இவர்
அணையவொட்டாது அது விரைந்து போயிற்று. தொண்டர்
மூப்பினாலே விரைந்து பின்செல்ல மாட்டாதவராகி நிலத்தில் விழுந்து,
கையினால், தரையையடித்து, எழுந்து மிக்க துன்பத்தாற் கோபித்துச் சிவதா!
சிவதா! என்று இறைவரை நோக்கி அறைகூவி முறையிட்டனர். இதனை
எதிரே வந்த எறிபத்தர் கேட்டு, மிக்க கோபங்கொண்டு, ‘அடியார்க்கு
யானை வழிப்பகையன்றோ? அதனை வெட்டி வீழ்ப்பேன்' என்று, மழுவேந்தி
வந்து ‘இடும்பைசெய்த யானை எஙகுற்ற' தென்று சிவகாமியாரைக் கேட்க,
அவர் "அது இறைவருக்குச் சாத்தும் பூவைப் பறித்துச் சிந்திப் பிழைத்து
இத்தெருவே போயிற்று" என்றனர். ‘இது இனிப் பிழைப்பதெங்கே?' என்று
எறிபத்தர் பெருநெருப்பும் பெருங்காற்றும் கூடியது போலவிரைந்து எழுந்து
சிங்கம்போற் சென்று யானையைக்கிட்டி, மழுவை வலந்திரித்து வீசி அதன்
மேற் குலுங்கப் பாய்ந்தனர். மேனின்ற பாகரோடும் யானை திரிந்து இவர்மேற்
கதுவவே, அதன் நிலந்தோய் பெருந் துதிக்கை அற்றுக் கீழேவிழும்படி
தொண்டர் மழுவினாற் றுணித்தனர். அதன் பின்பு பாகரிருவர்,
குத்துக்கோற்காரர் மூவர் ஆக ஐவரையும் கொன்று நின்றார் எறி பத்தர்.
தாயின் தலையன்பின் முன் அச்சம் எதிர்த்து நிற்குமோ?
இவ்வாறு
இறந்துபட்டார் ஒழிய, வேறு உள்ளார் ஓடி அரசரது
அரண்மனை வாயில் காவலரிடம் பட்டவர்த்தனமும் பட்டது - பாகரும்
பட்டனர் என்றறிவிக்க, அவர்கள் அரசருக்கு அறிவித்தனர். அரசர்
அளவில்லாத கோபங்கொண்டனர். அதனால் யார் செய்தார்? என்றுங்
கேளாது உடனே எழுந்து புறப்பட்டனர். சேனைத் தலைவர் கட்டளைப்படி
நால்வகைச் சேனையும் வந்து நெருங்க, அரசர், ஒரு குதிரையின் மேலேறி
யானையும் பாகரும் பட்ட களத்தை அடைந்தார். அங்குப் பகைப்புலத்தார்
எவரையுங் கண்டாரில்லை. ஆனால் ஒரு மழுவேந்தி வேறிரு கையுடைய
யானைபோல நின்ற அன்பரை முன்பு கண்டார். சிவனடியாராதலின்,
இவ்வியானையைக் கொன்றவ ரிவரென்றெண்ணாராய், "யாவர் வென்றவர்?"
என்று வெடிபட முழங்கக் கேட்டனர். பாகர் "இவ்வியானைமுன் செல்லும்
அரசருமுளரோ? கொன்றவர் மழுவேந்திய விவரே" என்றனர். அரசர்,
"அரனடியார்கள் பிழைபடினன்றிக் கொல்லார்; பிழைபட்டதுண்டு" என்று
மனத்துட்கொண்டு, மேன்மேலும் வரும் சேனைகளின் வரவினை நிறுத்தித்,
தமது குதிரையினின்றுமிழிந்தனர். "இந்த மெய்த்தவர் யானைமுன்
சென்றபோது வேறொன்றும் புகுதாவிட்ட தவமுடையேனானேன்; கெட்டேன்!
இவ்வடியார் இத்தனையும் முனிவதற்குரிய என்ன பெரியபிழை நிகழ்ந்ததோ?"
என்று எண்ணினர்; அணுக வந்தவர்களை விலக்கினர்; அன்பர் முன்னர்த்
தொழுது சென்றனர்; "ஐயனே! அடியேன் ஈது அறிந்திலேன்; அங்கு
அடியேன் கேட்டதொன்று; அது நிற்க; இந்த யானையின் குற்றத்திற்குத்
தீர்வு அதனையும் பாகரையும் எறிந்ததே போதுமோ? அருள்செய்யும்" என்று
பணிந்து நின்றனர். அது கேட்ட எறிபத்தர், "சென்னியே! இறைவருக்குச்
சாத்தச் சிவகாமியார் கொணர்ந்த திருப்பள்ளித் தாமத்தை இந்த யானை
பறித்துச் சிந்தியதாதலின் அதனைத் துண்டித்து வீழ்த்தேன்; யானை தீங்கு
செய்யவும் அதனை விலக்காமையாற் பாகரும் பட்டனர்; இதுவே இங்கு
நிகழ்ந்தது" என்றார். அரசர், மிக அஞ்சிச், "சிவனடியார் தம்மைச் செய்த
இந்த அபசாரத்துக்குத் தீர்வு இவற்றாற் போதாது; என்னையுங்
கொல்லவேண்டும்; ஆயின் தேவரீர் கையிலுள்ள மங்கலம் பொருந்திய
மழுவினாலேகொல்லப்பெறுதற்கு யான் தகுதியுடையே னல்லேன்; இது அதற்குத் தக்கது" என்று
தமது உடைவாளை உருவி அவர் கையிலே
நீட்டினார். எறிபத்தர் அதுகண்டு பயந்து, "ஓ! கெட்டேன்! அளவற்ற
புகழாரது அன்புக்கும் அளவில்லாமை கண்டு அறிந்தேன்" என்று எண்ணி,
அவர் தந்த வாளினை வாங்கமாட்டாராயினும், அவர் தம்மைத் தாமே
மாய்த்துக்கொள்வர் என்று அஞ்சி, அதனைத் தடுக்கும்பொருட்டு
|