வாங்கினர். "என்னை
வாளினாற் கொன்று என் பிழை தீர்க்க ஓங்கிய உதவி
செய்யும் பேறு இவர்பாற் பெற்றேன்" என்று அவர் களித்தனர். அது கண்ட
எறிபத்தர், மேலும் பயந்து "யானையும் பாகரும் மடியவும் உடைவாளைத்
தந்து தம்மையும் கொல்லச் சொல்லும் இவ்வன்பர்க்குத் தீங்கு நினைத்தேன்
என்ற எண்ணம் விளைவித்தேன்; முன்னே என் உயிரைப் போக்கி
முடிப்பதே முடிபு" என்று உட்கொண்டு அவ்வாளினைத் தம் கழுத்திற் பூட்டி
அரியலுற்றார். அரசர் அது கண்டு "பெரியோர் செய்கை இருந்தபடி இது
என்! ஓ! கெட்டேன்!" என்று விரைந்து கூடி வாளினையும் அவர்தம்
கையினையும் சேரப் பிடித்துக்கொள்ளவே தொண்டர் வருந்தி நின்றார்.
அப்போது அளவிலாப் பேரன்பு காரணமாய் நேர்ந்த இவ்விடுக்கண் எல்லாந்
தீர்க்கக் கண்ணுதற் பெருமானருளாலே "அன்புமிக்கீர்! தொண்டினிலையை
உலகிற் காட்டும் பொருட்டு மலரை யானை சிந்தும் செயல் திருவருளினாலே
கூடிற்று" என்று திருவாக்கு ஆகாயத்தில் எழுந்தது; யானையும் பாகரோடும்
எழுந்தது. எறிபத்தர் வாளினை விட்டு அரசர் பாதத்தில் வீழ்ந்து
வணங்கினார். அரசர் வாளைப்போக எறிந்து எறிபத்தர் பாதங்களைத்
துதித்து வணங்கினார். இருவரும் எழுந்து அசரீரியாய் எழுந்த
திருவாக்கினைத் துதித்து நின்றார்கள். பூங்கூடையில் மலர்கள்
நிறைந்திடக்கண்டு சிவகாமியாரும் வாழ்ந்து நின்றார். உறங்கி விழித்துதுபோல்
எழுந்த யானையைச் செலுத்திப் பாகரும் அணைந்தனர். எறிபத்தர் வேண்ட,
அரசர் யானையினை மேற்கொண்டு தமது திருவளர் கோயில்புக்கனர்.
சிவகாமியார் தம்பிரான் பணிமேற்கொண்டு சென்றனர். "அரனடியார்கள்
அறிதற்கரியார்" என்று வியந்து எறிபத்தர் தமது நியதியான திருப்பணி
நோக்கிச் சென்றார்.
இவர்பின்னர்ப்
பல்காலம், இத்தன்மையவாகிய வன்பெருந் தொண்டுகள்
செய்து வாழ்ந்து முடிவில் திருக்கயிலையிற் கணநாயகராய் விளங்கினார். எறி
பத்தரது ஆண்மையும் வளவனார் பெருமையும் இவர்க்கு நாளும் அருளும்
இறைவனே அளக்கிலன்றி மற்றுயாவர் அளந்தறியவல்லார்?
தலவிசேடம்
:- கருவூர் :- இத்தலம் கொங்குநாட்டிற் பாடல் பெற்ற
ஏழு தலங்களில்ஒன்று. ஆம்பிராவதிநதியின் வடகரையிலுள்ளது. காமதேனு
வழிபட்டு வரம்பெற்ற காரணத்தால் இதன் ஆலயம் ஆனிலை
என்று பெயர்
பெறும். காமதேனு திருப்பேரூரிற் பட்டிப்பெருமானைப் பூசித்து அவரது
திருநடங்கண்டு, பின்னர் அவரது அருள் வழியே சென்று இத்தலத்தை
அடைந்து பூசித்துப்பேறு பெற்றதென்பது வரலாறு. பலமுனிவர்கள் ஆமிர
(மாமரம்) உருவமாகி நின்று இதன் கரையிற்றவஞ் செய்த காரணத்தால்
இந்நதி இப்பெயர் பெற்றது. ஆன்பொருனை என்பது ஆம்பிராவதி எனமருவி
வழங்குவதென்பதும் ஒரு கொள்கை. திருவிசைப்பா அருளிய கருவூர்த்தேவர்
கதியடைந்த தலம். இவர் சந்நிதி தனியாகத் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது.
இத்தலம் சோழர்கள் முடிசூடும் தலைநகரங்கள் ஐந்தில் ஒன்று.
இது
தென்னிந்திய இருப்புப் பாதையில் ஈரோடு - திரிச்சிராப்பள்ளிப்
- பிரிவில் கரூர் என்ற நிலையத்தினின்று
மேற்கில் கற்சாலையில் ஒரு
நாழிகையளவில் அடையத் தக்கது. பதிகம் 1. சுவாமி - பசுபதீசுவரர்.
தேவியார் - சவுந்தரியவல்லி, கற்பகவல்லி என்ற இருவர்.
கற்பனை:-
(1) புதிதாக நாடு கொண்ட அரசர் பகைப்புலத்தவர் தம்
நாட்டுக்குள் வரக்கூடிய பலவழிகளையும் அடைத்துக் காவல்
பொருந்தியதொரு புதுவழி உண்டாக்குதல் நாடு காவல்செய்
முறைகளிலொன்றாம்.
(2)
அடியவர் தொண்டினுக்கு அடாதன அடுத்தபோது முன்வந்து
தீர்த்து அவர்தந் திருத்தொண்டினை முட்டின்றி நிகழச் செய்தல் பெருந்
திருத்தொண்டாகும்.
(3)
அன்போடும் விதிப்படி உரிய பூப்பறித்துத் தொடுத்துக் காலத்திற்
சிவனுக்குச் சாத்துதல் அரியதோர் சரியைத் திருத்தொண்டாகும்.
|