(இ-ள்.)அடல்...முகம் - வலிமையுடைய போர்வீரர்களில்
இறந்தவர்களுடைய விரிந்த முகங்கள்; உயிருள...துன்றலில் - உயிர்
உள்ளனவென்று எண்ணியபடியால், அவற்றைப் பொருந்தச் சிறைவிரித்துப்
பறந்துவந்த கரிய காக்கைகள், அணுகாது, பக்கத்துச் செல்வனவும்,
சுழல்வனவுமாகக் கூடியதனால் (அவற்றினிடையில்); விடுசுடர் விழிகள் -
சுடர்விட்டு விளங்கும் (வீரரது) கண்கள்; இரும்பு...நிகர்ந்தன - இருப்புவினை
செய்யும் கருங்கொல்லர் தம் உலையிலே மேலே பொதிந்து பக்கத்து
நிறைந்த கரியினிடையே பொங்கிய புகைவிடும் தீயையொத்தன.
(வி-ரை.)
அடல் - வலிமை. முனை - முனைத்தல். போரில்
எழுதல்.
அடலும் முனைப்புமுடைய. அடல்முனை - போர்முகத்தில்
என்றுரைப்பாருமுண்டு.
மறவர்
மடிந்தவர் அலர்முகம் - மறவர்களில் மடிந்தவர்களது
மலர்ச்சியுடன் விளங்கிய முகம், மடிந்தவர் முகம் -
பிறிதினியைபு நீக்கிய
விசேடணம். இரு பக்கமும் மடியாது எஞ்சியவர் பலராதலின் அவர்களைப்
பற்றியன்றி மடிந்தவர் முகம் பற்றியே இங்குக்குறித்தது
என்பதாம். வீடாது
மிக்கொழிந்த தம்முடைய பல்படைஞர் - (632) எஞ்சி எதிர்நின்ற
விகன்முனையில் வேலுழவர் - (633) என்றவை காண்க.
அலர்
முகம் - போர் வீரர் உற்சாகத்துடன் மலர்ந்த முகங் கொண்டு
போர் செய்தல்மரபு. ஆதலின் போரில் வெட்டுண்ணும்போது இருந்தமலர்ந்த
நிலையிலே அவர்முகங்கள், வீழ்ந்த பின்னரும் இருந்தன என்பது,
கண்ணினைக் கொண்டே முகமலர்ச்சி அறியப்படுதலான் அவர்கண்கள்
சுடர்விட்டபடியிருந்தன என்பார் விடு சுடர்விழிகள் என்றார்.
முகம்
அலர்ந்திருந்தது; விழிகள் சுடர்விட்டு நின்றன; இவை ஆன்மப்
பிரகாச முணர்த்துவன ஆதலின் காக்கைகள் அவை உயிருள்ளனவென்று
கொண்டு நெருங்காது பறந்து சுழன்று கூடின என்பது. உயிருள எனக்
கருங்கொடி எண்ணுதற்குக் காரணங் கூறியபடி. ஆயின் இங்கு
உளிரொளியின்றியும் முகமுங் கண்ணும் ஒளி கொண்டது சடுதியிற்
சாங்காலத்து நின்ற நிலையின் நீடிப்பு என்பதைக் காக்கைகள் உணர்தற்குரிய
அறிவற்றன ஆதலின் மயங்கின என்க.
என்று
- என எண்ணியபடியாலே, உறு -
அங்கு நிணமுண்ண வந்த.
படர் சிறை சுலவு கருங்கொடி - விரித்த சிறகுடன்
சுழன்ற கரிய
காக்கைகள். காகமிடைந்த களத்தினில் (622) என முன்னரே இவை
கூடியதனைக் குறித்தது நினைவுகூர்க.
படர்வன
சுழல்வன துன்றலில் - எண்ணி வந்த செயலைச்
செய்யமாட்டாமலும் அகல்வதற்கு மனமில்லாமலும் சுற்றிக் கூடுதலாலே.
துன்றலில் - துன்றுதலினாலே. துன்றலில்
விடுசுடர் என்று கூட்டி
நெருங்காதபடி ஒளிவிடுகின்ற என்றும், கொடிதுன்றல் இல்
- காகங்கள்
நெருங்குதல் இல்லை என்றும் இன்னும் பலவாறும் கூட்டி உரைப்பாருமுண்டு.
சுடர் விடு விழிகள் - என மாற்றுக.
உலையின்
முகம் பொதி புடை மிடை கரியிடை - உலையின்
முகம் பொதி கரி - உலையின்புடை மிடை கரி என்க. உலைமுகத்தும்
பக்கங்களினும் சேர்ந்த கரியினிடையே.
புகை
விடு தழல் - கரிய புகைவிடும் தீ. சினத்தாற் புகைவிட்டுச் சீறி
நின்ற விழிகள் அவ்வாறே நின்று காணப்பட்டன. ஆதலின் புகை விடுதழலை
ஒத்தன வென்றார், "புகைபோகுகொடிக்கள் வளைத்தெதிர் செங்கண்
விழிக்கனல்" (624) என்ற விடத்துக் கூறியவை காண்க.
உலைக்களம்
- போர்க்களமாக, கொல்லர் - போர் மள்ளராக,
கரி காகங்களாக, தழல் சுடர்விடு கண்களாக ஒப்புமை கூறிய
தொடர்புவமமாகக் கண்டுகொள்க. கோபத்தீயானது வீரர் செத்த பின்பும்
கண்களிற் சுடர்விட்டதென அவர்களது வீராவேசத்தின் செறிவு கூறப்பட்டது.
|