பக்கம் எண் :


828 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     நிலத்தில் திகழ் - உலகில் தட்சிண பிலாயமென்று விளங்குகின்றன.
நெற்றியின் மேல் - முகத்தினிடத்து, நெற்றி ஆகுபெயராய் ஈண்டு முகத்தை
உணர்த்தி நின்றது. நலத்திற்றரு கண்ணிற் பொழிகுருதி கண்டு என
மாற்றுக. நலத்தில் - ஏழாவதன் உருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில்
வந்தது. ஈண்டு நலம் என்றது "அங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு
நோக்கத்தினை" (753). உண்ணடுங்கி - இதன் விரிவு புராணம் 170-ம்
திருப்பாட்டு முதலியவற்றாலறிக.

     வலத்தில் மலர்க்கண் இடந்து - என்று கூட்டுக. கிராதன் -
வேடன். அப்பினவன் - கண்ணப்பனாம் என்று கூட்டுக. பெரியோர் என்ற
தோன்றா எழுவாய் வருவிக்க.

     பெயரும் சரிதக்குறிப்பும் பெருமைப் பண்பும் முதனூல் பேசிற்று. இவர்
பேறு பெற்ற தலமும் சரித வரலாறும் மரபும் பெயரும் பிறவும் வகைநூல்
வகுத்தது. இவை விரிந்தபடி புராணத்துட்காண்க.

     650. (இ-ள்.) வெளிப்படை. அடையலாரது முப்புரங்களை அழித்த
விடையவராகிய வேதவாய்மைக்காவலரது திருக்காளத்தியிலே பேறடைந்த
கண்ணப்பநாயனாரது திருநாடாவது, புலவர்கள் புகழ்ந்து பாராட்டும் நல்ல
வளங்கள் பெருகி நிலைத்ததும் பூக்கள்மலர்ந்த வாவிகளும் சோலைகளும்
சூழ்ந்ததுமாகிய பொத்தப்பி நாடாகும் என்று சொல்வார் பெரியோர்.

     (வி-ரை.) மேவலர் - அடையலர்; பகைவர். புரங்கள் - முப்புரம்.
செற்ற - நகைத்து அழித்த. செற்ற என்றதனால் வேண்டுதல்
வேண்டாமையிலாத இறைவனுக்குச் செற்றம் முதலிய குற்றம் ஏற்றியதாகாது
எனக் குறிக்க விடையவர் - என்றார். விடை - தருமதேவதையாகிய இடபம்.
புரங்களை இறைவன் எரித்தது மறத்தினைப் போக்கி உயிர்களுக்குத்
துன்பந்துடைத்துப் போகமளித்தற்கேயாம். தருமம் யுகந்தோறுங் குறைந்துவந்து
இறுதியில் அழியாது இறைவனிடம் ஒடுங்கி நிற்குமென்பர். இனி, "தடமதில்க
ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளில் இடபமதாய்த்தாங்கினான் றிருமால்காண்
சாழலோ" (திருவாசகம்) என்றபடி முப்புரமெரித்த ஞான்று விடையாய் நின்ற
திருமாலின்மீது எழுந்தருளியவர் என இரண்டையும் உடன் குறிப்பார் செற்ற
விடையவர்
என்றார் என்பதுமாம். முப்புரமெரித்தல் என்பது
மும்மலகாரியங்களை அழித்தலாகிய இறைவனது செயலைக் குறிப்பதாகக்
கூறுவர் திருமூல நாயனார்.      

     வேதவாய்மைக் காவலர் - வேதங்களில் விதிக்கப்பட்ட அறம் -
வாய்மை - என்னு மிரண்டில் அறத்தை மேல் விடையவர் என்றதனாற்
கூறினாராதலின் ஏனை வாய்மையை இதனாற் குறித்தார். அறவினை
யாதெனிற் கொல்லாமை" "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப்
பொய்யாமை நன்று" என்றிவவிரண்டினையும் வரையறுத்து முறைப்படுத்திய
நீதிநூலும் காண்க. வேதமும், அறத்தைச்செய் சத்தியத்தைப்பேசு - என்று
இம்முறையிலே பேசிற்று. இம்முறைபற்றியே இங்கு ஆசிரியர் விடையவர்
என்றும், அதன்பின் வாய்மைக்காவலர் என்றும் வைத்த அமைப்பும் காண்க.
கொல்லாமை அறமாகியவழி, அஃது அவ்வறக்கடவுள் புரங்கள் செற்றார்
என்றதனோடு முரணாமை மேலுரைக்கப்பட்டது. இதனைக் "கொலையிற்
கொடியாரை வேந்தொறுத்தல்" என்பது போலக் காண்க.

     இங்கு இச்சரிதத்தினும் நாயனார் பலபிராணிகளை வேட்டையாடிக்
கொன்று இறைவனுக்கு நிவேதித்தனர். அவை கொலையாகாது அவற்றை
ஈடேறச்செய்த அருட்செயலேயாயின என்று பின்னர்க் காண்போம்.
"ஒளிநின்று கொன்றருளி" (791) என்பார் ஆசிரியர். இச்சரிதக் குறிப்பும் பெற
இங்கு இவ்வாறு தொடங்கினார்.

     வாய்மை - வாயின் தன்மை. அது சத்தியத்தினைப் பேசுதல். இதுவே,
சத்தியத்தை உன்னும் உள்ளத்தின் நிலையில் உண்மை என்றும், அதனை
மெய்யாரச் செய்யும் நிலையில் மெய்மை எனவும் பெற உள்ளது. சத்து -
அழியாதது. இங்கு