பக்கம் எண் :

பெரியபுராணம்231

இன்னார் திறங்களினின்றும், “அம்மநா மஞ்சு மாறே” என்று அஞ்சித் “தூர்த்த
வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும், பிரட்டரைக் காணா கண்வாய் பேசாதப்
பேய்க ளோடே” என்றொழுகுக என்பது அன்புடையார்க்கு எந்தம் பெருமக்களதாணை.
 
     இத்துணையும் கூறநேர்ந்தமை அன்புடையார்கள் மயங்கிப் பெருமக்கள்பால்
அபசாரப் படாமைப் பொருட்டேயாம்.                                  2
 
3941.   ஆங்கவர்தம் மடியிணைக டலைமேற்கொண் டவனியெலாந்
தாங்கியவெண் குடைவளவர் குலஞ்செய்த தவமனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டி னுண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.          3
 
     (இ-ள்) ஆங்கு.....தலைமேற் கொண்டு - அத்தமையினையுடைய
பொய்யடிமையில்லாத புலவர்களுடைய திருவடியிணைகளை எமது தலையின்மேற்
சூட்டிக் கொண்டு வணங்கி (அத்துணையினாலே); அவனி எலாம்....தவமனையார் -
நிலவுலக முழுமையும் தாங்கி அரசளித்த வெண் கொற்றக் குடையினையுடைய
சோழர்களுடையமரபு செய்த தவப்பயனே போன்றவரும்; ஓங்கிவளர்.....பூங்கழலார் -
மேலோங்கி வளர்கின்ற திருத்தொண்டின் உண்மைத் தன்மையினை உணர்ந்த
செயலினைச் செய்த பூங்கழலை யணிந்த வெற்றிப்பாட்டினையுடையாரும் ஆகிய; புகழ்ச்
சோழர்....புகல்கின்றாம் - புகழ்ச்சோழநாயனாரது திருத்தொண்டினைச் சொல்லப்
புகுகின்றோம்.
 
     (வி-ரை) இது கவிக்கூற்று, ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிய
புராணத்தினை முடித்து, இனி, மேற்கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய்
செய்தருளுகின்றார்.
 
     ஆங்கு அவர் - சரித வரலாறு பற்றிக் கூறாது பண்புபற்றி இப்புராணங்
கூறினமையால், ஆங்கு - என்று சுட்டின அளவில் அமைந்து முடித்துக் காட்டினார்.

 

     அவனியெலாம் தாங்கிய - குலம் - சோழர்கள் பரதநாடு முழுமையும், கடல்
தாண்டியும் அரசு செய்த உச்சநிலை சிறிதே தளர்வுற்ற சோழர் காலத்தில் வாழ்ந்தவர்
ஆசிரியராதலின் அக்குறிப்புப்பட இறந்தகாலத்தாற் கூறியதுமாம்; “சிங்கள நாடு
பொடிபடுத்த குலம்” - திருவந்தாதி - (50).
 
     தவமனையார் - குலத்தவர் செய்த தவப்பயனே போல்வார்; "நந்தமது குலஞ்
செய்த நற்றவத்தின் பயனனையீர்" (1228).
 
     தவமனையார் - பூங்கழலார் - பூங்கழலார் - என இரண்டு தன்மைகளாற்
கூறியது முன்னர் எறிபத்த நாயனார் புராணத்துள் விரித்துரைக்கப்பட்ட சரிதப்பகுதி
ஒன்றும், இனி, இங்கு, விரிக்கப்படும் பகுதி ஒன்றுமாகச் சரிதத்தின் இருபெரும்
பகுதிகளைக் குறித்தற்பொருட்டு. சோழர் மரபு, இவர் அதனுள் அவதரிக்கத் தவஞ்
செய்து பெற்றது என்க. (829) பார்க்க.
 
     தொண்டின் உண்மையுணர் செயல் புரிந்த பூங்கழலார் - செயல்களாவன.
பட்டத்து யானையும் பாகரும் மடிந்த செயல் கேட்டெழுந்த கடுஞ்சினம், “சிவாப ராதம்
நிகழ்ந்தது”எனத் தெரிந்த அக்கணமே தவிர்ந்து தம்மையும் கொல்ல வாளினை நீட்டிய
செயலும், பணியாத பகைவரை வெற்றி கொண்ட போது கொணர்ந்த
தலைக்குவியலின்கண் தலை ஒன்றிற் சடை தெரியக்கண்ட அக்கணமே வெற்றிநிலை