பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1115

 

என்றது காண்க. மானக்கஞ்சாறனடியார்க்கு மடியேன் - தாயனடியார்க்கு
மடியேன் எனத் தனித்தனிக் கூட்டுக1.

     வகை :- மானக்கஞ்சாறனெனும் வள்ளலே, மாவிரதியராகிய தவசியார்
"இது நமக்குப் பஞ்சவடிக்கு நல்கு" என்று கூறிsய அளவில், இது தகாதென்று
எண்ணாது கன்னியாகிய காதற்புதல்வியின் மலர்க்கூந்தலை அடியோடு
அரிந்தளித்தான் என்க.

     கலசமுலைக்கன்னி என்றதனால் (880) மணப்பருவம் வந்தவள்
என்பதும், காதற் புதல்வி என்றதனால் (875 - 876) பிள்ளைப்பேறு இல்லாது
சிவபெருமானை வழுத்தி அரிதிற்பெற்றுத் தாம் மிக்க அன்புபூண்ட மகள்
என்பதும், கமழ்குழல் என்றதனால் (894) மணத்தின்பொருட்டு
அலங்கரிக்கப்பட்ட கூந்தல் என்பதும், அறிவிக்கப்பட்டன. தவத்தவன் -
மாவிரதத் தவவேடம் பூண்டவன். நல்கு எனலும் - "கொடு" என்று
வெளிப்படையாய் வேண்டாது குறிப்பாய் வேண்டுதலும். நமது "பஞ்ச வடிக்கு
ஆம் என்றார்" (894) என்ற விரிநூற் பிரமாணத்தால் இங்ஙனம்
கொள்ளப்பட்டது. நல்கு - விருப்பம். "யாவையுநேர் கூறுவதன் முன்னவர்தங்
குறிப்பறிந்து கொடுத்துள்ளார்" (874) என்று விரிநூல் தொடக்கத்தில் இதனை
விளக்கியதும் காண்க. அலசுதல் - பொருந்தாத தன்மை தருதல் - கெடுதி
தருதல். "அலசாம னல்கா யெனுமா யிழையே" (இந்தளம் - திருவானைக்கா -
8) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க.

     மலைசெய் - மலையின் தன்மைபோன்ற. மலை - ஆகுபெயர். செய்
- உவமவுருபு. முதனூலுக் கேற்றவாறு தோள் என்பது வருவித்து
மலைசெய்தோள் மானக்கஞ்சாறன் என்று கூட்டுக. மலைசெய் மதில் என்று
கொண்டு மலைபோன்றுயர்ந்த வலியமதில் என்றுரைத்தலுமாம். கஞ்சை -
கஞ்சாறூர் என்பது மருவிக் கஞ்சை என வந்தது.

     நாயனாரது ஊரும் மரபும் குடியும் தொழிலும் குணமும் விறலும்
பேரும் அடிமைத்திறத்தின் மேன்மையும் முதலியவை முதனூல்
தொகுத்துணர்த்திற்று. அவரது ஊரும் பேரும் குணநலமும் செய்த
திருத்தொண்டு சரித வரலாறும் பிறவும் வகைநூல் வகுத்துக் காட்டிற்று.
இவற்றின் துணையால் திருவருள் காட்டியவாறு அவை விரிந்தபடி விரிநூலுட்
கண்டுகொள்க.

     1முதனூலாகிய திருத்தொண்டத்தொகையினுள் அரையடியில் ஒவ்வோர்
நாயன்மாரைத் துதித்து "அடியேன்" என்று போற்றுதல் பெருவழக்கம்.
ஓரடியில் "அடியேன்" என்ப திடையிடாது ஒருசேர இரண்டு நாயன்மாரைக்
கூறிப்போற்றியிருப்பது இங்கும் "கரைக்கண்டன் கழலடி", "மடல்சூழ்ந்த" என்ற
ஈரடிகளிலுமாம். "கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் -
கழற்சத்திவரிஞ்சையர் கோனடியார்க்கு மடியேன்" "மன்னியசீர் மறைநாவ
னின்றவூர்ப் பூசல் வரிவளை யாண்மானிக்கு நேசனுக்கு மடியேன்" என்ற
இரண்டிடங்களில் ஓர் அடியில் மூன்று நாயன்மார்கள் ஒருசேரப்
போற்றப்பட்டார்கள். "முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன்",
"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்", "நாட்டமிகு தண்டிக்கு
மூர்க்கர்க்கு மடியேன்" என்ற மூன்றிடங்களில் அரையடியில் இரண்டு
நாயன்மார்கள் துதிக்கப்பட்டனர். "திருநின்ற செம்மை", "வார்கொண்ட
வனமுலையாள்", "நிறைக்கொண்ட சிந்தையால்", "நிறைக்கொண்ட
சிந்தையால்," "துறைக்கொண்ட செம்பவளம்", "கடல்சூழ்ந்த உலகெலாம்",
"புடைசூழ்ந்த புலிய துண்மேல்" என்ற ஆறிடங்களில் ஒவ்வோரடியில்
ஒவ்வோர் நாயன்மார் தனித்தனி துதிக்கப்பட்டமை காண்க. "மெய்ம்மையே
திருமேனி", "வம்பறாவரிவண்டு" என்ற ஈரிடத்தும் ஒன்றரை அடிகளில்
முறையே சண்டீசப்பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார் என்ற
இவர்களைப் போற்றியிருத்தல் காண்க. இஃது இவ்விருவரும் இறைவரது
திருக்குமரர்களாகிய முறையின் குறிப்புப்போலும். இவை பெரியோர்களால்
ஆராயத்தக்கன.