பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்803

 

பார்த்துச் சிலரைச் சிரமும், (அது கிட்டாதபோது) சிலரைப் படைபிடித்த
தோளும், அக்குறியும் கிட்டாதபோது சிலரை அவர்களது போர் முயற்சிக்குத்
துணையாகிய தாளும் துணித்துவீழ்த்தார். எவ்வாற்றானும் மேலடர்ந்து
பொராத நிலையினை விளைத்தனர் என்பது. தாம் - தாமே, பிறருதவியின்றித்
தாமொருவரே. உரம் - வலிமை. தோள் உரமும் தாளும் என்று பாடங்
கொண்டு தோளும் மார்பும் காலும் என்றுரைப்பாருமுண்டு. தாள்
துணிப்பதுபற்றி 627ல் உரைத்தவையும் காண்க. தோளும் தாளும் துணித்தார்
என்னாது தோள் உரமும் தாள் உரமும் என்றது தோள் துணிப்பதும் தாள்
துணிப்பதும் அவர் கருத்தன்று; அவர்களது போர் வலிமை தவிர்ப்பதே
குறியீடாகக் கொண்டு அதற்கு வேண்டிய அளவே துணித்தலைச் செய்தனர்
என்றாதாம். 26

634.
தலைப்பட்டா ரெல்லாருந் தனிவீரர் வாளிற்
கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதி
லலைப்பட்ட வார்வமுதற் குற்றம்போ லாயினார். 27

     (இ-ள்.) வெளிப்படை. கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும், ஒப்பற்ற
வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற் கொல்லப்பட்டொழிந்தனர். இது
கண்டு, வந்தெதிர்க்காத படைஞர் படுகளத்தை விட்டு, நிலைத்த
மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல
ஆயினார்கள்.

     (வி-ரை.) தலைப்படுதல் - கூடுதல் - ஒன்றுதல். இங்குப் போரில்
முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல் குறித்தது. "தன்னை
மறந்தாடன் னாமங் கெட்டா டலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே"
(திருவாரூர்த் திருத் தாண்டகம்) என்றது அப்பர் சுவாமிகள் திருவாக்கு.
"தலைப்படுஞ் சார்வு நோக்கி" (திருஞான புரா - 1244) என்றதும் காண்க.
அதிற்றலைப்பட்டான் - தலையிட்டான் - அதற்குத் தலைகொடுத்தான் என்ற
உலக வழக்குக்களும் காண்க. போராதலின், இங்கு உவமை முகத்தானன்றி
உண்மையானும் தலையையே பட முனைந்தார் என்ற சுவையும் காண்க.

     வாளிற் கொலைப்பட்டார் - இல் - ஐந்தனுருபு ஆல் எனக் கருவிப்
பொருளில் மூன்றனுருபாக வந்த உருபு மயக்கம். வாளினாற் கொலையுண்டார்.
படு விகுதி செய்யப்பாட்டு வினைப்பொருள் தந்தது.

     முட்டாதார் - மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர் வந்து
போரில் முனையாதவர்கள்.

     கொல்களம் - போர்க்களம். ஓர் இடத்திற்குப் பெயர் அவ்வப்போது
அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு இந்த இடம், முதலில்
இந்தவெளி (620) என்றது, போர் குறித்து இருபடையும் சேர்ந்தபோது
"செருக்களம்"(621) ஆயிற்று. அதன்பின் போர் மூண்டு நிகழும்போது
போர்செய்களம் (625) என்றாயிற்று. பின் படைஞரது போர் ஓய்ந்தபின்
மேலும் போர் நிகழ நிற்றலின் பறந்தலை (626) எனப்பட்டது. இங்குத்
தனிவீரர் வாளிமுன் எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது
கொல்லப்பட்டாராதலின் கொல்களம் எனப்பட்டது காண்க. பின்னர்
இவ்வகையிலும் நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம் (638) அக்களம் (639),
(640), இடம் (642) எனப்படுவதும் காண்க.

     கொல்களத்தை விட்டு...குற்றம்போல் ஆயினார் - கொல்களத்தில்
அவர்கள் கொல்லப்ப டவுமில்லை. காணப்படவுமில்லை. ஆதலின் அவர்தாம்
யாதாயினர் எனின் மெய்யுணர்வு வெளிப்பட அதன்முன் ஆர்வம் முதலிய
குற்றங்கள் யாதாகுமோ அது போல் ஆயினர் என்க. செயலற்றுப் போய்
அங்கு எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து மறைந்தனர்
என்னாது "குற்றம்போல் ஆயினார்" என்றிவ்வாறு கூறியது அவர்கள்
யாதாயினர்