25.
தீமை, பிணி, கவலை, புறஞ்சூழ்தல், தளர்ச்சி, அசைவு, திகைப்பு,
ஆர்ப்பு, தாழ்ச்சி, இழுக்கு முதலிய குற்றங்கள் காணக் கிடையாதிருத்தல்
சிறந்த பெருநகரங்களின் தன்மை. (1183-1185)
26.
அறிவு தொடங்கிய நாள் முதலாக மனம் மொழி மெய் என்ற
மூன்றும் சிவனடிச்சார்பில் செலுத்தும் பெருமை முன்னைத் தவத்தால்
வருவது. (1189) அவ்வாறு சிவச்சார்பில் முக்கரணங்களாலும் எஞ்ஞான்றும்
ஒழுக முயலுதல் அறிவு பெற்றோர் கடமை.
27.
சிவனடியார்க்கு அவர் குறிப்பறிந்து பணி செய்தல் சிறப்புடைய
திருத்தொண்டாகும். (1189)
28.
சிவனடியார்களது உடைகளின் துகள் மாசு போக்கி ஒலித்துக்
கொடுத்தல் அந்தத்தொண்டு புரிவோர்க்குத் தமது பிறவிமாசு போக்குவதற்
கேதுவாகும். (1191)
29.
சிவனடியவர்க்குப் பணி செய்ய இசைவோர் இசைந்தபடியே
இயற்றிடுதல் வேண்டும். அது செய்யத் தவறினால் அடியார்பால் அபசாரம்
செய்தோராவர். சிவாபராதம் செய்த பலனும் நேரும். (1199)
30.
சிவனடியாரிடத்து இசைந்தபடி ஒழுகாது அபசாரப்பட்டு
வாழ்தலினும். உயிர் துறத்தலே சிறந்ததென் றெண்ணுவர் பெரியோர். (1200-
1202)
31.
தனதடியவர்பாற் றொண்டு செய்தலில் உறைத்து நிற்குந்
தொண்டர்களைத் தமக்குத் தொண்டு செய்வோரினும் மேலாகக்கொண்டு
காத்தருளுவர் சிவபெருமான். இக்கருத்துப்பற்றியே "அடியார்க்கு மடியேன்"
என்று பலமுறையும் திருத்தொண்டத்தொகையாகிய தமிழ் வேதம் கூறிற்று.
(1202-1204)
32.
சிவனுக்கும் அடியார்க்கும் பணி செய்ய நின்ற சாதனமாகிய
பொருள்களையே, அத்திருப்பணிக்கு முட்டுநேர்ந்தபோது, தமது
உயிரைப்போக்கி அவ்வகையாற் றிருத்தொண்டினுக்கு வந்த இடையூற்றை
விலக்கும் சாதனங்களாகப் பயன்படுத்தி விடுவது அன்புடைமைக்கு
அடையாளம். அவ்வாறு செய்யும் அன்புடைச் செயலினுள்ளே தோன்றி
முளைத்தெழுந்து காத்தல் சிவபெருமானது பேரருளினியல்பாகும். (1202)
திருக்குறிப்புத்தொண்ட
நாயனார் புராண முற்றிற்று
திருக்குறிப்புத்தொண்ட
நாயனார் புராணத்தைப் பற்றிய சில
குறிப்புக்கள்
(இவற்றை
உரிய இடங்களில் சேர்த்துக்கொள்க)
1078
- 1400 - பக். 26-வது வரி - "விழுக்குடிமைச் செம்மையினார்"
என்றதன்பின் (திருநா - புரா - 341) என்று சேர்த்துக் கொள்க.
1092
- 1415 - பக். 5-வது வரியினிறுதியில் - நீலநீலி - "அடியளந்
தான் றாஅயது" (குறள்) என்றது போல் நீலி என்றது வாளா பெயராய்
நின்றது. நீல வாள் - நஞ்சு பூசித் தோய்த்தவாள். நீலம் பண்பாகு பெயராய்
நஞ்சைக் குறித்தது. "நீலமார் கண்டனை" (தேவா), "நச்சழற் பகழி" (656)
என்பவை காண்க - என்று சேர்க்க.
|