22.
அடியார்க்கு வரும் ஏதங்களை வாயினாற் சொல்லுதலும் பாவம்
பயக்கும்.
23.
நிராயுதரைக் கொல்வது போர் முறையன்று. அது பழியாம்.
24.
உயிர்கள் தனித்து நில்லாது ஒரு சார்பு பற்றியே நிற்கும் இயல்பின.
உடல், பொருள், உறவு முதலிய நிலையில்லா உலகச் சார்புபற்றி ஒழுகாது,
சாத்திர உணர்ச்சி, குரு உபதேசம் முதலியவை வாய்க்கப் பெறுதல்
நல்வினைப் பயத்தால் உளதாம். அதனால் சிவசாதனச் சார்பு பற்றி ஒழுகும்
ஒழுக்கம் வரும். இடையூறாக எதுவரினும் அதனிற் பிறழாது ஒழுகினால் அது
சிவனிடத்திற்சேர்க்கும். இங்கு நாயனார் உடல் - பொருள் - முதலிய பொய்ச்
சார்புகளை விட்டுத் திருநீற்று வழிபாட்டின் நலம் என்றும்
குன்றாதொழுகியதனால் இறைவனைப் பிரியா அன்பு நிலை அடைந்தனர்.
25.
திருநீறு அரனைப்போலவே தொன்மை யுடையதும்
அழிவில்லாததுமாம். திருநீற்றின் உண்மை வழிபாடு உயிருக்குப் பாசநீக்கமும்
சிவப்பேறும் தரும். திருநீற்றினை உபாசனை செய்வது சிவனை உபாசனை
செய்வதாம். திருநீறு அருட்சத்தியின் உருவம். "பராவண மாவது நீறு" என்பது
தமிழ்மறை. (வண்ணம் - வணம் என நின்றது.) அருட்சத்தி திருநீற்றினைக்
கருவியாகக் கொண்டு அதனிடமாய் நின்று தன் தொழில் செய்யும். தன்னொடு
நீங்காது பொருந்திய குணமாகிய அருட்சத்தியை யுடையவன் இறைவன்.
எனவே, குணியாகிய அவனோடொப்பக் குணமாகிய அருளும் அதன்
கருவியாகிய திருநீறும் அநாதியேயாம்.
"தேசமலி பொதுஞானச்
செவ்வொளியுந் திகழ்பதியா
மீசனது நடத்தொழிலு மிலங்குபல வுயிர்த்தொகையும்
பாசமுமங் கதுகழியப் பண்ணுதிரு வெண்ணீறு
மாசிறிரு வெழுத்தஞ்சு மநாதியிவை யாறாக" |
என்ற கோயிற் புராணப்
பாயிரத் திருவாக்குங் காண்க.
ஏனாதிநாதநாயனார்புராணம்
முற்றும்
எயினனூர்த்
தலக்குறிப்புக்கள் சில :- இத்தலம் ஏனனூர் எனவும்
வழங்கப்பெறும். இதன் கிழக்கே ஒரு நாழிகையளவில் திருநறையூர்ச்
சித்திச்சரமும், வடக்கே ஒரு நாழிகையளவில் அரிசிற்கரைப்புத்தூரும்,
மேற்கே ஒரு நாழிகையளிவில் (மருத நல்லூர் என வழங்கும்)
திருக்கருக்குடியும் உள்ளன. கருக்குடியிலிருந்து எயினனூருக்கு நேரே ஒரு
பாதை உண்டு. கோடைக்காலத் தவிர ஏனைக்காலங்களில் இத்தலத்துக்குச்
செல்லுதல் மிகச் சிரமம். எயினனூர் என்பது
மதில் காரணமாக வந்த
பெயரென்றும். ஏனாதி என்பது சேனாபதி என்பதன் மரூஉ என்றுங் கூறுவாரு
முண்டு.
இத்தலக்குறிப்புக்களும்
திருவுருவப் படிமங்களும்பெறப் பெருமுயற்சி
செய்து உதவினவர்கள் எனது அரிய நண்பர்களான பண்டிதர் - திரு.
அ.
கந்தசாமி பிள்ளை அவர்களும், திரு. T.
V. சதாசிவபண்டாரத்தார்
அவர்களும், திரு. மு. அருணாசலம் M.A., அவர்களுமாவார்கள்.
திருவுருவப் படிமங்கள் எடுத்து உதவியவர் கும்பகோணம் தேவார
பாடசாலைத் தாபகர் - திரு. உத்தண்டி செட்டியாரவர்களின்
புதல்வர்
திரு. சாட்சிலிங்கஞ் செட்டியார் அவர்கள், இவர்களுக்கு எனது
கடப்பாடுடைய நன்றி உரியது.
|