பக்கம் எண் :


இலைமலிந்த சருக்கத்திறுதியிற் சுந்தரமூர்த்தி நாயனார் துதி1243

 

     அடைந்தோர்...வல்லவனே - குருவினது இலக்கணம் முற்றும்
அமைந்து அத்தன்மையிற் றலைசிறந்தவர் என்றபடி. மருள்துறை -
மயக்கத்தை - அறிவை மயக்குதலைச் - செய்கின்ற வழி, பிறவியிற்
செலுத்தும் வழி. துறை - மோகம். மதம் முதலிய ஏழு பிரிவுகளை
உணர்த்தும் என்றலுமாம். "மருளானாம் மாணாப்பிறப்பு" (குறள்) என்றபடி,
பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மயக்கமே மருள் எனப்படும்.
அதனை நீக்கி, இது பொருள் என்றறிவித்து நல்வழி காட்டுதல் குருவின்
தொழில். நல் வான்வழி - பிறவியிற் செலுத்தாத முத்திநெறி. வல்லவனே -
ஏகாரம் தேற்றம். முன்னாத் திருவந்தாதி (8) துதியில் "ஆட்செய்
யெனப்பெற்றவன்" என்று கூறிய சரிதப் பகுதியினைத் தொடர்ந்து
இப்பாட்டிற் கூறியது காண்க.

     967. (இ-ள்.) மாறுகொள் புலவிதீர்க்க - பரவையார் கொண்டிருந்த
ஊடலை நீக்கும் பொருட்டு; செஞ்சடைக் கூத்தர் தம்மை - சிவந்த
சடையுடைய கூத்தர்ப்பெருமானை; காதுகொள்...கால்சீப்ப - காதில் அணிந்த
குழைகள் வீசுகின்ற ஒளியாகிய நிலவு இருளை ஒழிக்க; மனையிடை இருகால்
செல்ல - பரவையாரது திருமாளிகைக்கு இரண்டு முறை செல்லும்படி;
தூது....கொள்வர் - தூதராக ஏவல் கொள்பவராகிய ஆளுடைய நம்பிகள்
நம்மை அடிமையாகக்கொண்டு உரிமைகொள்பவராவர்; தீதுகொள்வினைக்கு
வாரோம் - (ஆதலின்) தீமையுடைய வினையின் வழியதாகிய பிறவியில் நாம்
சேரமாட்டோம்.

     (வி-ரை.) உரிமைகொள்வார் - (ஆதலின்) வினைக்கு வாரோம்
என்று கூட்டி முடித்துக்கொள்க. பூட்டுவிற் பொருள்கோள்.

     தீதுகொள் வினைக்கு - தீமையைப் பயனாகக் கொண்ட வினை.
தீமை காரணமாக வரும் வினை என்றலுமாம். வினை - இங்கு வினையால்
வரும் பிறவி குறித்தது. வினைக்கு - வினையின்கண். நான்கனுருபு
ஏழனுருபின் பொருளில் வந்தது. பிறவியிற் சேரோம் என்க. உரிமைகொள்வார்
- எம்மை வினைக்கு வராமற் செய்வார். "இருள்சேரிருவினையும் சேரா"
(குறள்).

     தொழும்பு கொள்ளுதல் - அடிமைப் பணிகளை ஏற்றுக்கொள்ளுதல்.
உரிமை கொள்ளுதல் - உரிமையால் ஏவல்கொள்ளுதல். "அடைந்தோர்
மருட்டுறை நீக்கி நல் வான்வழி காட்டிட வல்லவனே" என்ற வகைநூற்
பொருளை விரித் துரைத்ததாம்.

     புலவி நீக்கக் - கூத்தர் தம்மைத் தூதுகொள்பவர் - நம்மை -
உரிமைகொள்வார் - (ஆதலின்) வினைக்கு வாரோம் என்று கூட்டுக.

     தழைகள் - சங்கக் குழைகள். நிலவு - குழைகளின் வெள்ளிய
ஒளியாகிய நிலவு. உருவகம்.

     இருள் கால்சீப்ப - இருளைத் துடைக்க - போக்க. கால்சீத்தல் - ஒரு
சொல்.

     மனையிடை - பரவையார் திருமாளிகையின்கண்.

     இருகாற்செல்ல - இருமுறை தூதுசெல்லும்படி (ஏயர்கோ - புரா - 324
- 374).

     தூதுகொள்பவர் - தூதாகக் கொண்டவரே. தேற்றேகாரம் தொக்கது.
"இனி அல்லனெனும் பொருட்டுறை யாவதென்ன" என்ற வகைநூற் கருத்தைத்
தொடர்ந்து, அத்தனுக்கு அடிமையாகவும் வல்லவர்; அவ்வாறு தம்மை
ஆளாகக் கொண்டமை காரணமாக அவரைத் தூதுகொண்டு ஏவவும்
வல்லவர் என்று கூறினார். "நாயனை யடியா னேவுங் காரிய நன்று" என்றதும்
இது (ஏயர்கோ - புரா - 384).

     "அம்மானுக் காளே" என்ற தொகைநூற் கருத்துக்கு "ஆளாயினேன்
இனியல்லனெனும் பொருட்டுறை யாவதென்னே யென்ன வல்லவன்" என்று
வகைநூல் உரை வகுத்தது. அதனையே விரிநூல் தொடர்ந்து மேற்கூறியபடி
விரித்தது காண்க. சருக்கந்தோறும் இவ்வாறு தொகைநூற் சொற்றொடர்
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சரிதத்தின் வெவ்வேறு பகுதிகளாக விரித்துத்
துதி யுருவமாக விரிநூல் பேசும். 550 உரைத்தவை பார்க்க. 3.

                 இலைமலிந்த சருக்கம் முற்றிற்று.