பக்கம் எண் :


உருத்திரபசுபதிநாயனார்புராணம்1339

 

பூக்கள் தேன் தந்தன என்க. மலர்களினின்றும் கிடைக்கும் பொருள் தேன்
என்றதும் குறிப்பார் மலர்ச்சோலை என உடம்பொடு புணர்த்தியோதினார்.
மலர்ச் சோலையினின்றும் பெறும்பயன் பலவற்றுள்ளும் தேன் சிறந்தது
என்பதும் குறிப்பு.

     ஆன் அளிப்பன அஞ்சு - ஆனைந்து. "ஆன்பெற்ற அஞ்சு" (916)
என்ற விடத்துரைத்தவை பார்க்க.

     அளிப்பன - அளிப்பனவாகிய - குறிப்புவினைப் பெயரெச்சம்.
இப்பாட்டில் ஏனை மூன்றிடங்களிலும் வரும் அளிப்பன என்பன
வினைமுற்றுக்கள். இவ்வாறு வினைமுற்றாகவும் வினைப்பெயராகவும் வரும்
வெவ்வேறு முடிபுகள் கொள்ள வைத்துச் சொற்பொருட் பின்வருநிலை
யணிபடக் கூறுதல் ஆசிரியரின் கவிநயங்களுள் ஒன்று. 553 - ல்
உரைத்தவையும் பிறவும் பார்க்க.

     இவ்வாறன்றி அளிப்பன என்பதனை இங்கும் வினைமுற்றாகவே
கொண்டு ஆனினங்கள் ஆடுவார்க்கு ஐந்தும் கொடுப்பன
என்றுரைப்பதுமாம்.

     உகந்து ஆடுவார்க்கு- இறைவன் வேண்டுதல்
வேண்டாமையில்லானாதலின் உகந்து ஆடுதல்என்ற தென்னையோ?
எனின், இன்ன பொருளுக்கு இது குணம் என்று நியதிப்படுத்தி வைத்தது
போல, ஆனைந்தினால் ஆட்டும் ஆன்மாக்களுக்கு மலக்கறைபோதல் என்ற
தன்மை வைத்தார் என்றதேயாம். ஆனைந்தில் அத்தன்மையில் நிகழ்பவன்
என்க. "அருக்கனிற் சோதி யமைத்தோன் றிருத்தகு, மதியிற் றண்மை
வைத்தோன்; றிண்டிறற், றீயின்வெம்மை செய்தோன்; பொய்தீர், வானிற்
கலப்பு வைத்தோன்; மேதகு, காலி னூக்கங் கண்டோ; னிழறிதழ்,
நீரிலின்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட, மண்ணிற் றிண்மை வைத்தோன்
என்றென், றெனைப்பல கோடி யெனைப்பல பிறவு, மனைத்தனைத் தவ்வயி
னடைத்தோன்" (அண்டப்பகுதி 20 - 28) என்ற திருவாசகம் முதலியவை
காண்க. "விருப்பொன் றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை"
(சிவஞானசித்தி. 2 - 27) (ஒன்றினும் விருப்பிலனாகியும் உயிர்கள் மாட்டுக்
கருணை பூண்டு விருப்பம் செய்யும்) என்றதும் காண்க.

     தருமமும் நீதியும் சால்பும் - தருமம்- சிவதருமமும் உலக
தருமமுமென இரு வகைப்படும். இறைவனூல்பற்றிய ஒழுக்கம் சிவதருமம்
எனவும், உலகியல் நூல் பற்றிய ஒழுக்கம் உலக தருமம் எனவும் படும்.
அறிவித்தவா றொழுகும் ஒழுக்கமே தருமமாம். விதித்தன செய்தல்
விலக்கியன ஒழிதல் என்று இதனை உலக நூல் வகைபற்றி உரைத்தார்
பரிமேலழகர். நீதி- நியதி. இது விதிவிலக்குக்களை அறிந்து அதற்குத்தக
ஒழுகுதல் வேண்டுமென்பதும், அவ்வாறு ஒழுகினோரும் ஒழுகத்
தவறினோரும் அவரவருக்கு உரிய பயன் பெறுவர் என்பதுமாம். சால்பு -
உயர்ந்த ஒழுக்கத்திற் சிறத்தல். நீதியும் சால்பும் உலக நூல்களால்
உணர்த்தப்பட்டன. சால்பு - "சால்பின் மேன்மை" (440) பார்க்க.

     ஆழ்வார்க்கு அவ்வூர்தான் அளிப்பன என்றது அவ்வூரில் குழுமிய
குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடிகள் இறைவன் அருளிய நூல்களின்
வழியே ஒழுகினார்கள் என்பதாம். இறைவர் தமக்கென ஒன்றும்
வேண்டாதவர்; உயர் நல்லொழுக்கத்தினின்றொழுகி ஞானத்தாற்
றம்மையடைச் செய்தலே அவரது கருணை என்ப. ஆதலின் அவர் சொல்வழி
ஒழுகி அவரை அவ்வூர் வழிபடும் என்பது கருத்து. இதனை அவர்க்குக்
கொடுப்பதாக உபசரித்தார். ஊர் - ஊரில் உள்ள குடிகள். ஆகுபெயர். ஊர்
- ஊரில் உள்ளாரைக் குறித்த தொகுதி யொருமையாதலின் அளிப்பன என்ற
பன்மைவினை கொண்டது. அளிப்பன என்பதை அளிக்கப்படுவன எனச்
செயப்பாட்டுவினையாகக் கொண்டு ஊரால் அளிக்கப்படுவன
என்றுரைப்பினுமாம்.