பக்கம் எண் :


மும்மையாலுலகாண்ட சருக்கத்திறுயிற் சுந்தரமூர்த்தி நாயனார் துதி1627

 

பிள்ளையாரும் ஆளுடையநம்பிகளும் இந்த இரண்டு தலங்களையும்
ஒன்றுசேர்த்துத் "துருத்தியும் வேள்விக்குடியும்" என்று திருப்பதிகங்கள்
அருளியிருக்கின்றமை காண்க. ஆயினும் இவை காவிரிக்கு வடகரையிலும்
தென்கரையிலும் உள்ள தனியாலயங்களாகக் காணப்படுவதனாலும்,
அவற்றுக்குத் தனித்தனி திருப்பதிகங்களுமுள்ளதனாலும் வேள்விக்குடியைக்
காவிரிக்கு வடகரை 23-வது தலமாகவும், துருத்தியைத் தென்கரை 37-வது
தலமாகவும் தலவரிசையில் கணித்திருக்கின்றனர். இறைவனார் பகலில்
பிரமசரிய வேடத்துடன் துருத்தியில் தங்கி, இரவில் வேள்விக்குடியில்
திருமணம் புரிந்து கொண்டனர் என்பது வரலாறு. "பகலிடம் புகலிடம்
பைம்பொழில்சூழ், வீங்குநீர்த் துருத்தியாரிரவிடத் துறைவர் வேள்விக்
குடியே" என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க.

     "நினைமறந்த......மாற்றிடு" இது நம்பிகள் திருத்துருத்தியில் இறைவரை
வேண்டிக்கொண்டது. புராணத்துட் காண்க. "அடியேன்மே லுற்றபிணி,
வருத்தமெனை யொழித்தருள வேண்டுமென வணங்குவார்" (ஏயர்கோன் -
புரா - 297) பார்க்க. துதியா - அவ்வாறு துதித்து.

     சொன்னவாறறிவாரிடை அருள் பெற்றவன் என்க. அருள் -
வேண்டிக்கொண்டவாறே பிணி நீங்கப்பெற்ற திருவருள். வேண்டிக்கொண்ட
அந்த அருள் எனச் சுட்டு வருவிக்க. "என்னுமிடம் படும்பிணி யிடர்கெடுத்
தானை", "பழவினையுள்ளன பற்றறுத் தானை", "உற்றநோ யிற்றையே
யுறவொழித் தானை" "அம்மைநோ யிம்மையே யாசறுத் தானை", "மேலைநோ
யிம்மையே வீடுவித் தானே" என்பனவாதி ஆளுடையநம்பிகள்
தேவாரங்களால் அவ்வாறருள்பெற்றமை விளங்கும். துதியா -
அருள்பெற்றவன்
- துதித்து அந்தப்படியே அருள் கிடைக்கப்பெற்றவர்.
"புதியபிணி யதுநீங்கி அக்கணமே மணியொளிசேர் திருமேனியாயினார்"
(ஏயர்கோன் - புரா - 299) என்றது காண்க.

     நினைமறந்த மதியேற்கு அறிகுறிவைத்த புகர் - என்றது
மறந்ததனால் அடையாளமாகத் திருமேனியிற் காணவைத்த நோய். புகர்
பிணியால் மேனியிற் காணும் புற அடையாளம். திருத்துருத்தியில் வரும்போது
நம்பிகளது திருமேனியில் புதியதாகிய ஒரு பிணியின் அறிகுறி
தங்கியதென்பதும், வலது கண் மறைந்ததாகிய ஒரு கண்பார்வையுடனிருந்தனர்
என்பதும் சரிதத்தா லறியப்படும். இது திருவொற்றியூரில் இறைவர்முன் செய்த
சபதத்தை மறந்த அபசாரத்தால் நேர்ந்ததென்று நம்பிகள் கருதியருளினர்
என்பது கருத்து. இது "என்னை நான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி யிடர்கெடுத் தானை" என்ற அவர் திருவாக்காலும்
கருதி அறியவுள்ளது. பின்னைமாற்றிடு- மறதியை மாற்றியதனால் என்றும்
நினைந்துள்ளேனாதலின் பின்னை அதன் மாற்றுக என்பது கருத்து.

      நிதியார் துருத்தி - செல்வநிறைவு காவிரியின் செழிப்பினால்
ஆகியது. "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்,
திரைத்தலைச்சுமந்து கொண் டெறிந்திலங்கு காவிரிக், கரைத்தலைத்
துருத்திபுக்கு" (திருவிராகம் - 1) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும்,
"பொன்மணி வரன்றியும்" (காந்தாரம் - 6) என்ற ஆளுடையநம்பிகள்
தேவராமும் காண்க. துருத்தி - ஆற்றிடைக்குறை. ஆற்றின் வண்டல்சேர்ந்த
தரையாதலின் அதனாலும் செழிப்பும் செல்வமுமுளதாம். "பொன்னியி னடுவு
தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும், துன்னிய துருத்தியானை"
(திருநேரிசை. - 3) என்ற ஆளுடைய அரசுகள் திருவாக்கும் காண்க.

     நற்றவனே - பெற்றவன் காண் என்க. நற்றவனாதலின் பெற்றனன்;
ஏனையோர்க்கு அவ்வாறு துதித்த அக்கணமே துதித்தவாறே பெறுதல்
அரிது என்பதாம். ஏகாரம் தேற்றம். பிரிநிலை எனினுமாம். காண் - காண்க
- கண்டுகொள்க.

     வைத்துப் புகர்பின்னை - என்பதும் பாடம்.