பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1111

 

1 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளின் ஆணையின்படி
காசியாத்திரை செய்து காசியில் நவாப்பினால் தமக்குக்கிடைத்த பெரும்
பொருள் கொண்டு இப்போது குமாரசுவாமி மடம் (கேதாரகட்டம்) என்று
விளங்கும் திருமடத்தைத் தாபித்தனர். ஸ்ரீமத் ஆதி குமரகுருபர சுவாமிகளின்
வழிவழி 6 பட்டம்வரை காசியில் உள்ள மடம் ஒன்றே யிருந்தது. 6-வது
பட்டத்தில் வந்த ஸ்ரீமத் தில்லைநாயகத் தம்பிரான் சுவாமிகள் இத்தலத்திற்கு
வந்து இங்குப் பெருமை பெற்று விளங்கும் "காசிமடத்" தைத் தாபித்து
அதற்குத் தாம்தேடிய பெரும் பொருளால் விளைநிலமும் தேடினர்.
(இவர்காலம் 1720 - 1756 என்ப.) இவரோடு முன் ஆறுபட்டம்.
இத்திருமடத்தின் மரபின் இவர் பின் பட்டத்து வந்த அதிபர்களும் இவ்வாறே
தாம்தாம் பெரும் பொருளீட்டினர். இவ்வாறு இற்றைஞான்று இத்திருமடமும்
காசியில் உள்ள பெருமடமும் சிறப்புற்று விளங்குகின்றன. இதன் வழிவழி
வரும் அதிபர்கள் "காசிவாசி" என்ற பட்டத்துடன் விளங்குவர். இந்நாள்
இதன் அதிபராக விளங்கும் ஸ்ரீமத் காசிவாசி சுவாமிநாதத் தம்பிரான்
சுவாமிகள் அந்தப்பரம்பரையின் வந்த பல அரிய தமிழ் நூல்களையும்,
தொல்காப்பிய முதலிய பழந்தமிழ் நூல்களையும் அச்சிட்டும், சென்னைச்
சர்வகலாசாலைத் தமிழ் வித்துவான் தேர்தலில் முதற்றரம் முதற்றரமாகத்
தேர்ச்சி பெற்றோர்க்கு ஆண்டுதோறும் ஆயிரம் வெண்பொற்காசுப் பெரும்
பரிசு அளித்தும் தமிழ்பரப்பி ஊக்கம் தந்து உதவிவரும் அரிய முயற்சிகள்
தமிழுலகம் போற்றிக் காணத்தக்கன. இத்தலபுராணம் தமிழ்ச்செய்யுளால்
இயற்றியவர் செஞ்சடைவேதிய தேசிகர். இது அச்சில் வரவில்லை.
இத்தலபுராணத்திற் குங்குலியக் கலயநாயனார் சரிதம் சிற்சில மாறு
பாடுகளுடன் பேசப்படுகின்றது. இப்புராணம் வடமொழியில் பிரமபுராணம்
69-வது அத்தியாயத்தில் நந்திசனற்குமார சம்வாதத்தில் 350 சுலோகங்களிற்
கூறப்பட்டுள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பில் புராண வரலாறு முதல்
குங்குலியக்கலயர் சருக்கம்வரை 19 சருக்கங்களில் 889 செய்யுட்களில்
அமைத்துள்ளது.

     இத்தலத்துச் சுவாமிபெயர் - செஞ்சடை வேதியர் - சடையப்பர்.
இப்பெயர் திருஞானசம்மபந்தரது இத்தலத்தேவாரத்தில் முதற்றிருப்பாட்டிற்
போற்றப்படுதல் காண்க. அம்மையார் - பெரிய நாயகியார். தல விநாயகர்.
ஆண்ட விநாயகர். தலவிருக்கம் - பனை. தீர்த்தம் - பொய்கை என்னும்,
பிரமதீர்த்தம், மண்ணியாறு முதலியன. பொய்கை திருப்பதிகம் 10-வது
பாட்டிற்போற்றப்பட்டது. இது கோயிலுக்குக் கீழ்பாகத்திலுள்ளது.
மேற்குநோக்கிய சந்நிதி, பதிகம் 1. இதனை, ஆடுதுறை நிலயத்திலிருந்து
வடக்கில் கற்சாலை வழியாய் 6 நாழிகையளவில் அடையலாம். வண்டி
வசதிகள் உண்டு.


கற்பனை:-

     (1) சிவசந்நிதியில் உண்மையன்புடன் விதிப்படி நறுமணமுடைய
குங்குலியத்தூபம் கமழ்வித்தல் சிவபுண்ணியமாம்.

     2. அத்திருப்பணிக்கு இறைவர் மகிழ்ந்து கருப்பினிற் கட்டிபோல
இனிய திருவருள் புரிவர்.


     1இதன் வரலாறுகள் சென்னை உயர்தர நீதிமன்றம் 10. Madras. 375
என்ற அறிக்கையிற்கண்டபடி குறிக்கப்பட்டன. விரிவு ஆண்டுக்கண்டுகொள்க.
இவ்விவரங்களும் தலவிசேடக் குறிப்புக்குரிய தலபுராணக் குறிப்புக்களும்
இத்திருமடத்தின் அதிபர் ஸ்ரீமத் காசிவாசி சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள்
அன்புடன் அளித்துதவினார்கள்.