பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1167

 

     போன்ற கண்களையும் உணர்த்தின. காதளவும் நீண்டிருத்தலால் காதில்
அணிந்த குழையைக் கண்கள் எட்டுகின்றன. அதனால் காதுகளேயன்றிக்
கண்களும் குழையுடையன என்று சொல்லத்தக்கனவாய் நீண்டன என்ற
குறிப்புமாம். குழை உடை - குழைகளை உடைக்கின்ற என்றுரைப்பாரு
முண்டு.

     களத்தின் மீதும் - குழையுடைய நீலங்கள் நீளும் -
குழைவையுடைய வேலைப்பாடமைந்த நீல மணிகள் பொருந்திய நீண்ட
அணிகள் (அப்பெண்களின்) கழுத்தில் விளங்கின. இங்குக் குழை -
குழைவாகிய வடிவையும், நீலம் - நீல மணிகளையும், களம் - கழுத்தையும்
உணர்த்தி நின்றன. நீல மணிகளை அழுத்திக்குழைந்து நீண்டு தொங்கும்
சங்கிலிபோன்ற அணிகள் கழுத்திலணியப் படுவது அந்நாளின் வழக்குப்
போலும். களம் - நெற்களம் என்று கொண்டு நெற்களத்திலும் நீலங்கள்
(கொடிகள்) நீண்டு படரும் என்பர் இராமநாதச் செட்டியார்.

     கயல்....குளத்தும் குழை உடை நீலங்கள் நீளும் - வயல்களினயலிற்
குளங்கள் உள்ளன. அவ்வயல்களின் அயலிலுள்ள குளங்களினுள் நீண்டு
படர்ந்து நீலம் மலர்களைப் பூத்தன. வயல்களினும் அயலிற் குளத்தினும்
என்றுரைப்பினு மமையும். இங்குக் குழை - கொடியின் இலைகளையும்,
மலரின் இதழ்களையும்; நீலங்கள் - நீல மலர்களையும் அக்கொடிகளையும்
உணர்த்தின. நீளும் - படர்ந்து வளர்ந்து செழிக்கும்.

     மேற் பாட்டிற் பங்கயமாநிதியுடையோர் போன்று தோன்றும்
மள்ளர்கள்
என்றது, வயல்கள் எல்லாம்செந் நெல்லேயாகி விளையக்கண்டு,
தாம் உணவின்றி வருந்தியும், இஃதடியேன் செய்த புண்ணியம் என்று
மகிழ்ந்து, நெல்லறுத்துப் பெறும் செந்நெற் கூலியெல்லாம் இறைவனை
ஊட்டிய குறையா நிதிபோன்ற வள்ளல் தாயனாரையும், இப்பாட்டில்,
முகத்தினும் குழையுடை நீலங்கள் நீளும் என்றது, தாயனாரது அன்பின்
செயல்களையும், அவர் கொண்டுசென்ற பொருள்கள் கமரில் வீழ்ந்ததனையும்,
அவர் தமது ஊட்டியை யரிந்ததனையும், இறைவனது திருக்கை அவர்
கையைப் பிடிக்க ஊறு நீங்கியதனையும் தம் கண்களாற் கண்ட
மனைவியாரையும் குறிப்பாலுணர்த்துவது சிந்திக்க.

     நீடும் குழை யடை - என்பதும் பாடம். 3

906. அக்கு லப்பதி தன்னி லற்நெறித்
தக்க மாமனை வாழ்க்கையிற் றங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையி லோங்கிய
மிக்க செல்வத்து வேளாண் டலைமையார்.
4

     (இ-ள்.) வெளிப்படை. அந்த நல்லபதியில் தகுதிவாய்ந்த
பெருமையுடைய இல்வாழ்க்கையில் தங்கியவர் பழைமையாகக்கூடிய பெரு
நிதியினால்மிகுதியாகிய செல்வ நிறைந்த வேளாண்மையிற் றலைமையாகியவர்.

     (வி-ரை.) குலப்பதி - குலம் - இங்கு நலங் குறித்தது.

     அறநெறி - இவரது வாழ்க்கை முழுதும் அற நெறியில் நின்றது
குறித்தார்.

     தக்க - அவ்வாறு நின்றதினால் தகுதிபெற்ற. இல்லறத்தின் தகுதி
பற்றிக் "கற்றநூற் றுறைபோய்க் கடுமனைக் கிழவ, னற்குண நிறைந்த கற்புடை
மனைவியோ டன்பு மருளுந் தாங்கி யின்சொலின், விருந்து புறந்தந்
தருந்தவர்ப் பேணி, யைவகை வேள்வியு மாற்றி யிவ்வகை, நல்லற நிரப்பிப்
பல்புகழ் நிறீஇப், பிறன் மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு, வரையா
நாளின் மகப்பேறு குறித்துப், பெருநலந் துய்க்கும் பெற்றித்
தன்றே"...."அதனால், இந்நிலை யிரண்டு மெம்ம னோர்க் கியலா" என்று
குமரகுருபரசுவாமிகள் சிதம்பரமும்மணிக்கோவையில்