வருவனவேயாம். உடம்பை
அறுத்துக் குணஞ்செய்யும் மருத்துவன்போல
இங்கு இறைவனருளே பற்றலர் கைவாளால் நாயனாரது உலகத்தொடர்பை
அறுத்து அவருக்கு இறைவனையென்றும் பிரியா அன்பு நிலையாகிய நித்திய
வின்பத்தையளித்தது.
20.
கொலைதீது என்பது ஒரு நீதி; தன்னைக் கொல்லவந்தானைக்
கொல்க என்பது மற்றொரு நீதி. போர் முனையிற் பகைவனைக் கொன்று
வெல்வது நேர் போரின் உலக நீதி. அங்ஙனங் கொல்லாது விடுத்தல்
இந்நீதியிற் பிழை. தற்கொலை பாவம். அவ்வாறே பிறர் தம்மைக் கொல்ல
வந்தபோது தற்காக்கும் வலி பெற்றிருந்தும், தற்காத்துக் கொள்ளாது பிறனாற்
கொலையுண்ண நிற்றல் தற்கொலையோடொப்பப் பாவமாம். இவையெல்லாம்
உலக நிலையிற் புண்ணிய பாவங்களுக் கேதுவாகிய அறநூல் விதிகள்.
இவ்விதிகள் இங்கு நாயனார்பாற்சாரா என்க; என்னை? சாமானியமாக
உலகியலறநூல் விதிகள் உலகிறந்த நிலையில் நிற்கும் எந்தம் பெருமக்கள்
செயல்களை அளக்கும் அளவு கோல்களாகாமையினென்க. இவைபற்றி 364-ல்
உரை பார்க்க. அன்றியும் இவ்வறநூல் விதிகள் உலகில் நல்வாழ்வும்
மறுமையில் - புண்ணிய பாவப்பயனும் அளிக்க வல்லனவன்றி வீடாகிய
உறுதிப் பயன் றருவன அல்ல. மக்களது உலக வாழ்க்கையின் பயனாவது
வீடுபேறாம். வீடுபெறுவது சாத்தியப்பொருள்; வாழ்வு அதற்குச் சாதனம்.
சாதனத்தால் அடையப்படு பொருளாகிய வீட்டு நிலையைப் பெறவரும்
இச்சமயம் அதனைக் கைவிட்டு உடலை ஒம்பி உயிர் வாழ்வதாயின் அதுவே
தற்கொலையாகும் என்பது இறைவனூற்றுணிபு.
21.
இங்கு அதிசூரன் சிவனடியாரைப் பகைத்து வஞ்சித்து எரிவாய்
நரகினையடைந்தான் என்க. இவ்வாறே மெய்ப்பொருணாயனாரை வஞ்சித்த
முத்தநாதனும் நரகினை அடைந்தவனானான். "பகைத்து நரகினைச்
சென்றடைந்தோர்" (38) எனத் திருத்தொண்டர்புராணவரலாற்றில்
உமாபதிசிவனார் அருளியதுங் காண்க. "பாதகன்" என ஆசிரியர் குறித்ததும்
உன்னுக. ஆயின் இவன் நெற்றியில் நீறு கண்டபொழுதே சீர்
அடியாராயினார் என்று நாயனார் கொண்டொழுகினரே யெனின்,
அஃதுண்மையே! அது நாயனாரின் மனநிலை. அப்பக்கம் அதுவே அவர்க்கு
வீடளித்தது. ஆயின் இப்பக்கம், அதுவே அரனடியாரை வஞ்சித்துத்
தீங்கிழைத்த பாதகப்பயன் தந்து இவனை நரகத்திற் செலுத்துதற்கும்
இழுக்கில்லை. நாயனாரின் நல்லொழுக்கம் அவர்க்கு நற்பயன் தருவதாமன்றி
அவ்வொழுக்கத்து நில்லாத பிறர்க்கு நற்பயன் றராதென்க. "பாவ மறுப்பது
நீறு", "முத்தி தருவது நீறு" என்பன முதலாகச் சொல்லப்பட்ட வேத விதிகள்
அதிசூரன்பாற் பொருந்தாவோ? அவன் பூசிய நீற்றினால் அப்பயன்
அடையானோ? எனின் அடையான். என்னை? அவன் நீற்றைப் பேணி
யணியாது உள்நெஞ்சில் வஞ்சக்கறுப்பு முடன்வைத் தணிந்தான். "வேட நெறி
நில்லார் வேடம் பூண்டென் பயன்?" என்பது திருமந்திரம் - முதற்றந்திரம் -
(128) இவன் வஞ்சம், அழுக்காறு, அவா முதலிய மனக்குற்றங்களெல்லாம்
பொருந்தினான். போர்நீதியறத்தினின்றும் வழுவினான். பொருட் பற்றினால்
விழுங்கப்பட்டான். ஒரு சிறிதும் பரனை நினைந்தானலன். "பரனை நினைந்து
இம்மூன்றும் விட்"டார்க்கு வரும் திருநீற்றுப் பயனை இவன் எங்ஙனம்
அடைவான்? என விடுக்க.
விரும்பி
யுண்ணினும் விரும்பாது வெறுத் துண்ணினும் பலன் றரும்
மருந்து போலத் திருநீறு பவநோய் தீர்க்கும் பெரு மருந்தன்றோ? எனின்,
அதுவுண்மையே! நோய் மிக வலிமைப்பட்டமையால் மருந்து உள்ளே புக்குப்
பயன்றரா நிலையுற்ற பிணியாளன்பால் அம்மருந்து மேனின் றொழிவதுபோல
ஈண்டு இப்பெருமருந்தாகிய திருநீறும் உட்செல்லாது விடுதலிற்பயன்றரு
மாறில்லை என்க.
|