அதுகண்டு
அன்பர் அடியார்களுக்கு அளிக்கத் தாம் வைத்திருந்த
கோவணங்களை எடுத்து ஒன்றொன்றாகப் பலவும் இடவும் தட்டு நேர்பெறாது
நின்றது. அன்பர் அதிசயித்து அதன்மேலும் பல பட்டுக்களையும் பலவகைத்
துகில்களையும் அநேக கோடிகள் இட்டனர். அப்போதும் மறையவர் தட்டுத்
தாழ்ந்தே நின்றது.
நாயனாரது அன்பிடும் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்ற
தட்டு
அருளொடு தாழ்வது வழக்கே யன்றோ?
பின்னர் அன்பர், மறையவரது இசைவுபெற்றுப் பொன்
வெள்ளி
மணிகள் முதலாகத் தமது தனங்கள் பலவும் இட்டனர். இடவும் அத்தட்டு
மேலே நின்றொழிந்தது. இறைவனது நான்மறைப் பொருணூற் கோவணத்துக்கு
இவ்வுலகில் அமர்நீதியார் தனமேயன்றிப் புவனம் யாவையும் நேர்பெறா
என்பதும் அதற்கொரு புகழாமோ? இதுகண்ட அமர்நீதியார், தம்மதாக
எண்ணியவற்றை எல்லாம் இட்டொழிந்தமையின், தாமும் தமது மனைவியாரும்
மைந்தனாரும் துலையில் ஏறப் பெறவேண்டுமென்று மறையவரை
இறைஞ்சினார். அவரும் இசைந்தனர். அவ்வாறே மூவரும் அத்தனித்
துலையை வலங்கொண்டு நின்று இறைவனது திரு நீற்று மெய்படிமைத்
திறத்திலே நாங்கள் பிழைத்திலோம் என்பது உண்மையாயிருப்பின் இத்துலை
நேர்நிற்க என்று திருநல்லூரிறைவரை வணங்கித், திருவைத்தெழுத்தை ஓதித்
தட்டின்மீதேறினார்கள். பிரானது கோவணமும் அன்பு குறைபடா அடிமைத்
தொண்டும் ஒப்பாவன. ஆதலின் அத்துலை நேர்நின்றது.
மண்ணவர்
அதிசயித்துத் துதித்துத் தொழுதனர். விண்ணவர் கற்பகப் பூமழை
பொழிந்தனர். மறையவராய் வந்த இறையவர் மறைந்து ஆகாயத்திலே
தேவியாருந் தாமுமாகக் காட்சி கொடுத்தனர். அது கண்டு துலைமேனின்ற
அன்பரும் மைந்தரும் மனைவியாருந் துதித்தனர். அவர்கள் அருள் பெற்றுத்
தம்மைத் தொழுதுகொண்டேயிருக்கும் அழிவில்லாத சிவபதம் கொடுத்து ஐயர்
எழுந்தருளினார். நாயனாரும் மனிவியாரும் மைந்தரும் இறைவனது
சிவபுரியினை அணைந்தனர்.
தலவிசேடம்
: - (1) பழையாறை - இது இந்நாயனாரது அவதாரத்
தலமாம். சந்திரன் பூசித்த தலம். இதில் வடக்கேயுள்ளது பழையாறை
வடதளி என்ற தனித் தலம்; மேற்கே உள்ளது ஆறைமேற்றளி
என்ற
தனித்தலம். வடதளியிலே சுவாமி சந்நிதியைச் சமணர் மறைத்தனர். அதனை
அறிந்த அப்பர்சுவாமிகள் சுவாமியை நேரே வெளிப்படத் தரிசித்தாலன்றி
அவ்விடம் விட்டுப்போவதில்லை என்று உண்ணா நோன்பு கிடந்தனர்.
இறைவர் ஆணையின்படி அரசன் அடையாளங் கண்டு சமணர் செய்திருந்த
மறைப்புக்களை நீக்கிச் சுவாமியின் திருவுருவத்தை வெளிப்படுத்தி, அப்பர்
சுவாமிகளைத் தரிசனம் செய்வித்துச், சமணர் குலந் தூரறுத்தான். இவ்வரலாறு
அப்பர் சுவாமிகளது பழையாறை வடதளித் திருக்குறுந்தொகைப் பதிகத்திலும்,
அவர் புராணத்து 294 முதல் 300 வரையுள்ள திருப்பாட்டுக்களிலும்
விரிவாய்க் காணப்படும். அங்க மோதியோ ராறை
மேற்றளி நின்றும்
போந்துவந்து என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருப்புறம் பயத்
தேவாரத்திலே மேற்றளித்தலத்தைப் பாடியிருத்தல் காண்க. வடதளியிற்
காமதேனுவின் புத்திரி விமலி பூசித்தனனாதலின்
அம்மையார் விமலநாயகி
எனப் பெயர் பெறுவர். மேற்றளியிற் காமதேனுவின் மற்றொரு புத்திரி சபளி
பூசித்தனள். அங்குஅம்மையாரின் பெயர் சபளநாயகி.
காமதேனுவின்
இன்னொரு புத்திரி நந்தினி பூசித்த முழையூர்
என்ற வைப்புத்தலமாகிய
மாடக்கோயில் அடுத்துள்ளது.
தாரேச்சுரம்
என்னும் தென்னிந்திய இருப்புப்பாதை நிலயத்தினின்று
தென்மேற்கில் இரண்டு நாழிகையளவில் உள்ளது திருப்பட்டீச்சுரம்.
அதனையடைந்து கிழக்கே ஒரு நாழிகை சென்றால் முழையூரை
அடையலாம்.
இதற்குக்
|