வளம் பெரும்; தொழில் துலங்கும்; விவசாயம் வெற்றி பெரும்; உடல் நலம் பெறும்; உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

திங்கள் இரவு, வெள்ளி இரவு, மற்றும் பரா அத் இரவு, மிஃராஜ் இரவு, பத்ரு சஹாபாக்களின் தினமான ரம்ஜான் 17வது இரவு போன்ற நன்னாட்களிலெல்லாம் 175 செய்யுட்களைக் கொண்ட இந்தச் சிறந்த பகுதியைச் சிந்தை கனிய சேர்ந்திசைத்து வருவீர்களாக!

பெருமானார் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் அணி அணியாக இல்லந்தோறும் அமர்ந்து - நறுமணம் கமழ, பூச்சரங்கள் இலங்க இந்தப் பகுதியை இசைத்து மகிழ்வீர்களாக! வானம் பொய்த்த வேளையிலும் வறட்சி மிகுந்த நாட்களிலும் நோன்பிருந்து இறைவனிடம் இறைஞ்சி இப்பகுதியை உள்ளச்சத்துடன் உருக்காம இசைத்து வந்தால் இன்ஷா அல்லாஹ் நற்பயன் ஏற்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா தனது ஹபீபாம் நபிகள் நாயகம் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - அவர்களின் புகழ் இசைப்பவர்களுக்கு என்றும் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!