பக்கம் எண் :


1410 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

சிறப்பியல் - குறிஞ்சி

1088. மல்கு மப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி
யெல்லை யெங்கணு மிறவுள ரேனன்முன் விளைக்கும்
பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை,
சொல்லு மப்புனங் காப்பவுஞ் சுரிகுழற் றோகை.
11

     (இ-ள்.) வெளிப்படை. வளங்கள் நிறைந்த முற்கூறிய அந்த
நால்வகைப் பெருநிலங்களில் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலத்தின்
இடங்களெங்கும் இறவுளர்கள் தினைப்பயிரினை முன்விளைக்கும் பல பெரிய
தினைப்புனங்களிலெல்லாம் படரும் சிறகினையும், தோகையினையும் உடைய
மயில்கள் பயில்வன; சொல்லப்படும் அந்தத் தினைப்புனங்களைக்
காப்பவர்களும் சுரித்த குழலையுடைய மயில் போன்ற சாயலையுடைய
குறமாதர்கள்.

     (வி-ரை.) அப்பெருநிலங்கள் - குறிஞ்சி ஆதியாக மேல் 5
பாட்டுக்களிலும் (1083 - 1087) கூறிய அந்த நால்வகைப் பெருநிலப் பகுதிகள்.
அ - முன்னறிசுட்டு பெருநிலம் - நிலத்தின் பெரும்பகுதி.

     வரைபுணர் குறிஞ்சி - மலையும் மலையைச் சார்ந்த இடமும் ஆகிய
குறிஞ்சி. இறவுளர் - குறிஞ்சி நிலமக்கள். "இறவுளர்" (665) பார்க்க. குறவர்
- வேடர் என்பாருமுண்டு.

     படர் சிறைத் தோகை புனம் பயில்வன என்க. மயிலின் சிறையும்
தோகையும் வெவ்வேறு உடற் கூறுபாடுகள். தோகையையுடைய மயில்
தோகை
எனப்பட்டது. சினை ஆகுபெயர். தோகை - மயிலின் வால்போல
நீண்டிருக்கும் பகுதி. பீலி எனவும்படும். இது உதிர்ந்து முளைப்பதாலும்,
நீண்டு வளர்வதாலும், விரித்தாட உதவுவதாலும் படர் என்ற அடைமொழி
தந்தார். படர் - படர்தல் - செல்லுதல் என்ற பொருளில் மயில்பறக்க
உதவுவதனால் படர்கின்ற என்று சிறைக்கும் ஏற்ற அடைமொழியாயிற்று.
படர்சிறை - படர்தோகை எனக்கூட்டி யுரைக்க நின்றது.

     சொல்லும் ... தோகை - சொல்லும் - மேலே சொல்லப்படும்.
குறிஞ்சிக்குரிப் பொருளாய்த் தலைவனும் தலைவியும் புணர்தற்கிடமாதலானும்,
அகப்பொருளில் முதலில் வைக்கப்படுதலானும் எடுத்துச் சொல்லப்படும்
என்ற குறிப்பும் காண்க. குறிஞ்சித் தெய்வமாகிய முருகன் தனது சொந்த
நிலத்தில் தனக்குரிய மயில்களையும், குறவர்கோமகளாகிய மயில்போன்ற
வள்ளிநாயகியாரையும் தினைப்புனத்தே கண்டு அருள்விளையாடல்கள்
பயின்ற செய்திகள் நினைவு கூர்தற்குரியனவாய்ச் சேர்த்துச் சொல்லப்படும்
என்ற குறிப்பும் காண்க.

     சுரி குழல் தோகை - சுரிகுழல் - சிறைத் தோகையினின்றும் வேறு
பிரித்துணர நிற்பதனால் பிறிதினியைபு நீக்கிய விசேடணம். தோகை -
சினை ஆகுபெயராய் மயிலை உணர்த்திய சொல்; பின்னர் மெய்பற்றிவந்த
உவம ஆகுபெயராக மயில்போன்ற சாயலையுடைய குறமாதர்க்காயிற்று.
காப்ப
- தோகை என்றதற்கேற்பக் காப்ப என அஃறிணை வினைமுற்றினாற்
கூறினார். விருந்து வந்தது என முடிந்தது போல உயர்திணை
அஃறிணையாகச் சொல்லியல்புபற்றித் திணை மயங்கிற்று. திணையும்
பன்மையினொருமையும் மயங்கிவந்த வமைதி.

     அப்பெரு நிலங்களில் - முன்னர்க் குறிஞ்சி முதலிய நானிலப்
பகுதிகளை முதல் கரு என்ற பொருள் வளங்களாற் பொதுவகையாற்
சேர்த்துக் கூறிய ஆசிரியர், இனி அவற்றைத் தனித்தனி பிரித்துச்
சிறப்பித்துக்கூறத் தொடங்குகின்றார்.