பக்கம் எண் :


1240 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

இரதிதவஞ்செய்து பதியை யடைந்தனன் என்பது தலமான்மியம். ஒரு
காலத்தில் அசுவினி தேவர்களுக்கு அவிப்பாகங் கொடுக்க மறுத்த
இந்திரனைப் பிருகு புத்திராகிய சியவன முனிவர் அரசிழக்கும்படி சபித்தனர்;
பின்னொரு காலத்தில் தவஞ்செய்த உதங்க முனிவருக்கு அமிர்தங் கொடுக்க
மறுத்த இந்திரனைத் தரித்திரனாகும்படி அவர் சபித்தனர்; இந்திரன்
இத்தலத்திற் பூசித்து இந்த இரண்டு சாபங்களினின்றும் நீங்கினன்; இலக்குமி
பூசித்துப் பேறுபெற்றனள். பரசுராமர் பூசித்துத் தாய்க்கொலைப் பழியினின்றும்
நீங்கினர்.

     இத் திருக்கோயிலுக்குத் திருமதில் முதலிய கற்றிருப்பணிகள்
நிறைவேறிச்சென்ற வெகுதானிய ஆண்டு (1938) ஆனித்திங்கள் 12-ஆம்
நாளில் மகாகும்பாபிடேகம் நிறைவேறியது.1

     இத் திருக்கோயில் பண்டைச் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட
தென்பது சுவாமி கோவிலைச் சுற்றிச் சுவரில் பொறித்துள்ள பழமையான
கல்வெட்டுக்களாலறியலாம். அவற்றிற் சோழர்களால் கொடுக்கப்பட்ட
நன்செய் புன்செய் கிராமங்களின் விவரமும், பூசை முறைகளும் காணப்படும்.
நிலங்களினின்று ஆண்டு ஒன்றுக்குப்பதினாயிரம் வெண்பொன் வரவுவரும்.
இதனுடன் இணைக்கப்பட்ட நான்கு சிறு கோயில்களும் உண்டு. அவற்றின்
படித்தரமும் இதில் அடங்கும். சுவாமி பெயர் - சாமவேதீசுவர்; அம்பிகை -
உலகநாயகியம்மையார்.


     கற்பனை :- 1. நீர்வளம் நிலவள மிகுதியாயின், சில்லறிவுகளுடைய
வண்டு, கயல், மேதி முதலிய பிராணிகளும் சுகவாழ்க்கையான
இருக்கைகளைத் தேடியடைவன.

     2. நீரின் அலையில் வரும் சில சங்குகள் தவழ்ந்து மரங்களின்
உச்சியிலும் ஏறித் தங்கு மியல்புடையன.

     3. ஆன்கன்றும் மான்கன்றும் வெவ்வேறு நிலத்தனவாயினும்
ஓரினத்தைச் சார்ந்தனவாதலின் தம்மில் உறவுகொள்ளும் தன்மையுடையன.
அதுபோல அறிவோரும் நல்லோரும் எந்நிலத்தாராயினும் கூடியபோது உறவு
பூண்பர்.

     4. வெவ்வேறியல்பினவாகிய முல்லை, மருதம் முதலிய திணை
நிலங்கள் அடுத்துள்ளபோது ஒன்றன் ஒழுக்கமும் பொருள்களும்
மற்றொன்றில் வந்து கலந்து விரவவும்படும்.

     5. ஒரு குலத்தில் ஒரு பெரியார் அவதரிப்பாராயின் அவரால் அக்குல
முழுதும் விளக்கம் பெறும்.

     6. மனம் வாக்குக் காயம் என்ற மூன்று கரணங்களாலும் சிவபெருமான்
றிருவடியல்லாது பிறிதொன்றினையும் பேணார் பெரியார்.


     1இப் புராண வரலாறுகளைச் சிவ விஷ்ணு க்ஷேத்திர விளக்கம் என்ற
நூலிலிருந்து எடுத்து இத்தல ஆலய விசாரணைக் கருத்தரிலொருவரும்
எனது நண்பரும் அன்பருமாகிய திரு. தி. வே. அரங்கசாமி ஐயர், பி. ஏ.
அவர்கள் எழுதியுதவியதனோடு இத்தலப் படங்களும் உதவினர். இவருக்கு
என் நன்றியுரியது.

     இக்கோயிலின் தருமகர்த்தர்களாயிருந்த சகோதரர்கள்அன்பர்கள்
சம்புலிங்க முதலியாரும் கந்தசாமி முதலியாரும் இதன் நில வருவாய்கள்
பலரலால் விழுங்கப்பட்டனவற்றை நீதிமன்ற மூலம் நீண்ட வழக்குக்கள்
இட்டு மீட்பதிற் பெருமுயற்சி செய்து மீட்டுச் சுவாமிக்குப் பெருவருவாய்
உண்டாக்கினதுமன்றித் திருப்பணியையும் தொடங்கிச் சிலபாகம் செய்தனர்.
அவர்கள் செய்யாது விடுத்த எஞ்சிய திருமதில் திருப்பணியும் பிறவும்
பெருமுயற்சிசெய்து மேற்கண்ட அன்பர் தி. வே. அரங்கசாமி ஐயர்
முற்றுப்பெறச் செய்ததுமன்றி மகா கும்பாபிடேகமும் மண்டலாபிடேகமும்
நிறைவேற்றினர்.