உணவில்லாது தாம்
வருந்தவும், வந்த அடியார்க்கு உணவளிக்க வயலில்
விதைத்த நெல்லை வாரியும் வீட்டுக் கூரையை அறுத்தும் அமுது சமைத்த
அருஞ்செயலும் அவ்வாறாயின பிறவும் இங்கு எண்ணத்தக்கன.
17.
அன்பின்றிறத்தை யாவரும் அறியச்செய்து உலகினரை
நல்வழிப்படுத்தி ஆட்கொள்ளுதல் சிவபெருமானது பேரருட்டிறம்.
அடியார்கள்பால் சிவன் வெளிப்பட எழுந்தருளி வந்து செய்யும்
பேரருட்டிருவிளையாடல்கள் பலவும் இந்தவுள்ளுறை கொண்டன.
18.
பெரியோர்களை அவர்களது பெயராற் சுட்டி வழங்கத் தானும்
ஒருப்படமாட்டார் நல்லோர். அங்கு இந்நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. மானமுடைய கஞ்சாற்றூரினர் எனப் பொருள்படும் பெரியவர்
என மானக் கஞ்சாறனார் என்றே உலகம் வழங்கியது காண்க. மானம் -
பெருமை என்ப. இது உயர்க்குடிப் பிறந்தார்க்கு உரிய குணங்களுள்
முதன்மை பெற்றுக் குடிப் பிறப்பினை நிறுத்துதலுடையதென்றும், அஃதாவது
எஞ்ஞான்றுந் தந்நிலையிற்றாழாமையும் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர்
வாழாமையுமாம் என்றும் உரைப்பர் ஆசிரியர் பரிமேலழகர். இச்சரிதத்தில்
மூன்றிடங்களில் மட்டும் (872 - 882 - 893) மானக்கஞ்சாறனார் எனவும்,
இரண்டிடங்களில் கஞ்சாறர் (883 - 885); எனவும் வழங்கிய ஆசிரியர்
இவ்வாறு சுட்டுதல் தானும் அஞ்சிப் பெரியவர் (875), மலர்க்கழல்களறியாமை
யறியாதார் (875), வள்ளலார் (884), அடிநீடு மனத்தன்பர் (890), சிறந்த
பெருந்தொண்டனார் (891), நலமிகுமன்பர் (892), மெய்த்தொண்டர் (894),
தொழும்பர் (896), மெய்யன்பர் (897), நின்றவர் முன்நின்றவர் (898),
தொண்டனார் (899), பெருமையார் (902) என்று பல திறத்தானும் சுட்டிக்
கூறுதல் கருதத்தக்கது.
மானக்கஞ்சாறநாயனார்
புராண முற்றும்
|