பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1241

 

     7. ஆனிரைகளை அகன்புறவிற் கூடக் கொண்டு சென்று, அவற்றுக்குத்
தீய விலங்குகளாலும் நோய்களாலும் வரும் ஏதங்களை நீக்கிக் காத்து, நல்ல
புல்லுணவும் நல்ல நீரும் ஊட்டி, அவை பெருகும்படி வளர்த்துக் காத்தல்
பசுக்காக்கும் முறை.

     8. இளங் கன்றுகள் - பால்மறை நாகு - கறவைப் பாற்பசு - சினைப்பசு
- புனிற்றுப் பசு - விடைக்குலம் என்றிவ்வாறு ஆனிரைகளை வெவ்வேறு
வகுத்துப் புறவில் மேய்த்தும், தொழுவங்களிற்சேர்த்தும் வளர்த்தலும்
பசுக்காக்கும் முறையாகும்.

     9. ஆனிரைகாப்போர் வேய்ங்குழலிசை வாசித்தலும் வழக்கு. அது
பசுக் காத்தலுக்கும் துணைசெய்யு மியல்புடையது.

     10. சிவபெருமானது மகாமந்திரமாகவும், எல்லா மந்திரங்களுக்கும்
மேலாகிய ஆதிமந்திரமாகவும் உள்ளது சிவநாம மந்திரமாகிய
திருவைந்தெழுத்தே யாகும்.

     11. திருவைந்தெழுத்தைச் சிவனிடத்து இடையறாது பெருகும்
மெய்யன்புடன் உள்ளங் கசிந்து ஓதுவோர் சிவானந்தப் பெருவாழ்வாகிய
முத்தியையடைகுவர்.

     12. சிவநாமமாகிய திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்டு
இசைநூல் விதி தவறாது ஏழிசையின் சுருதிபெற விதிப்படி அமைந்த
வேய்ங்குழலால் வாசித்தால் அதனை வாசிப்போர்க்கும் கேட்போர்க்கும்
சிவபெருமானிடத்தில் அன்பு வளரும்.

     13. இசை நூல் விதிப்படி வேய்ங்குழலில் மெய்யன்புடன்
திருவைந்தெழுத்தை வாசிக்கும் இன்னிசை எல்லா வுயிர்களையும் தன்வய
மாக்கி உருக்க வல்லது; சிவபெருமான் றிருச்செவியினருகணையப் பெருகி
அவரை எதிர்வந்து அருளச் செய்யவும் வல்லது.

     14. அசேதனங்களாகிய காற்று, அருவி, முகில், கடல் முதலியனவும்
இசைநூல் விதிப்படி வேங்குழலில் திருவைந்தெழுத்தை அமைத்து அன்புடன்
ஊதப்படும் குழலிசையின் வசப்பட்டு நிற்பன என்றால், அறிவுடைய
சராசரங்களாகிய ஏனை உயிர்கள் ஈடுபடுதல் ஆச்சரியமன்று.

     15. ஒன்றுக்கொன்று பகையுடைய உயிர்களும் வேய்ங்குழலின் தெய்வ
இசையமுதின் வசப்பட்டபோது தத்தம் பசைமையை மறப்பனவாகும். கொடிய
பாம்பு, புலி முதலியனவும் குழலின் இசையின் வசப்பட்டுத் தம்மை
மறப்பனவாம். இன்னிசையானது பிராணிகளினிடத்து நோய் நீக்கம், கொடுமை
நீக்கம், பசி நீக்கம், துன்ப நீக்கம் முதலியனவற்றுக்கும், நற்பயன் பெறுதற்கும்
காரணமாம்.

     16. இசைக்கலைக்கும் மற்றும் எல்லாக் கலைகளுக்கும் ஆதிகாரணர்
சிவபெருமான்.

              14. ஆனாய நாயனார் புராணம் முற்றும்