பக்கம் எண் :


திருக்குறிப்புத்தொண்டநாயனார்புராணம்1409

 

செய்தி - தொழில் - களும் உடன் கூறியவாறுமாயிற்று. ஊர்கள்,
குறிஞ்சி நிலத்தில் சீறூர் எனவும், முல்லையில் பாடி எனவும், மருதத்தில்
ஊர்
எனவும் (நெய்தலில் பட்டினம் - பாக்கம் - எனவும்) பெயர்பெறும்.
வைப்பு என்பது பொதுப்பெயர்.

     உணவு - அவ்வ நிலங்களில் வாழ்கின்ற மக்கள் அங்கங்கும்
மிகுதியாய்க் கிடைப்பவையும் விளையக்கூடியவையுமாகிய விளை
பொருள்களில் தக்கவற்றையே உணவாக்கிக் கொள்ளுதல் இயல்பாதலின்
இங்குக் கூறிய உணவுவகைகள் அவ்வநிலத்திற் குரியவாயின. இதுவே
தமிழிற்குச் சிறப்புரிமையாகிய பொருளிலக்கண அமைதியாகும். சொல்லும்
பொருளும் ஒத்தியங்கும் என்ற உண்மை தமிழுக்கு உரியது என்பது இதனாற்
கண்டு கொள்க.

     இங்குத் தேனும் தினையும் மலைகளிலும், புல்லரிசியும் பாலும்
முல்லையிலும், நெல் - நெய் - கரும்பு - கனி முதலியன வயல்களிலும், மீன்
கடலிலும் இயல்பாகவே மிகுதியும் படுகின்ற தன்மையும் காண்க.
மீன்நிறைந்த பேருணவு
- என்றது கடலினுள் பெருமீன்கள் மிகுதியாகக்
கிடைக்கும் அளவினையும், ஏனைநிலங்களிற் போலப் பருவமும் சிரமமும்
இன்றி இவ்வுணவு பெறும் எளிமையையும், இவ்வுணாவிற் பயிலும் மாக்கள்
இதிற் கொள்ளும் ஆர்வத்தின் மிகுதியினையும் குறித்தபடியாம். 9

1087. குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி;
முழவு கார்கொள முல்லைகண் முகைப்பன முல்லை;
மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்;
நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
10

     (இ-ள்.) வெளிப்படை. குறிஞ்சி நிலத்தில் குழல்போல ஒலிக்கின்ற
வண்டின் கூட்டங்கள் குறிஞ்சிப் பண்களைப்பாடுவன; முல்லை நிலத்தில்
முழவுப் பறைகள் கார்போல் முழங்க முல்லைக் கொடிகள் அரும்புவன;
மருதநிலத்தில் மழலையினை மிழற்றுகின்ற மென்மைத் தன்மையுடைய
கிளிப்பிள்ளைகள் மருத மரங்களைத் தமக்குத் துயிலிடமாக உடையன;
நெய்தனிலங்கள் நிழலைத் தருகின்ற தாழைகள் சூழ்ந்த நெய்தல் மலர்கள்
மலர்ந்திருக்கும் கழிகளையுடையன.

     (வி-ரை.) குழல் ... குறிஞ்சி - குழல்செய் - வேய்ங்குழலினைப்
போல ஒலி செய்கின்ற. குழல் - கூந்தல் எனக்கொண்டு குறமகளிரின்
கூந்தல் என்றுறைப்பாருமுண்டு. குறிஞ்சிக்குரிய கருப்பொருள்களுள் குறிஞ்சி
யாழும், வண்டும்
இங்குக் கூறினார்.

     முழவு கார் கொள - முழவு - முல்லை முழவு. தயிர்த்தாழி
என்பாருமுண்டு. கார் கொள - மேகங்களின் ஒலிபோல முழங்க. முகைத்தல்
- அரும்புதல். முல்லைக் கருப்பொருள்களுள் முழவும், முல்லைப் பூவும்,
முதற்பொருள்களுள் கார் காலமும் கூறினார்.

     மழலை ... மருதம் - மருத நிலத்தின் மருதமாகிய மரமும், கிளியாகிய
புள்ளும் கூறியபடி. சேக்கை - துயிலிடம்.

     நிழல் செய் ... நெய்தல் - இங்குக்கூறிய நெய்தற்
கருப்பொருள்களுள் தாழையும், நெய்தற்பூவும் ஆம். நெய்தல் அம் கழி -
நெய்தல் பூக்கள் பூத்தற்கிடமாகிய கழிகள். அம் - அழகு. நெய்தற்
பூக்களாலும் கைதை நிழலாலும் அழகு படுத்தப்பட்ட கழி என்பது. குறிஞ்சி,
வண்டுகளால் குறிஞ்சியாழ் முரல, முல்லை முழா முழக்கி முல்லை
அரும்புவிக்க, மருதம் மழலைக் கிளிகளை உறங்குவிக்க, நெய்தல்
கைதையின் நிழலாலும் நெய்தற் பூவினாலும் அழகு படுத்திற்று என்றதொரு
தொடர்பாகிய கவிநயமும் காண்க. 10