பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1113

 

முத்துச்சிவிகையை வலம் வந்து வணங்கி அதில் வீற்றிருந்ததும்,
பூம்பாவையாரைக் கண்ணுதல் கருணை வெள்ளமாகக் கண்டதும் நினைவு
கூர்க.

     11. சிவபெருமான் தம்பாற் செய்யும் அருட்டிறங்களைக் காணுந்தோறும்
"தகுதி யில்லாத சிறியேனாகிய என்னையும் பொருளாக எண்ணி இறைவர்
இந்தப் பேரருள் புரிந்தனர்" என்று நினைந்து மனமுருகுதல் அன்பின் றிறம்.

     12. சிவனடியார்களைப் பூசித்து அவர்களுக்கேற்றபடி இனிய அமுது
ஊட்டி மாகேசுரபூசை செய்து வழிபடுதல் சிறந்த சிவதருமம். அவ்வடி
யார்களது மகிழ்ச்சிக்குள்ளே சிவபெருமான் அமர்ந்து நின்று, பூசையும்
அமுதும் உவந்து. ஏற்றுக்கொண்டு, தானும் மகிழ்ந்து அருள் புரிவார்.

     13. அன்பானினைந்து வழிபடுபவர்கள் எவரேயாயினும் அவர்களது
எளிமையும் சிறுமையும் பார்த்து அவர்களுக்கெளியனாகத் திருமுடி சாய்த்துக்
கொடுத்தும் அவர்கள் வழிபாட்டை ஏற்றருளுவர் சிவபெருமான்.

     14. ஒர் அடியார் பொருட்டுத் தாங்கிய அருட்கோல அடையாளங்களை
ஏனை உயிர்கள் அறிந்துய்யுமாறு பின்னருந் தாங்கி நிற்பது சிவனருட்
பெருமையாம். திருநீலகண்டம் முதலியவை காண்க.

     15. சிவன் றிருமேனியிற் றாங்கிய அருளடையாளங்களை அவ்வாறே
வைத்து வழிபடுதல் வேண்டும். அவற்றை மாற்றி நேர்கண்டு கும்பிட ஆசை
கொள்ளுதலும் அன்பு வகையேயாயினும், மேற்கொள்ளற் பாலதன்று.
ஆயினும் அன்புபற்றி யெழுந்த அவ்வாசையினையும் உரிய வகையால்
நிறைவாக்கி யருளுதலும் சிவபெருமானது கருணையியல்பு.

     16. தேவர்க்குமரிய இறைவரது திருமேனியை நேர்காணப்,
பண்புடையடியார்களல்லாது வேறெவரும் வல்லவரல்லர்.

     17. ஆசாரியர்களைப் பூசித்து ஏற்குமாறு வழிபட்டு இன்னமுதூட்டுதல்
சிவதருமம்.

     18. அவ்வாறு செய்யும் வழிபாட்டினால் அவர்களது அருளேயன்றிச்
சிவபெருமான்றிருவருளும் உண்டாகும்.

     19. குரு, இலிங்கம், சங்கமம் என்ற மூன்றும் வழிபாடு செய்தற்குரிய
இடங்களாம். இம்மூன்றிலும் நின்று அவ்வழிபாட்டினை ஏற்றுச் சிவபெருமான்
அருள்புரிவர்.

     20. அடிமை வழக்கு முன்னாளிலிருந்தது, இந்நாளிலில்லை என்பர்.
உலக முழுதும் பலவாற்றானும் அடிமைப்பட்டே வாழ்கின்றது. 1 மக்கள்
யாவரும் உலகுக்கு அடிமையாய் ஒழிகின்றார்கள்; அதைவிட்டு இறைவனுக்கு
மீளா அடிமையாய்க் கண்டு ஒழுகினால் பிறவித்துன்பத்தினின்று நீங்குவர்.


     1"பொன்னுக் கொருசார்; புடவைக் கொருசார்; போற்று பசிக்கொருசார்;
- புதிய நறுஞ்சுவை யடிசில் பெறும்படி போதர வென்றோர்சார்,
மன்னுக்கொருசார்; மனைவிக் கொருசார்; மனைக்கென் றோரோர்சார் -
வாழ்வின் பின்னாட் கொருசாரென்றே வாணாள் வீணாளாய், என்னைப் பலவு
மடிமை யிறுத்திங்கேவல் கொண்டனவால் - எளியே னுய்வகை யின்னருள்
செய்தே யொருசார் தனைநினையத், தன்னடி மைக்கணு மென்னை
யளித்தவள் தாலோ தாலேலோ" என்ற (எனது) அவிநாசிக் கருணாம்பிகை
பிள்ளைத் தமிழ் (தால்-8)க் கருத்தைக் காண்க.