பக்கம் எண் :


800 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     கொடி படர்வன சுழல்வன துன்றலில் - வினைஞர் - உலையின் -
கரியிடை - தழலை - விழிகள் - நிகர்ந்தன - என்று கூட்டி முடிக்க.

     நிகர்த்தன என்ற பாடம் தவறு. நிகர்த்தன என்பது நிகர்த்தன எனச்
சந்த நோக்கி விகாரமாயிற்று.

     கொடி பயில்வன - பொங்கிய புகை - தழனிகர்கின்றன -
என்பனவும் பாடங்கள். 23

631.


திண்படை வயவர் பிணம்படு செங்கள் மதனிடை முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினு முன்செயல் குன்றுத லிலர்
                                   தலைநின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர் குமரரை    
                                      வென்றனர்.
24

     (இ-ள்.) திண்படை...முன் சிலர் - வலிய படைவீரர்கள் பட்ட
பிணங்கள் வீழ்ந்த சிவந்த களத்தில் முன்னே சிலர்; புண்படு......தலைநின்றனர்
- படைகளால் ஊறுபட்ட புண்வாய் வழியே சொரிந்த குடர்களை மிக்குக்
கூடிய பருந்துகளோடு கழுகுகள் பற்றி மேலெழுகின்ற காலத்திலும் சரியாது
தமது முன்னைச் செயலாகிய போரில் முயற்சி யுடையராகும் அவர்கள்;
விண்படர் ... வென்றனர் - விண்ணிற் செல்கின்ற - காற்றாடிப் பட்டம்
விடுகின்ற, இசை பயில்கின்ற வித்தியாதரர் சிறுவர்களை வென்றனர்.

     (வி-ரை.) வயவர் - போர் மள்ளர். வெற்றிதரும் போர்த் தொழில்
செய்வாராதலின் வயவர் எனப்படுவர். வயம் - வெற்றி.

     பிணம்படு செங்களம் - உடல்கள் பிணங்களாக்கப்பட்டதனாலாகிய
குருதி பரத்தலாற் சிவந்த போர்க்களம்

     முன் - பிணமாய்ப் பட்டு வீழ்வதன் முன்னே, இங்குக் குறித்த
குடர்சரிந்து கழுகெடுத்த வீரரும் பின்னர்ச் சில நேரத்தில் பிணமாய் வீழ
உள்ளாராதலின் அவ்வாறு வீழுமுன் என்க.

     புண்படுவழி......தலைநின்றனர் - மாற்றாரது வாள் முதலியவற்றால்
உடலில் ஊறுபட்டுப் புண்ணாகியது. உள்ளிருந்து அந்தப் புண்வாய்
திறந்தவழி வெளியே குடர் சொரிந்தது. நீண்டு கயிறு போலச் சொரிந்து
வழிந்த அக்குடர்களைக் கழுகும் பருந்தும் பற்றிக்கொண்டு மேல்பறந்தன.
அதனால் இவர்களும் நிலத்தினின்றும் தூக்கிச் செல்லப்பட்டு மேற்போந்தனர்
என்றதுமாம். அப்போதும் சலியாது தாம் முன் செய்த அப்போர்த் தொழிலின்
முயற்சியிலே முனைத்தனர் என்பதாம். குடல் - 626ல் உரைத்தவை பார்க்க,
குடர் சொரிதலால் சிறிது போதிற்சாகும்படி புண்பட்ட பின்னரும்
உயிர்போகும்வரை முனைந்து நின்றனர் என இவர் வீரத்தின் உறைப்புக்
காட்டியபடி.

     முன் செயல் - தாம் செய்த வாட்போர் முதலியவாற்றால் தன்னை
எதிர்ந்தவனை அடர்க்கும் செயல். முன் - கழுகு குடர்கொண்டெழுமுன்.

     குன்றுதல் இலர் - குறையாதவர்களாகிய - சலியாது. முற்றெச்சம்
முன் செயல் குன்றுதலிலர் தலை நின்றனர் எனக் கூட்டி முடிக்க.

     தலைநின்றனர் - ஒரு சொன்னீர்மைத்தாய் முயன்று செய்தல் எனப்
பொருள்படும். "தூபஞ், சாலவே நிறைந்து விம்ம விடும்பணி தலைநின்
றுள்ளார்" - (குங்குலியக்கலய நாயனார் புராணம் - 6), "முன்னை நல்வினைத்
தொழிற்றலை நின்றனர்" - (வெள்ளானைச் சருக்கம் - 49) முதலியன காண்க.
தலை - ஏழாவதனுருபெனக் கொண்டு செயலிற் சலியாது நிலைத்து நின்றனர்
எனவும், தலையில் - சிறந்து நின்றனர் எனவும் உரைப்பாருமுண்டு.
இவ்வாறன்றி நின்றனர் - கீழ் வீழாது நிற்றலைச் செய்தனர்
என்றுரைப்பாருமுளர்.