பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1273

 
985.



"புன்மைச்செயல் வல்லமண் குண்டரிற் போது போக்கும்
வன்மைக்கொடும் பாதகன் மாய்ந்திட, வாய்மை வேத
நன்மைத்திரு நீற்றுயர் நன்னெறி தாங்கு மேன்மைத்
தன்மைப்புவி மன்னரைச் சார்வதென்?" றென்று சார்வார். 18
   
986.



காய்வுற்றசெற் றங்கொடு கண்டகன் காப்ப வுஞ்சென்
றாய்வுற்றகொட் பிற்பக லெல்லை யடங்க நாடி
யேய்வுற்றநற் சந்தன மெங்கும் பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயி றன்னில்.        19

     984. (இ-ள்.) வெளிப்படை. இகழப்பட்ட, எல்லையில்லாத வலிந்த
செய்கைகளைச் செய்யவும், தமது திருப்பணியினின்றும் விலகாத
செய்கையுடையவராகிய மூர்த்தியார் சந்தனக் காப்புத் தேடிப்பெறும்
வழியையும் கொடுங்கோன்மை செய்வானாகிய அக்கொடும்பாதகன்
அடைத்துவிட்டான்; தெள்ளும் நீராகிய கங்கையைத் தரித்த சடையாருடைய
அன்பரும் (அதனால்) மனம் நொந்து, 17

     985. (இ-ள்.) வெளிப்படை. "புன்மைச் செயலில்வல்ல அமண்
குண்டர்களுடனே போது போக்குகின்ற கொடியபாதகன் இறந்துபட,
உண்மை வேதங்களிற் கூறப்பட்ட நன்மைதருகின்ற திருநீற்றின் உயர்ந்த
சைவ நன்னெறியைத் தாங்கும் மேன்மைத் தன்மையுடைய மன்னரை இப்புவி
சார்வது எந்நாட்கூடுவதோ?" என்று மனத்துட் கொண்டவராகி, 18

     986. (இ-ள்.) வெளிப்படை. காய்தற்றன்மை பொருந்திய
கோபத்தையுடைய கொடிய கண்டகனாகிய அவ்வடுகக்கருநாட மன்னவன்,
சந்தனம் பெறும் வழி கிடைக்கப்பெறாமல் அடைக்கவும், போய், ஆராயும்
கொட்பில் அந்நாளிற் பகல் கழியுமளவும் எங்கும் தேடியும், திருவாலவாயில்
எந்தைபெருமானுக்கு அணியத்தகுந்த நல்ல சந்தனம் எங்கும்
கிடைக்கப்பெறாது மனம் சோர்வுற்று வருந்தத், தம் பெருமானாரது
திருக்கோயிலில் வந்தணைந்தனர். 19

     இம்மூன்றும் பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.

     984. (வி.ரை.) எல்லையில்லாத(னவும்) வன்மைகளும் ஆகிய
எள்ளும் செயல்
- என்க. எள்ளுதல் - நூல்களாலும் உயர்ந்தோராலும்
விலக்கி யிகழப்படுதல். இச்செயல்களாவன "அந்த மிலவா மிறை" என
முன்பாட்டிற்கூறிய அவை.

     தள்ளும் செயல் - தமது திருப்பணிவிடையை விடுதல். தள்ளும்
செயல் இல்லவர் -
மூர்த்தியார். முட்டலராய்ச் செய்து வந்தவராதலின்,
கொடுங்கோலரசனுடைய மிறைகளுக்கு உடைந்து தம் பணியைத் தள்ளாதவர்.

     சந்தனக்காப்புத் தேடிக்கொள்ளும் துறை - துறை - சந்தனக்குறடு
(கட்டை) பெறும் வழிகள். அவை, விலைக்குப் பெறுதலும், சோலைகளிற்
சந்தன மரங்களை வெட்டி வருதலும் முதலாயின. காப்பு- இங்கு
அரைத்தலாற் காப்பினைப் பெறும் குறட்டுக்காயிற்று.

.     மெய்ப்பூச்சுக்குரியதாதலின் காப்பு என்றார்.

     துறையும் அடைத்தான் - வழக்கமாய்த் தேடிப்பெறும் வழிகளில்
இவர் பெறாதபடி தடுத்துவிட்டான். விலைக்குக் கொடுப்போரை வன்மையால்
மறித்தும், சோலைகளில் மரம் வெட்டி எடுக்கக்கூடாமற் செய்தும் வலிந்த
செய்கைகளைச் செய்தான் என்பதாம்.

     கொடுங்கோன்மை செய்வான் - இவ்வாறு செய்தல் அரச நீதிக்கும் செங்கோன்மைக்கும் அடாத செயல் என்பார் கொடுங்கோன்மை என்றார், "ஆறு சமயத்தவரவரைத், தேற்றுந் தகையன" (இன்னம்பர், 7),