10.
கண்ணப்ப நாயனார் புராணம்
|
தொகை
"கலைமலிந்த
சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்"
-
திருத்தொண்டத் தொகை
வகை
"நிலத்திற்
றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே"
-திருத்தொண்டத்தொகை
|
விரி
650.
|
மேவலர்
புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்ப
நாவலர் புகழ்ந்து போற்று நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு. 1
|
புராணம்
:- தமது கண்ணையிடந்து இறைவனது கண்ணிலே
அப்பியதனாற் கண்ணப்பர் என்று பேர் பெற்ற நாயனாரது வரலாறும் பண்பும்
கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலைமலிந்த சருக்கத்து மூன்றாவதாகிய
கண்ணப்ப நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- கலைகள் யாவற்றினும் மேம்பட்டு விளங்கும்
சிறப்பினைப்பெற்ற தலைவராகிய கண்ணப்ப நாயனாருக்கு நான்
அடியேனாவேன். கலைமலிந்த சீர்
- எல்லா நூல்களாலும் விதந்து
பேசப்பட்ட சிறப்பு. மலிதல் - மேம்பாடுற்று நிறைதல். இங்குச் சீர் என்றது
அன்பின் சிறப்பினை. வீடுபேறும் உலக வாழ்வு மாகிய நிலைகள்
இரண்டிற்கும் ஒப்ப இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பாவது அன்பே
என்பது எல்லாக் கலைகளுக்கும் ஒப்ப முடிந்த உண்மை. நம்பி
ஆடவரிற்
சிறந்தோன். "நம்பி என்பது நாமச் சிறப்பே" பிங்கலம். "ஆடவன் கொன்றா
னச்சோ!" என இவரது மெய்காப்பாளரும் புகழவும், "மாறிலாய் நிற்க" என்று
இறைவரும் விளிக்கவும் வாய்ந்த சிறப்புக்களை இங்கு உன்னுக. கண்ணப்பர்
- இது இறைவனுக்கு இவர்தம் கண்ணை யிடந்து அப்பிய காரணம் பற்றி
இறைவன் தந்த திருப்பெயர்; இவரது பெற்றோர்களால் இடப்பட்ட பெயரன்று.
சரிதக் குறிப்பும் தேற்றமும் பெற இப்பெயராற் குறித்தார்.
வகை
:- பூவுலகிற் சிறந்து விளங்கும் திருக்காளத்தி இறைவரது
நலத்தைத்தரும் திருக்கண்ணில் குருதிபொழியக் கண்டு மனநடுங்கி
அம்பினாலே தனது வலதுகண்ணைத் தோண்டி அப்பினவர்
வேடர்குலத்துதித்த கண்ணப்பராமென்று சொல்வர் பெரியோர்.
|