பக்கம் எண் :


1090 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     பட்டினியிருந்த அவரது பசிதீர்க்கும் ஆர்வமிகுதியும், இவ்
விளைவுகட்கும் திருவருளுக்கும் அவரது அயரா அன்பே காரணம் என்று
கொண்டமையும் அம்மையாரது மனத்தில் மிக்கு நின்றமைபற்றியும்

     கண்ணுதற்கு - கணவனார் என்றதற்கும் அன்பர் என்றதற்கும்
இடையில் கண்ணுதல் அமரக் கூறியது அவரது அன்பே இருதிறத்தாரையும்
இடைநின்று பிணைத்து ஒட்டிநிற்பதாம் என்பது குறித்தது.

     கண்ணுதற்கு அன்பர் - மாகேசுரர்கள். அன்பரோடும் -
தனியுண்ணாது சிவனடியார்களோடு இருந்து உடனுண்ணுதல் வேண்டு
மென்னும் உண்மை உத்தராபதியாராய் வந்த சிவபெருமான் றிருவாக்கினாற்
சிறுத்தொண்ட நாயனார் புராணத்துள் விரிக்கப்படுதல் இங்கு நினைவுகூர்க.

     விதிமுறை - மாகேசுரபூசைக்குச் சிவாகமங்களில்விதித்த முறைப்படி.
இதனை 443-ல் பார்க்க.

     தீபம் ஏந்தி - தலைமைபற்றித் தீபத்தைக் கூறினாரேனும் இனம்பற்றி
ஏனைத்தூப முதலியனவும் உடன்கொள்ளப்படும். அதுநேரம்
இரவுக்காலமாதலின் விதிப்படி தீபமேற்றினார் என்றுரைப்பாருமுளர்.

     மேவும் - திருவருளாற் பொருந்திய வளங்களாலாகிய.

     இன்அடிசில் ஊட்ட - 442 - 443 பார்க்க. ஊட்ட - தாய்
ஊட்டுவதுபோல் அன்புகூர ஊட்டுதல் வேண்டுமென்பது விதி.1

     அது நுகர்ந்து - அது - அவ்வாறூட்டிய இனிய அடிசில். நுகர்தல்
- உண்ணுதல், மட்டிலடங்காது மனங்களி கூர்தலுங் குறித்தது.

     இன்பம் ஆர்ந்தார் - "இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக" (847)
என்று இறைவன் அருள்புரிந்தாரெனவே அது இறைவனருளாகவும் மாகேசுரப்
பிரசாதமாகவும் பெற்றதாகலான் நீங்கா நிறைவாகிய இன்பம் ஆரத்துய்த்தனர்.
இவ்வின்பம், உண்டபின் சின்னேரத்திற் கழிந்து பின்னும் பசியின் துன்பங்
கூட்டுவதாகிய வெறும் உணவின் இன்பமன்று. 21

852.



ஊர்தொறும் பலிகொண் டுய்க்கு மொருவன தருளி னாலே
பாரினி லார்ந்த செல்வ முடையராம் பண்பி னீடிச்
சீருடை யடிசி னல்ல செழுங்கறி தயிர்நெய் பாலா
லார்தரு காதல்கூர வடியவர்க் குதவு நாளில்,



22

     1இவ்வாறு பூசித்து ஊட்டப்பெறும் அன்பர் என்ற மாகேசுரர்களாவார்,
தேசிகர், நிருவாண தீக்கைபெற்றோர், விசேட தீக்கைபெற்றோர், சமயதீக்கை
பெற்றோர் என நான்குவகைப்படுவர். இவர்களை விதிப்படி பூசித்துத்
திருவமுது செய்வித்தல் மாகேசுரபூசை எனப்படும். மகேசுரனை
வழிபடுவோர் மாகேசுரர்களாவார். சிவதீக்கை பெறாதோர்
மாகேசுரர்களாயிருத்தற்குத் தகுதியுடையரல்லர். சிவனையும், குருவையும்,
சமயத்தையும், சிவசாத்திரங்களையும் நிந்தை செய்வோரும், சிவதிரவியத்தை
அபகரித்தவர்களும் நித்தியகருமங்களை விட்டவர்களும், மாகேசுரபூசைக்குத்
தகுதியுடையரல்லர். மாகேசுரர்களைப் பூசித்து அமுதூட்டுவோர்
சிவபதங்களில் அடைகுவர். ஏனையோர்க்கு அமுதூட்டுதல் அன்னதானம்
என்ற பெயர்பெற்றுப் பசு புண்ணியமேயாகி நற்போகங்களுக்கு ஏதுவாகிச்
சுவர்க்கலோக முதலியவற்றைத் தருமேயன்றிச் சிவபுண்ணியமாகாது;
சிவபதம்பெறத் துணையும் செய்யாது. சமயம், விசேடம், நிருவாணம்,
ஆசாரியாபிடேகம் என்னும் நால்வகைத் தீக்கை பெற்றோர்களை வைத்து
மாகேசுரபூசை செய்வோர் நால்வகைச் சிவபதங்களைப் பெறுவர். திருஞான -
புரா - 111 - முதலியவை பார்க்க.