17.
உருத்திரபசுபதி நாயனார் புராணம் |
தொகை
(முருகனுக்கும்)
உருத்திர பசுபதிக்கும் அடியேன்
-
திருத்தொண்டத்தொகை
வகை
அந்தாழ் புனறன்னி
லல்லும் பகலுநின் றாதரத்தால்
உந்தாத வன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே.
-
திருத்தொண்டர் திருவந்தாதி (19)
|
விரி
1031.
|
நிலத்தி
னோங்கிய நிவந்தெழும் பெரும்புன னீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர். 1 |
புராணம்
:- உருத்திரபசுபதியார் என்ற பெயருடைய நாயனாரது
சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி நிறுத்த முறையானே,
மும்மையா லுலகாண்ட சருக்கத்தில் மூன்றாவது உருத்திரபசுபதி நாயனார்
புராணம் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- உருத்திரபசுபதியார் என்ற பெயருடைய நாயனாருக்கும்
நான் அடியேன் ஆவேன். உம்மை முன்சொல்லிய முருகனுக்கும்
என்றதனோடு கூடிய எண்ணும்மை, நாயனாரது பெயர் பசுபதி என்பதும்,
நியதியாய்த் திருவுருத்திரத்தைக் கணித்துப் பேறடைந்ததனால் உருத்திரபசுபதி
எனப் பெயர்பெற்றார் என்பதும், இதனாற் பேர்க்காரண மிதுவென்பதும்,
உருத்திரம் கணிக்கும் உரிமையால் மறையவர் மரபினரென்பதும், சரிதக்
குறிப்பும் முதனூல் பேசிற்று.
வகை
:- அழகிய ஆழமாகிய புனலுள் இரவும் பகலும்
கழுத்தளவாயிடும் நீரினுள் நின்று விருப்பத்தினால் வழுவாத அன்புடனே
திருவுருத்திரத்தைச் சொல்லி அதிற் கருத்தினைப் பொருந்திய அழகிய
தாமரை மாலையணிந்த உருத்திர பசுபதி என்ற காரணப் பெயருடைய
நாயனாரது நல்ல ஊர், வயலுக்குள் சங்குகள் ஏறிச்செல்கின்ற திருத்தலையூர்
என்று இந் நானிலத்தில் அறிந்தோர் சொல்லுவார்கள். அம்
தாழ் புனல்
என்றது தூய்மையும் ஆழமும் குறித்தது. தூய்மையை 1035லும், ஆழத்தை
1036லும் சரிதத் தொடர்புபற்றி விரிநூல் விரித்துரைத்தது காண்க. அல்லும்
பகலும் நின்று ஆதரத்தால் என்ற கருத்து "வருமு றைப்பெரும் பகலுமெல்
லியும்வழு வாமே" 1037 என்றதனால் விரிக்கப்பட்டது. பைந்தார்
- இங்கு
அந்தணர்க்குரிய அடையாள மாலையாகிய தாமரை மலர்மாலை குறித்தது
என்க.
|