பக்கம் எண் :


1086 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பொன்குவை நெல் அரிசி முதலானவற்றைக் கண்டபோது அவை எம்பிரான்
அருளாமென்றே உணர்ந்து அவற்றை இருகரங்குவித்துப் போற்றினார் (846)
என்றதும் காண்க.

     கங்கை அலைபுனற் சென்னியார் - 841 முதலியவை பார்க்க.
அருள் மறுத்து இருக்க அஞ்சி
- அதிகாலையாதலின் தூபத்திருப்பணியை
நிறைவேற்றாது செல்வதற்கு மனமில்லையாதலானும், மனையில் மூன்று பகல்
உணவில்லமையாலும் நெற்கொள்ளக் கொணர்ந்த திருமங்கிலியத்தினையும்
குங்குலியப் பொதிகொண்டு சேமித்து விட்டமையாலும், பொன் - நெல் -
அரிசிமுதலிய வளங்களைத்தந்து அம்மையார்க்கு அறிவித்தபடி இறைவன்
இவர்க்கு அறிவியாமையாலும், மனையிற் சென்று பாலடிசில் உண்ண
ஒண்ணாதென அறிதலால் இங்குத்திருக்கோயிலில் இருத்தலையே
விரும்பினார் நாயனார்; ஆனால் அருளைமறுத்து அவ்வாறு இருத்தற்கு
அஞ்சினர் என்க. இருக்க - மனையிற் செல்லாது திருவீரட்டானத்தில் இருக்க.
பணி தலைமிசை மேற்கொண்டு
- என்க. மேற்கொள்ளுதல் - தாங்குதல்.
தலைமிசை மேற்கொள்ளுதல்
- தலைமையாகப்பூண்டு அதன்படி நின்று
கடனாற்றுதல். பணி - பணிக்கப்பட்டதனை.

     சங்கரன் கோயில் - திருவீரட்டானம். சங்கரன் - சுகத்தைச்
செய்பவன் - சிவபெருமான். இங்கு நாயனாரது துன்பமெல்லாம் போக்கி
யின்பஞ்செய்கின்றாராதலின் இப்பெயராற் கூறினார். இங்கு
வீரஞ்செய்தமையாற் காக்கப்பட்ட மார்க்கண்டருக்கும் உதைபட்ட
காலனுக்கும் ஒருங்கே துன்பநீக்கமும் இன்ப ஆக்கமுஞ் செய்ததனையும்
சிந்திக்கும்படிச் சங்கரன் என்றதும் காணத்தக்கது.

     மலைநிகர் மாடம் - மலைபோன்ற பெரியமாடங்கள் என்றபடி.
வீதிமருங்கு - வீதியில். இதனால் நாயனாரது திருமனை மாடவீதியில்
இருந்ததென் றறியப்படும். கீழை மாடவீதியினை அடுத்த உள்வீதிப்பக்கம்
அந்தத் திருமனை இருந்ததாகக் கர்ண பரம்பரையாக ஓர் இடம் இன்றும்
சுட்டி வழங்கப்படுகின்றது.

     "உன்தன் தடநெடு மனையில் நண்ணீ" என்று இறைவர் அருளிய
சிறப்புப் பெற்றதாதலின் ஆசிரியர் தாமும் மாடவீதி மருங்கு தம்மனை
என்று சிறப்பித்துக் கூறினார்.

     சார்ந்தார் - நற்சார்பு என்ற சிவஞானநூற் கருத்தினை நினைவூட்ட
இச்சொல்லாற் கூறினார். 18

849.



இல்லத்திற் சென்று புக்கா ரிருநிதிக் குவைக ளார்ந்த
செல்வத்தைக் கண்டு, நின்று, திருமனை யாரை நோக்கி,
"வில்லொத்த நுதலா! யிந்த விளைவெலா மென்கொ?"
                                      லென்ன
"அல்லொத்த கண்ட னெம்மா னருடர வந்த" தென்றார்.



19

     (இ-ள்.) வெளிப்படை. நாயனார் தமது திருமனையிற்சென்று உள்ளே
புகுந்தார். பெரிய நிதிக்குவைகளோடு ஏனைச்செல்வங்களை யெல்லாங்கண்டு,
நின்று, தமது திருமனைவியாரை நோக்கி, "வில்போன்ற நெற்றியையுடைய
பெண்ணே! இந்த விளைவுகள் எல்லாம் வந்தவாறு என்ன?" என்று கேட்க,
அவர் "கரிய இருள்போன்ற நிறம்பொதிந்த திருநீலகண்டனாகிய எம்பிரான்
அருள்தர இச்செல்வம் வந்தது" என்று கூறினார்.

     (வி-ரை.) இல்லம் - வீடு. அம் - சாரியை. இருநிதிக் குவைகள்
ஆர்ந்த செல்வம்
- பொன் குவைகளும் நெல்லும் அரிசியும் முதலாயின
வளங்கள் செல்வம் எனப்பட்டன. குறைகளோடு நிறைந்த. ஆர்தல் -
நிறைதல்.

     திருமனையாரை - இறைவனது திருவருளினை முன்னர்ப்பெற்று
விளங்கினார் என்றும், அவரது கற்பின் பெருமையும் அவர் தந்த
தாலியின்சிறப்புமே இச்சரித விளைவுக்குக் காரணமாயின என்றும் குறிக்க
இவ்வாறு கூறினார். அவர் தந்த திருத்தாலி மீட்டும் அவரது கழுத்தில் வந்து
பொருந்திப் பிரகாசித்தது என்பதும் குறிப்புப் போலும்.