கேட்டு மகிழ்ந்து
அரனருள் போற்றினர். இதனைக் கண்டுய்யும் பேறு
தமக்குக் கிடைக்கவில்லையே என்று மனந்தளர்ந்தனர். இறைவன் அருளிய
திருவாக்கின் றிறம் கேட்டு மனத்தளர்ச்சி நீங்கினர் மணமகளார், புனைந்த
மலர்க் கூந்தலை மீளத் திருவருளால் முன்போலப் பெற்றனர். கலிக்காமனார்
அவரை மணஞ் செய்து கொண்டு, தக்கவாறு யாவர்க்கும் நிதிமழை
பொழிந்து, மண மகிழ்ச்சி உலகெங்கும் சிறக்கச்செய்து பெருகிய
இனத்தாருடன் தமது நகரத்தினைச் சென்றணைந்தனர்.
தலவிசேடம்
:- கஞ்சாறூர் - இத்தலம் ஆனதாண்டவபுரம்
என்னும்
தென்னிந்திய இருப்புப்பாதை நிலயம் உள்ள ஊராம் என்றறியப்படுகின்றது.
அந்நிலயத்திலிருந்து ஊருக்குள் கிழக்கில் 1/4 நாழிகையளவில் பழைய
சிவாலயம் உண்டு. இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவபுரம்
என்பது ஆனதாண்டவபுரம் என மருவி வழங்குகின்றது. இத்தலத்துச் சுவாமி
பெயர் பஞ்சவடீசுவரர் என்பதாம். இது இச்சரிதத்தைத் தொடர்ந்துள்ளது
காண்க. பாரி சாதவனேசுவரர், பாரத்துவாகேசுவரர், ஆனந்தமுனீசுவரர் என்ற
பேர்களும் உண்டெனத் தலபுராணம் கூறும், இத்தலத்தின் கிழக்கே 4
நாழிகை யளவில் கஞ்சனாபுரம் என மருவி வழங்கும் கஞ்ச நகரம் என்ற
ஊரும், வடக்கே 6 நாழிகை யளவில் வடகஞ்சாறு என வழங்குவதோர்
ஊரும் உள்ளன. இவற்றால் இத்தலமே நாயனாரது ஊர் என்றது
உறுதிப்படுகின்றது. 45 ஆண்டுகளின் முன் இத்தலத்தின் அருகில் மிகப்
பழையவாகிய சில செப்புத் திருவுருவங்கள் நிலத்தினின்றும் எடுக்கப்பட்டன.
அவற்றுள் விநாயகர் - சோமாக்கந்தர் - உமையம்மையார் - சண்டீசர் -
பிச்சாடனர் - சடநாதர் என்னும் மாவிரதியார் - மானக்கஞ்சாறனார்
-
அப்பர் சுவாமிகள் - திருஞானசம்பந்த சுவாமிகள் - காட்சி நாதர்
என்னும் கல்யாணசுந்தரனார் முதலிய பழந் திருவுருவங்கள் இருந்தன.
அவை இத்திருக் கோயிலில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன.
மாவிரதியார்
திருக்கோலமும் நாயனார் திருக்கோலமும் இப்புராணத்தினுட் கூறப்படும்
எல்லா அடையாளங்களுடன் விளங்குகின்றன. மாவிரதியார் - நாயனார்
திருவுருவங்கள் இவ்வாறெடுத்துப் பூசிக்கப்பட்ட நாள் முதல் இவ்வூர் சீரும்
செல்வமும் செழிக்க ஓங்கி வருகின்றதென்றும் அறியப்படுகின்றது. இவ்வூரின்
மேல்புறம் வல்லத்து வழி என வழங்கும் வெல்லத்து வழியின் நிலங்கள்
இப்போதும் கரும்புப் பயிர் மிகச் செழித்து விளைவன என்று பேர்பெற்றன;
இது "வயற்கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர்" என்ற இப்புராண முதற்பாசுர
உண்மையை விளக்கி நிற்கின்றது. "கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே" என்ற க்ஷேத்திரக்கோவைத்
திருத்தாண்டகத்தில் இத்தலம் போற்றப்பட்டிருத்தலும் இதன் பழமையினையும்
மேன்மையினையும் விளக்கும்.
இத்தலத்துக்கு
வடமொழியில் ஒரு தல புராணம் உண்டு. அது
காந்தமா புராணத்தில் க்ஷேத்திர காண்டம் - உபரிபாகம் 61 முதல் 69 வரை
உள்ள அத்தியாயங்களில் விரிக்கப்பட்ட தென்பர். அதில் இந்நாயனார் பெயர்
மானகாந்தன் என வழங்கப்படுகின்றது. நாயனாரது சரிதம் சில சிறு
மாறுதல்களுடன் இப்புராணம் பேசுகின்றது. மானக்கஞ்சாறனாரது மனைவியார்
கல்யாணசுந்தரி எனவும், கலிக்காமனாருக்குச் சந்திரவர்ணன் எனவும் அவரது
பிதா சந்திர காந்தன் எனவும், இவ்வாறு தமக்குத் தோற்றியவாறு
வடமொழியில் சரித வரலாறும் பெயர்களும் புனைந்து இத்தமிழ்ப் புராண
சரிதத்தை வடவர் வழங்கினர் என்ப. பஞ்சவடி என்பதனை ஐந்து கயிறு
எனப்பொருள் கொண்டு இதில் விரிக்கப்படுகின்றதும் காணலாம்.
|