எடுத்துக் கொண்டுவந்து,
அதற்கென் றமைக்கப்பட்ட தனியிடத்தில் இருந்து
கொண்டு அவற்றைக் கோவை, தாமம், மாலை, கண்ணி, பிணையல்,
தொடையல் முதலியனவாக அவ்வக்காலத்துக் கேற்றபடி அமைத்து உரிய
காலங்களிற் கொண்டுபோய் அன்பினோடு சாத்தி இறைவனது குறிப்பறிந்து
கண்டு கண்டு மகிழ்ந்தார். சாந்தம் தூபம் முதலியவற்றோடு பொருந்திய
அர்ச்சனைகளை முறைப்படி செய்து அன்பு பெருகிவந்தனர். சிவபெருமானது
திருப்பதிகப்பற்றாகிய திருவைந் தெழுத்தையும் இடைவிடாமல் நாவினாற்
பயின்றார். விதிவிலக்குக்களை அறிந்து அதற்கேற்றபடி ஒழுகினார்.
உலக மீன்ற அம்மையாரது திருமுலைப்பாலினைச் சிவஞானத்துடன் குழைத்து
ஊட்ட உண்டருளிய ஆளுடைய பிள்ளையாருக்கு நண்பராகும்
பெருமையையும் பெற்றனர்.
இவ்வாறு
முருகனார் பல நாள் தமது நியதியாகிய பூசையினை ஒரு
நாளும் வழுவாமே செய்து வந்தனர். முன்செய்த பூசையின் பயனாகத்
திருஞான சம்பந்த நாயனாருடைய திருமணத்திற் புக்கருளிச் சிவபெருமானது
திருவடி நீழல் சாரும் நிலையாகிய பெருவாழ்வை அடைந்தனர்.
தலவிசேடம்
:- 1. திருப்புகலூர்- தீக்கடவுள் வழிபட்டதனால்
அக்கினீசம் என்பர். பிறவிக்கஞ்சிய உயிர்கள், புகலடையத் தக்கதாகலின்
புகலூர் எனப்படும். தலமரத்தினாற் புன்னைவனம்
எனப் பெயர்பெறும்.
இறைவன்றிருமேனி சாய்ந்திருத்தலிற் கோணேசம் எனப்படும்.
அக்கினி
தீர்த்தம் கோயிலைச் சுற்றிலும் அகழி போலச் சூழ்ந்திருக்கின்றது.
இறைவனது கோயில் திருமுற்றத்தில் வந்தெழுந்த பொன் மணி
முதலியவற்றைப் பருக்கைக் கற்களோ டொப்பத் திருவுழவாரத்தில் ஏந்தி
அப்பர் சுவாமிகள் இத்தலத்தில் "வண்டலர்மென் பூங்கமல வாவியினிற்
புகவெறிந்தார்". இவ்வூர் சோலைகளாலும் மலர்வாவியாலும் அணிபெற
விளங்கும் தன்மை புராணத்தினாலும் தேவாரத் திருப்பதிகங்களாலும்
அறியலாம். சென்றகாலம், வருங்காலம், நிகழ்காலம் என்னும் மூன்று
காலங்களுக்கும் முறையே உரிமைப்பாடுடைய பூத, பௌடிய, வர்த்தமான
லிங்கங்கள் தரிசிக்கத்தக்கன. பரமாசாரிய மூர்த்திகள் மூவரும் தரிசித்துத்
தங்கித் திருப்பதிகங்கள் பாடியருளிய தலம். திருஞானசம்பந்த நாயனாரும்
திருநாவுக்கரசுநாயனாரும் திருநீலநக்கநாயனார் சிறுத்தொண்டநாயனார்
முதலிய எண்ணிறந்த அடியார்களும் பலகாலம் இங்கு முருகநாயனார்
திருமடத்தில் எழுந்தருளியிருந்த சிறப்புடையது. 1019 - ம் பாட்டில்
உரைத்தவை பார்க்க. திருநாவுக்கரசர்பெருமான் இங்குப் பலகாலம் தங்கிப்
பணிசெய்திருந்து "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன்" என்று துதித்துச்
சிவபெருமான் றிருவடிப்பேறு பெற்றருளினர். ஆளுடையநம்பிகள் செங்கல்
செழும் பொன்னாகப் பெற்றுத் "தன்மையே புகழ்ந்து" என்ற திருப்பதிகத்தாற்
போற்றியருளிய தலம்.
சுவாமி
- அக்னீசர் - கோணேசர்; அம்மையார் - கருந்தார்குழலி.
திருப்பதிகங்கள் 8. இது தென்னிந்திய இருப்புப்பாதை நன்னிலம்
நிலயத்திலிருந்து கிழக்கே மட்சாலையில் 4 நாழிகை யளவில்
அடையத்தக்கது.
2. திருப்புகலூர் வர்த்தமானேச்சுரம்
- புகலூர்த் திருக்கோயிலுக்குள்
வர்த்த மானலிங்கம் எழுந்தருளியிருக்கும் தனியிடம். சுவாமி சந்நிதிக்கு
அடுத்த வடபுறம் உள்ளது. இப்பெருமானை முருகநாயனார் தமது
ஆன்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நாளும் பூப்பணிவிடையும் பூசையும்
செய்து வழிபட்டுப் பேறடைந்தனர். பூக்கூடையுடன் வழிபடும் திருக்கோலமாக
நாயனாரது திருவுருவம் இச்சந்நிதியில் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது.
சுவாமி - வர்த்தமானீசர்; அம்மை - கருந்தார்குழலி
- திருப்பதிகம் 1.
கற்பனை
:- 1. நல்லோர்களது மனமும் அவர்கள் அணியும்
திருநீற்றினைப் போலவே சிறந்த வெண்மைத் திருந்து ஒளியுடையன. அவை
பொருள்களைக் களங்கமின்றி விளங்கச்செய்வன.
|