பக்கம் எண் :


774 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

என்றதனால் அரனுக்கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள் -
(71) என்றபடி அடியார் தோற்றங் காட்டும் மெலியனாகிய அதிசூரனுக்கு
வலியராகிய நாயனார் தலைவணங்கித் தாழும் இச்சரித நிகழ்ச்சி
பற்றியதோருட்குறிப்பும் நிற்பது காண்க. இவ்வாறு உலகியற் பொருள்களை
அவ்வச்சரிதக் குறிப்புக் கண்ணாற் கண்டு காட்டுதல் ஆசிரியர் மரபு.

     வாழக்குடிதழைத்து - வாழ - மேற்கூறியவாறுள்ள நிலவளத்தால்
வாழ்வடைய. குடி தழைத்து மன்னிய - குடி அரச அங்கம் ஆறனுள்
ஒன்று, "படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், ஆறு, முடையானரசருள்
ஏறு" என்பது குறள். வாழ என்பதனைச் சாலி என்பதனோடு சேர்த்து சாலி
தன்மையதாகி வாழ என்றலுமாம்.

     தழைத்து - மக்கள், செல்வம் - அறிவு ஒழுக்கம் இறைவன் வழிபாடு
- முதலியவற்றால் மிகுத்து. மன்னிய - நிலைபெற்ற. வழிவழியாய் வந்த.
வாழ் அக் குடி
என்று பிரித்து வாழ்கின்ற அந்தக் குடிகள் என்றலுமாம்.

     ஈழக்குலம் - இஃது சான்றார் குடிவகைகளில் ஒன்று. ஈழம் இங்கு
ஈழநாட்டின் றொடர்பு பற்றியதோ என்று சிலர் ஐயங் கொள்கின்றனர். ஈழம்
- கள் என்ற பொருளில் வழங்குதலின் ஈழக்குலம் என்றது கள் இறக்கும்
தொழில் பூண்ட குலம் என்றும், அது சான்றார் மரபில் ஒருபிரிவு என்றும்
கூறுவர். மலைநாட்டில் இத்தொழில் செய்பவர் ஈழுவர் என்ற
பெயரால்வழங்கும் ஒரு சாதியினர் உண்டு. கொங்கு நாட்டில் இத்தொழில்
செய்வோர் சான்றார் (சாணார் என மருவி வழங்குவது) என்ற மரபுப்
பெயரால் வழங்கும் ஒரு சாதியினரும் உண்டு.

     இங்கு ஆசிரியரும், வகை நூலுடையாரும், புராண சாரமுடையாரும்
ஈழக்குலம் என்று குலத்தோடு புணர்த்தியே கூறியிருத்தலின் இது ஈழம்
என்ற நாட்டின் றொடர்பாற் போந்ததென்று கொள்ளுதற் காதாரமின்
றென்பர். புராண வரலாற்றில் குலங் குறியாது சான்றார் ஏனாதிநாதர் என்று
கூறினார். குலம் - மரபின் உட்பிரி வென்பது வழக்கிலும் காண்க. சான்றார்
- சான்றவர் மரபினர். சான்றார் ஏனாதிநாதனார் என்க. பெயர்ப் பயனிலை
கொண்டது.

     ஏனாதிநாதனார் - "ஏனாதிநாதன்" என்ற முதனூலாட்சியை
எடுத்தாண்டபடி. இச்சரிதத்துப் பிறஇடங்களிலும் (607, 614, 618, 632, 644,)
இவ்வாறே கூறியதும் காண்க. "ஏனாதிநாதனை" என்று வகை நூலிலும்,
"ஏனாதி நாதர்" (11) என்று புராண சாரத்தினும், புராண வரலாற்றினும்,
"நீண்டபுக ழேனாதி நாதர்" என்று திருநாமக் கோவையினும் ஒப்பக்
குறித்தல் காண்க. ஏனாதிநாதர் என்பது அவர் பெயர் போலும். எனவே
ஏனாதிநாயனார் என்று குறித்த பதிப்புக்கள் தவறென்க.

     ஏனாதி என்பது முன்னாளில் அரசர் சேனைகளின் அதிபர்களாகிய
உத்தியோகத்தின் பெயர் என்றும், இதற்கடையாளமாக நெற்றியி லணியும்
ஏனாதித் தங்கப்பட்டமும் விரலுக்கு ஏனாதி மோதிரமும் அரசர்கள் தருதல்
மரபாமென்றும், சிந்தாமணி - மணிமேகலை-புறநானூறு முதலிய பழந்தமிழ்
நூல்களால் அறிகின்றோம். ஏனாதி, எட்டி, காவிதி முதலியன
பட்டப்பெயர்களாம். (தொல் - பொருள்). நாதர் - தலைவர் - முதல்வர்
- என்ற பொருளில் வந்தது. Commander-in-Chief  முதலிய நவீனப்
பெயர்களும் காண்க.

     ஏனாதி நாதர் என்பது இவ்வாறு அவரது உத்தியோகப் பெயராய்
நின்றதோ? அன்றித் "தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலா
மாசிரியத் தன்மை" (614) என்றதனால் அதுவே இக்குடியில் வந்த
முதல்வர்க்கு இயற்பெயராய் வழங்கிற்றோ? என்பது ஐயம். குலச்சிறை -
என்ற பெயரும் இவ்வாறே காணப்படுமென்பர். இப்பாட்டான், நிலவளம்,
குடிவளம் நாயனாரது பெயர், மரபு ஆகிய பலவும் கூறினார்.

     தன்மையவாய் - என்பதும் பாடம்.