பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1253

 

புகழ் - உலகில் நிலைபெற்ற பழமை. "பாண்டிநாடே பழம்பதியாகவும்"
(திருவாசகம்) முதலிய திருவாக்குக்களை இங்கு நினைவு கூர்க.

     பாண்டி நாடு - பாண்டிய மரபின் அரசர்களால் ஆளப்பட்ட நாடு.

     பாண்டி நாட்டினை இத் திருத்தொண்டர் புராணத்தினுள் முதன்
முதலிற் கூறநேர்ந்த இடம் இப்புராணமேயாதலானும், பாண்டியநாடு
தமிழ்நாடு
என்று சிறப்புப் பெயர் பெற்றதாதலானும் இங்குச் 1செய்யுள்
யாப்பினாலும், பொருளாலும் தமிழின் சிறப்புப்பற்றி ஆசிரியர்
தொடங்குகின்றார். உறுதிப்பொருள் தராத சீவகசிந்தாமணியைக் கற்று அது
தமிழ்வளனும் பொருள்வளனும் பெரிதுமுடையது என்று பாராட்டி மக்கள்
போது போக்கிய காலத்தில் அவர்களது மனங்களை நற்றமிழிலும்
நற்பொருளிலும் ஈடுபடுத்த இத்திருத்தொண்டர் புராணம் எழுந்தது என்பது
திருத்தொண்ட புராண வரலாற்றினாலறியப்படும் உண்மை; ஆதலின்
பாண்டியநாட்டைப்பற்றிய இச்சரிதத்தைக் "காய்மாண்ட தெங்கின் பழம்
வீழக் கமுகி னெற்றி" என்ற சிந்தாமணியின் கலித்துறை யாப்பினால்
தொடங்கி அந்த ஒரே வகைச் செய்யுள் யாப்பினாலே புராண முழுதும்
பாடியருளினார்ஆசிரியர் என்க. சிந்தாமணியை விடுத்து இதனைக் கற்போர்
தமிழ்ச் சுவையும், இகபர நலனும் ஒருங்கே அடையுமாறு இச்சரிதங்கூறிய
யாப்பமைதி ஆசிரியரின் கருணைத்திறத்தினையும் கவித்திறனையும்
ஒருங்கே காட்டிநிற்கின்றது. இத் தமிழ் நாட்டரசர் புராணமே
தமிழ்வளத்திற்கேற்றதெனக் கொண்ட அமைதியும் காண்க. தமிழ்வளத்
தினையே தமது திருமனத்துட் கொண்டு ஆசிரியர். இப்புராணத்தினுட்
புகுந்தனர் என்பது 968-974 திருப்பாட்டுக்களின் அமைப்பினால் இனிது
விளங்கும். 974-ம் திருப்பாட்டில் வெளிப்படையாகக் கூறியருளியதனோடு
970-ல் ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ், என்று விதந்தும்
கூறியருளினர்.                1

     இதனால் நாடும் நாட்டுச் சிறப்பும் கூறினார்.

969.



சாயுந்தளிர் வல்லி மருங்கு னெடுந்த டங்கண்
வேயும்படு தோளியர் பண்படு மின்சொற் செய்ய
வாயும்படும்; நீள்கரை மண்பொருந் தண்பொ ருந்தம்
பாயுங்கட லும்படும்; நீர்மை பணித்த முத்தம்.       2

     (இ-ள்.) நீர்மை பணித்த முத்தம் - அன்பின் நீர்மையினாற்
கொள்ளப்பட்ட முத்தம்; சாயும்....தோளியர் - தளிர்களையுடைய சாயும்
கொடிபோன்ற இடையினையும் நீண்டபெரியகண்களையும் உடைய மூங்கில்
போன்ற தோள்களையுடைய பெண்களின்; பண்பாடும்...வாயும்படும் - பண்
உண்டாகின்ற இனிய சொற்கள் பொருந்திய சிவந்த வாயினிடத்தும்
பொருந்துவன; நீர்மை பணித்த முத்தம் - நீரோட்டம் என்னும் தண்ணிய
ஒளிமிகுந்த முத்துக்கள்; நீள்கரை மண் பொரும்தண் பொருந்தம் பாயும்
கடலும்படும்
- நீண்டகரையின் மண்ணை இடித்து ஓடும் குளிர்ச்சியுடைய
குளிர்ந்த தாமிரபர்ணியாறு பாய்கின்ற கடலிலும் உண்டாகின்றன.

     (வி-ரை.) நீர்மை பணித்த முத்தம் என்பதனை இரட்டுறமொழிந்து
கொண்டு முத்தம் வாயும்படும், முத்தம் கடலும்படும் என்று ஈரிடத்துங்
கூட்டி உரைக்க. உம்மைகள் எண்ணும்மைகள். மேல் வரும் பாட்டிலும்,
972-லும் இவ்வாறே கொள்க.

     வாயும்படும் என்றதனோடு கூட்டும்போது - நீர்மை - அன்பின்
தன்மை; முத்தம் - அன்பு காரணமாக உளதாகும் உடலின்றொழில்
என்க. "தாய் வாய்முத்தங்கொள்ள" (672) என்றது காண்க. பணித்த -
உண்டாகிய - உண்ணின்று தூண்டபபட்ட என்க.


     1இப்புராணத்தினுள் வேறு யாப்பினால் வரும் 996, 997 பாட்டுக்கள்
ஐயப்பாடுள்ளன.