ஒன்று பரம்பொருள்;
நாம் அதன் மக்கள்
எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும்
பரம்பொருளை
நினைந்து, அறம்
தழைக்கப் பாடுபடும்
வாழ்வே பக்தி
நெறியாகும்.
பக்தி செய்து
வாழக் கற்றுக்கொண்ட
பிறகுதான் மனிதன்
முழு மனிதன் ஆகிறான்.
பக்தி ஒன்றால்தான்
மனிதனின் சித்தம்
தெளியும். அவன்
செய்கை அனைத்திலும்
செம்மை பிறந்திடும்.
இந்த உண்மையைச்
சமுதாயம் மறந்து
விடாமல் இருக்கவும்
பக்தி நெறியில்
தளர்ச்சி ஏற்படாதிருக்கவும்
அவ்வப்போது
ஞானிகள் உலகில்
அவதரிக்கிறார்கள்.
தனி மனிதனுக்கும்
சமுதாயத்திற்கும்
உள்ள கடமைகளையும்
உரிமைகளையும்
ஞாபகப்படுத்துகிறார்கள்.
காலத்தை வென்ற
நபிகள் நாயகம்
எல்லோரும்
இன்புற்றிருக்க
வேண்டும் என்ற
தூய எண்ணத்தோடு
மெய்யொளி
காட்டிச் சென்ற
மேதை. உலக மக்கள்
எல்லாரும் ஓர்
குடும்பத்தினர்
என்ற நினைப்போடு,
வாழும் நெறியைக்
காட்டிச் சென்ற
நபிகள் நாயகத்தை எண்ணற்ற மக்கள்
இதயத்தில்
இருக்கையாக்கி
வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக மகான்களின்
வாழ்க்கையை
அறிந்துகொள்ள
வேண்டும் என்ற
ஆர்வம் அனைவருக்கும்
உண்டு. அந்த வகையில்
நபிகள் நாயகத்தை
அறிந்கொள்ள
விரும்புவோருக்கு
உதவியாக, மௌலவி
பாஜில் ஜீ. எம்.
எஸ். ஸிராஜ்
பாக்கவி அவர்கள்
‘நெஞ்சில் நிறைந்த
நபிமணி’ என்ற
நூலை எழுதியிருப்பது
பாராட்டத்தக்கது.
இறைவனைக் குறித்து
அவர் பாடியிருக்கும்
பாடல்கள் அவருக்குள்ள
தமிழிலக்கிய
அறிவைப் புலப்படுத்துகின்றன.
இஸ்லாமிய
நெறி பற்றியும்
நபிகள் நாயகம்
திருமறையை மக்களுக்கு
உரைக்கும் பாங்கு
பற்றியும் நாயகத்தின்
உள்ளத்தை மாற்றச்
சென்றவர்கள்
உள்ளத்தைப்
பறிகொடுத்துவந்த
சிறப்பு பற்றியும்,
நாயகம் சந்தித்த
எதிர்ப்பு பற்றியும்
ஆசிரியர் உருக்கமாகப்
பாடியிருக்கிறார்.
எவரும் எளிதில்
உணர்ந்து கொள்ளக்
கூடிய வகையில்
இனிய எளிய
பாடல்களால்
ஆனதே இந்நூல்.
நூலாசிரியருக்கு
என் பாராட்டுதல்கள்.
|