866.
(இ-ள்.) கோல்ஆறு தேன்பொழிய - (தேன்
கூடுகள்
கட்டப்பட்ட) கொம்புகளின் வழியே கோற்றேன் பொழிய (அத்தேன்கள்
பலவும் கூடுதலால்); கொழும் கனியின் சாறு ஒழுகுங்கால் - கொழுத்து
வினைந்த பழங்களின் சாறு ஒழுகும் வாய்க்கால் போலச் சேர்ந்த ஒழுக்கு;
வயற்கரும்பின்சாறு ஆறு கமழ் ஊர் - வயலில் விளைந்த கரும்பின்
சாறுபெருகிய ஆற்றினைக் கூடி அதனை மணஞ்செய்யும் ஊராகிய;
கஞ்சாறூர் - கஞ்சாறூரென்பது; மேல் ... விரும்பியது - ஆகாய கங்கையைச்
சிவந்த சடையின் மேல் வைத்த சிவபெருமான் விரும்பி
எழுந்தருளியிருப்பதும்; நூல் ... நோன்மையது - (தமிழ்) நூல்களை
நெறியானே நன்குணர்ந்த நாவலர்களாலும் பாடிப் புகழப்படும்
விழுப்பமுடையதும் ஆம்.
(வி-ரை.)
மேல்ஆறு என்றது பிறநதிகள் போலக் கீழ்முகமாக
வராமல் மேன்முகமாக விண்ணினின்றும் வருதல் குறித்தது. மேல் -
மேன்மை எனக்கொண்டு மேன்மையுடைய ஆறு என்றலுமாம். இதன்
மேன்மையாவன ஆறுகளில் முதலில் வைத்தெண்ணப்படுதல், தூயதாதல்,
கேடில்லாமை, தன்னுட்படிந்தாரைத் தூயராக்குதல், கயிலையில் எழுபெருந்
தீர்த்தங்களில் ஒன்றாதல், சிவபெருமான் றிருமுடியில் வைக்கப்பெறுதல்
முதலியனவாம்.1
நூல்
ஆறு - நிலம் - நாடு - நகரம் - குடி - முதலியவற்றின்
சிறப்பியல்புகளைக்கூறும் இலக்கண இலக்கிய நூல்களை முறையாலே.
இரண்டனுருபும் மூன்றனுருபும் விரித்துரைக்க. ஆறு -
நெறி - முறைமை.
நன்கு
உணர்வார் தாம்பாடும் நோன்மை - முறையாக வுணர்ந்த
பெரும் புலமையோர்களும் பாடிப்புகழும் பெருமை. நூலாறு நன்குணராதார்
நோன்மையில்லாத வழியும் பாடுவராதலால் அவர்கள் பாடும் சிறப்புக்கள்
பெருளாகக் கொள்ளப் படா என்பதும் குறிப்பாலுணர்த்தப்பட்டது. "இறைவன்
பொருள் சேர் புகழ்" என்ற திருக்குறளுக்கு, "இறைமைக்
குணங்களிலராயினாரை உடையரெனக்கருதி அறியாதார் கூறும் கூற்றுப்
பொருள்சேரா வாகலின் - இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது"
என்று ஆசிரியர் பரிமேலழகர் உரைத்ததனை இங்கு நினைவு கூர்க.
இந்நோன்மைகளை ஆசிரியர் மேல்வரும் 867 - 871 வரை ஐந்து
திருப்பாட்டுக்களில் தமது குறியின்படி விளக்குதலும், இவையே
நன்குணர்வோராற் பாடத்தக்கன - பிற பாடத்தகாதன என்பதைக்
குறிப்பாலுணர்த்துவதும் காண்க.
நூல்
ஆறு நன்குணர்வோர் -
சுந்தரமூர்த்திகள் முதலிய
பெரியோர்கள். இவ்வூரின் நோன்மை - "கங்சனூர்
கஞ்சாறு
பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே" என்று க்ஷேத்திரக்
கோவைத் திருத்தாண்டகத்தில் வைத்து அப்பர் சுவாமிகள் பாடியருளிய
தேவார வைப்புத்தலமாதலாலும் அறியப்படும். நூலாறு நன்குணர்வோரிற்
றலைசிறந்தோராகிய ஆசிரியர் சேக்கிழார் பெருமானாற் பாடப்படும்
நோன்மையும் சிறக்க ஈண்டு நாம் கருதத்தக்கதாம்.
1இக்கங்கை
விஷ்ணு பாதத்திலிருந்து வருகின்றதென்றும் அதனைச்
சிவபெருமான் சிரத்தில் ஏற்றனர் என்றும் சிலர் கூறித்திரிவர். அது
பகுத்தறிவில்லார் கூற்றாகும். இவையிரண்டும் வெவ்வேறு பொருளன.
"பாதங்கணீரேற்றார்" என்ற பந்தண நல்லூர்த் திருத்தாண்டகத்தை
இப்பொருள்படச் சிலர் தவறாக எண்ணுகின்றனர். இத்திருப்பாட்டுக்குத், தம்
பாதங்களில் அன்பர்களது கண்ணீரருவியை ஏற்று அருள்பவர் (பாதம் -
கண்ணீர் - ஏற்றார்) என்பது பொருள். "அன்பர் வார்ந்தகண் ணருவி
மஞ்சனசாலை (சாட்டியக்குடி - 2) என்ற கருவூர்த்தேவர் திருவிசைப்பாக்
காண்க. பாதங்களிலே கண்ணை ஈர்ந்து சாத்திய விட்டுணுவாகிய இடப
எற்றினையுடையவர் (பாதம் கண் ஈர் ஏற்றார்) என்றலுமாம்.
|