பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1335

 

     2. கேட்ட பழக்கத்தால் பூவை முதலிய பறவைகளும் திருப்பதிகப்
பாடல்களைப் பாடவல்லனவாகும்.

     3. சிவபெருமானைப் பாடும் திருப்பதிகங்களைக் கேட்ட
தொண்டர்களது முகங்கள் அன்பினால் கண்ணீர் ததும்புவன.

     4. விதிப்படி பூக்கொய்து மாலைகள் ஆக்கிச் சிவபெருமானுக்குச்
சாத்தி மகிழ்தலும், சிவனை அருச்சித்தலும், சிவநாமமாகிய
திருவைந்தெழுத்தைக் கணித்தலும் மிகச் சிறப்பாகிய சிவபுண்ணியமாம்.

     5. இவற்றை மிகச் சிறப்புடன் வேதாகமங்களும் தமிழ் வேதங்களும்
எடுத்துப் பேசுகின்றன. "...நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்,
புலர்வதன் முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலைப் புனைந்தேத்திப்
புகழ்ந்து பாடித் தலை யாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி
போற்றி யென்றும்...அலறா நில்லே, என்று நெஞ்சினுக்கு ஆணையிடுகின்றார்
அப்பர் சுவாமிகள். கழறிற்றறிவார் நாயனாரும் இவ்வாறே திருப்பணி
செய்தனர்.

     6. மேற்கூறிய திருப்பணிகள் செய்யும் பேறு முன்னை மெய்த்தவத்தால்
வரும்.

     7. பொழுது விடிவதற்குமுன் எழுந்துபோய், நாட்கடன் முடித்துத்,
தூய நீரிற் குளித்தல், கோட்டுப்பூ கொடிப்பூ நிலப்பூ நீர்ப்பூ என்ற நால்வகை
மலர்களில் சிவபெருமானுக்குச் சாத்தத்தக்க மலர்களைத் தெரிந்து அவை
அலரும்பருவத்தே பறித்து வெவ்வேறு திருப்பூங் கூடைகளில் அமைத்தல்,
கூடைகளை நாபிக்குக் கீழே தொங்கவைக்காது கையாற் றாங்கியும்
தண்டிற் றூக்கியும் மேலுயர்த்திப் பிடித்துக்கொணர்தல், அவற்றைத் தனியிடத்
தமர்ந்து கோவை - கண்ணி முதலியனவாகக் காலத்துக்கேற்றவாறு
தொடுத்துத் தாங்கிச் சென்று உரிய காலங்களிற் சிவபெருமானுக்குச் சாத்துதல்,
(தாமே சாத்த உரிமை பெறாதார், அவ்வுரிமையுடையாரைக் கொண்டு
சாத்துவித்தல்), அருச்சனைபுரிதல், திருவைந்தெழுத்தை விதிப்படி கணித்தல்,
மலர் எடுக்கும்போதும் தொடுக்கும் போதும் வாய்கட்டி மௌனமாயிருந்து
பிறிது எண்ணமில்லாது சிவனடியை நீங்காது சிந்திக்கும் ஒருமை மனத்துடன்
பணிபுரிதல் முதலிய இவை பூத்திருப்பணி செய்வார் மேற்கொண்டொழுக
வேண்டிய விதிகளாம்.

     8. மேற்கண்டவாறு உள்ளுருகிப் பணிசெய்வோர் சிவபத நிழலின்கண்
நிலைபெற்ற தன்மை சார்குவர்.

     9. முன்செய்த பூசையின்பயனாகப் பெரியோருடனுறையும்
பேறுகிடைக்கும்.

     10. முன் சிவபூசை செய்த புண்ணியமுடையோரே திருஞானசம்பந்த
நாயனாரது திருமணத்திற் புக்குச் சிவபதமடைந்தோராவர்.

                   முருகநாயனார் புராணம் முற்றும்.


     குறிப்பு :- "தீக்கையில்லாதான், இழிகுலத்தான், மிகுநோயாளன்,
தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசௌசமுடையான் என்னும் இவர்கள்
கொண்டுவரும் பூ, எடுத்துவைத்து அலர்ந்தபூ, பழம்பூ, உதிர்ந்தபூ, காற்றில்
அடிபட்டபூ, கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை
ஆமணக்கிலைகளிலேனும் வைத்தபூ, அரையின் கீழே பிடித்தபூ, புழுக்கடி
எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடியபூ, ஸ்நானம் பண்ணாமல்
எடுத்தபூ, பொல்லா நிலம் - மயான சமீபம் - சண்டாளர் வசிக்குமிடம்
முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகியபூ, இவை முதலாயின சிவனுக்குச்
சாத்தலாகாது. இவை புஷ்பவிதிகளிற் கண்டவை. (ஆறுமுகநாவலர் பதிப்பு -
சூசனம்)