பக்கம் எண் :


1074 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

மறலிபட்ட பாட்டையுன்னிப், பார்க்கிலன்பர்க் கென்னபயங்காண் பராபரமே"
என்ற தாயுமானார் பாடலும், பிறவும் கண்டுகொள்க.

     குங்குலியத் தூபம் - குங்குலியம் என்பது தூளாக்கி அனலிலிட்டுப்
புகைத்தலால் நன்மணங் கமழும் ஒரு வாசனைப் பண்டம். இது
மலைக்காடுகளில் விளையும் ஒருவகை மரப் பிசின். இதனைக் குக்குலு -
குற்குலு என்பர் வடமொழியாளர்.

     செற்றார்க்குக் கமழ்ந்த குங்கிலியத் தூபம் - இறைவனது
வழிபாட்டுக்கு உரியதாய்ச் சிவாகமங்களில் விதித்த குங்குலியத் தூபம்.
திருவிளக்கும் தூபமும் வழிபாட்டுக்கு இன்றியமையாத பொருள்கள். இவற்றை
விதிப்படி உள்ளன்போடு இடுவோர்க்கு இறைவர் அருள்கின்றார் என்பது
"விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லோர்க்குக், கரும்பினிற்
கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே" என்று இத்தலத்
திருநேரிசையினுள்ளும் "சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலிற்,
குங்குலியப்புகைக் கூட்டென்றுங் காட்டி" என்றுதிருவாரூர்த்
திருவிருத்தத்துள்ளும் அப்பர் சுவாமிகள் எடுத்துக் காட்டியருளினர். இங்குத்
தூபத்தைக் குறித்தது இந்நாயனாரது சரிதவாசங்கமழ்வது குறிக்க. சிறப்பாய்
விதித்த ஐவகைத் தூபங்களுட் குங்குலியம் ஒன்று. அவை "குந்துருகந், துய்ய
பெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை, யெய்தியசந் தனமினிகுக்குலுவு
மெனவறிக" என்ற சிவதருமோத்திரத்தா லறிக. "சலம்பூ வொடு
தூபமறந்தறியேன்" என்றது முதலிய திருவாக்குக்கள் காண்க.

     சாலவே நிறைந்து விம்ம - மிக்க செறிவும் பரப்பும் குறித்த ஒரு
பொருட்பன்மொழி. விம்முதல் - நிறைவாகி மேற்கிளம்புதல்.

     தலைநிற்றல் - அதுவே சிறந்த செய்தொழிலாக முனைத்தல்.

     உள்ளார் - சிவத்திருப்பணி செய்தலின் உளராயினார். அவ்வாறு
சிவப்பணி எதுவும் செய்யாத ஏனையோர் பிறந்தும் பிறவாதவர் எனப்படுவர்
என்பது குறிப்பு. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே", "உளரானார்
உளரானார்" (திரு. நா. புரா - 16) முதலியவை காண்க.

     மறையோன் போற்ற - என்பதும் பாடம். 6

837.



கங்கைநீர் கலிக்குஞ் சென்னிக் கண்ணுத லெம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்ல
வங்கவ ரருளி னாலே வறுமைவந் தடைந்த பின்னுந்
தங்கணா யகர்க்குத் தாமுன் செய்பணி தவாமை யுய்த்தார்.



7

     (இ-ள்.) கங்கைநீர் ... எம்பிராற்கு - கங்கையின் நீர் ஒலித்தற்
கிடமாகிய திருமுடியும் நுதற்கண்ணுமுடைய எமது சிவபெருமானுக்கு; பொங்கு
... செல்ல - மேன்மேற் செறிந்து பரந்து கிளம்பும் குங்குலியத் தூபத்தைச்
சிறப்புப் பொருந்தி விளங்கும்படி தவிராது பேணிச் செலுத்திவந்தாராக;
அங்கு - அந்நாளில்; அவர் ... பின்னும் - அவருடைய திருவருளினாலே
வறுமை வந்தடையவே அதன்பின்னரும்; தங்கள் ... உய்த்தார் - தமது
பெருமானுக்குத் தாம் அவ்வறுமை வருமுன்பு செய்து வந்த
அத்திருப்பணியைத் தவிர்தலில்லாது முன்போலவே செய்து வருவாராயினர்.

     (வி-ரை.) கலித்தல் - ஒலித்தல். பெருவெள்ள மாய்ப் பாய்ந்திரைத்து
வந்த கங்கை இறைவனது அவிர்சடைமுன் கண்டளவில் மிகைதவிர்ந்து
சிறிதாயடங்கிற்றாகலின் பேரிரைச்சல் செய்யும் இயல்பினையுடையதாம்
என்பது. விரிந்து ஒடுகின்ற நீரைச் சிறைசெய்தபோது பேரொலி செய்யும்
என்க.

     நீர்கலிக்கும் சென்னி - கண்ணுதல் - நுதற்கண் கோபத்தையும்,
நீர்கலித்தல் பிரசாதத்தையும் குறிப்பன. இங்குக் காலனை யுதைத் துருட்டிய
நிக்கிரகமும், மார்க்கண்டேயரைக் காத்த அனுக்கிரகமும் செய்த ஒருவர்
என்பது குறிப்பாம்.