7.
நான்மறைப் பொருணுற் கோவணத்திற்குப் புவனம் யாவையும்
இடினும் நேர்நில்லா. ஆயின் அன்பிற் குறைபடா அடியவர்
அடிமைத்தொண்டு ஒன்றுமே அதனுக்கு ஒப்பாகும்.
8. யாவர் யாவர் எவ்வெத் துறைகளினின்று இறைவனுக்குப்
பொய்யிலா
மெய்யடிமை செய்கின்றார்களோ அவ்வவர்க்கும் அவ்வத் துறைகளே
இறைவனுலகம் புகுவிக்கும் வழிகளாக அமைவனவாம். இங்கு நாயனாரின்
வாணிபத் தொழிற்கருவியாகிய துலையே அன்பினை அளந்து காட்டவும்,
இறுதியில் விமானமாகி அவரைச் சிவபுரியிற் செலுத்தவும் கருவியாயினமை
காண்க.
9. தம்முடையனவென்று கொண்ட எல்லாப் பொருள்களையும்
ஒப்புக்
கொடுத்தும் தம்மை ஒப்புக் கொடாத அளவில் இறைவனருள் வெளிப்படாது.
இங்கு நாயனார் தமது பொருட் சார்புகளை எல்லாம் தந்த பின்னும்
நேர்நில்லாத துலைத்தட்டு, உயிர்ச் சார்பாகிய மனைவியாரையும் மகனாரையும்
தம்மையும் இறைவன்பால் ஒப்புவித்த பின்னரே நேர்நின்று திருவருள்
வெளிப்பட்டது காண்க.
10. இங்கு நாயனார் சரிதத்திற் கண்டபடியே இறைவன்
எல்லா
வுயிர்களையும் துலையில் நிறுத்திக் கண்டு, தட்டொக்கமாறி, அன்பு
மேலீட்டால் அவை ஒத்த பின்னரே பின்னுலகடையச் செய்வன். இஃது
அவன் செய்யும் வாணிபத்தின் உள்ளுறை.
11. புண்ணியச் சிவதலங்களிலே திருமடங் கட்டுவித்தலும்,
புண்ணிய
காலங்களில் அன்போடும் அடியார்களுக்கு அமுது துணி முதலியன
அளித்தலும் பெருஞ் சிவபுண்ணியங்களாம். இவை சிவபெருமானிடத்துப்
பதிந்த அன்புடனே செய்யப் பெறுதல் வேண்டும். இவ்வாறு செய்யும் பேறும்
சிவபெருமா னருளினாலே வருவதாம். சிவனடியார்களிடத் தன்பில்லாதார்
சிவனிடத் தன்புசெய்தல் பயனில்லாதது. இவ்வுண்மைகளைச் சிவாகமங்களும்,
சிவதருமோத்தரம், சிவபுண்ணியத் தெளிவு, வாயு சங்கிதை முதலிய
சாத்திரங்களும் வலியுறுத்தும்.
12. தம்மிடம் ஒப்புவித்தது எந்தச் சிறு பொருளாயினும்
அதனைப்
பாதுகாத்துத், திரும்ப, ஒப்புவித்தவர்பால் ஒப்புவித்தல் யாவர்க்கும் ஒப்ப
அமைந்த கடமையாம். ஒப்புவித்த பொருள் எதுவேயாயினும் அதனை
அபகரித்தல் - கெடுத்தல் - போக்குதல் மிகவும் தகாத செயலும்
பெரும்பிழையுமாம். அப்பிழை நேரின் எதனைக் கொடுத்தேனும்
அப்பிழையினை ஈடுசெய்து போக்கிக் கொள்ளுதல் உயர்ந்தோர் செயல்.
இங்கு ஒரு கோவணத்திற்காக நாயனார் தமது அளவற்ற செல்வ
முழுவதையுமே யன்றித் தம்மையும் ஒப்புக் கொடுத்தமை காண்க. ஒப்புவித்த
பொருளை மாறுபடுத்தல், அபகரித்தல் முதலிய இந்நாட் தண்டச் சட்டத்தினும்
பெருங்குற்றங்களாக விலக்கப்படுவன.
அமர்நீதி
நாயனார் புராணம் முற்றும்
|