வெகுண்டு
எழுந்த தாதை- இது 1252 - 1254 - 1255ல் விரிநூலுள்
விரிக்கப்பட்டது. தாதை - "தந்தையென வேயறிந்து"
(1256) பார்க்க.
மழுவினால் எறிந்த - தாள்களை எறிய எண்ணி
"மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் வந்து மழுவாயிட" (1256) பார்க்க. இதனை "வலமேறிய
மழுவாலெறிந்து" என்று வகைநூல் வகுத்துக் காட்டிற்று,
"எறிந்தார்" (1256) "எறிந்த அதுவே" (1257).
அம்மையான்
- அன்னை போன்றவர். பெண்பாற் பெயர் ஆண்பால்
விகுதி பெற்று வந்தது. அடிச்சண்டிப்பெருமான்
- திருவடிப்பற்று விடாத
தொண்டராகிய சண்டேசர். இறைவரது நின்மாலியத் தீர்த்தத் தொட்டிக்கும்
சண்டேசர் கோயிலுக்கும் குறுக்கே போகலாகாது என்ற விதியும் இடையறாத
இத்தொடர்பு குறித்தது. அம்மை - அமைதி
- மாண்பு என்று
கொண்டுரைத்தலுமொன்று. (சிந்தா - நச் - உரை - 3131). அம்மையான்
-
மோக்கத்தைத் தருவோனாகிய இறைவனது; அடிச்சண்டிப்பெருமானுக்கு
-
திருவடியடைந்த சண்டேசுர நாயனார்க்கும் எனவும், அம்மையான்
-
சேய்மைத்தாய மோட்சத்தைத் தருவோன். பெருமான்
- தலைவர் எனவும்
கூறுவர். க. சதாசிவம் செட்டியார்.
இறைவனாரது
மகனாரகப் பெற்ற பெருமை குறிக்க இந்நாயனாரது
அடிமைத் திறத்தை முதனூல் ஒன்றரை அடிகளாற் புகழ்ந்து போற்றிற்று. இதுபோலவே ஆளுடைய
பிள்ளையாராகிய மகனாரின்
அடிமைத்திறத்தினையும் முதனூல் போற்றிய அளவும் காண்க.
வகை
:- நன்மை மிகுந்த திருச்சேய்ஞலூரில் அவதரித்த
பெருமையால் மிக்கவராகிய, ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தில் வலிமை
மிக்க சண்டேசர், தமது தந்தையின் தாள்களிரண்டினையும் வெற்றி
பொருந்திய மழுவினால் எறிந்து, ஈசனது அழகிய திருமுடியின்மேல்
நன்மைமிகுந்த பாலினைச் சொரிந்து, பூக்களைச் சூட்டி, அருச்சித்த நல்ல
நிதிபோன்றவர் என்று அறிந்துகொள்ளுங்கள்.
குலம்
- நன்மை என்ற பொருளில் வந்தது. "குலப்பதி" முதலியவை
காண்க. குலம் ஏறிய - உயர்குலம் என்று கொண்டு,
மறையவர் வாழ்கின்ற
என்றலுமாம். " திருமறையோர் மூதூர்" (1206), "மறையோர் விளங்குபதி"
(1207) என்பது விரிநூல்.
குரிசில்
- பெருமையிற் சிறந்தோன்.
தலம்
ஏறிய விரல் தண்டி - இவரது விறல் எல்லா வுலகமும்
நிறைந்து எல்லாராலும் போற்றப்படுவது என்க. இதனை "எல்லா வுலகு
மார்ப்பெடுப்ப" (1262) என்று விரித்தது விரிநூல். விறலாவது
"நடமே புரியும்
சேவடியின் வழியன்பின் கடனே யியல்பாய் முயற்றிவரும்காதல் மேன்மேல்
எழுங்கருத்தின் திடமும்" (1221), ஆனினங்கள் தம்மை யணைந்து கறவாமே
பால் பொழிீந்த போது, அது திருமஞ்சனமாங் குறிப்புணர்ந்து பூசனை
விரும்பும் வேட்கை விரைந்தெழப்பெற்ற பண்பும் 1236), ஒருமை நினைவால்
(1242) ஒன்றுமுள்ளத்துண்மையினால் (1252) பூசனை புரிந்த திண்மையும்,
தந்தை தமது முதுகிற் புடைத்துக் கொடிதா மொழி கூறவும், மண்டுகாத
லருச்சனையின் வைத்தாராய் அவை ஒன்றுமறிந்திலராகி நின்ற உறைப்பும்
(1254), அவன் திருமஞ்சனப் பாற்குடத்தைக் காலாற் சிதறக் கண்டவுடன்
பதைத்து அவனைத்தந்தை எனவே யறிந்து, மழுவினால் அவனுடைய
தாள்களிரண்டினையும் சேதித்து, அவனுக்குக் கழுவாய் விதித்ததும்,
அருச்சனையில் வந்த இடையூற்றினை அகற்றி முன்போல அருச்சிக்கப்புக்க
திறலும் (1256) என்ற இவை முதலாயினவை. தண்டி - சண்டேசர் என்ற
பதம். குரிசில் - தண்டி - எறிந்து - பால்சொரிந்து - சூட்டிய நன்னிதியே -
கண்டீர் என்று முடிக்க. பால் சொரிந்து அலர் சூட்டி - எறிந்த என்று
மாற்றிக்கொள்க. நலமேறிய மழு - மருங்கு
கிடந்த கோல் எடுத்தார்க்குத்
திருவருளால் அதுவே மழுவாயிட்டமையால் நன்மைமிக்க என்றார்.
|