பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்232


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

41. புகழ்ச்சோழ நாயனார் புராணம்
- - - - -

தொகை

“பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (7)

வகை

“புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக் கீந்ததொர் வண்புகழே.”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (50)
 

விரி

3924. குலகிரியின் கொடுமுடிமேற் கொடி வேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ் நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் டமிழ்ச்சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில்வள ரணிக்கெல்லா முள்ளுறையூ ராமுறையூர்.
 
     புராணம்:- இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே, எட்டாவது
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கத்துள், இரண்டாவது புகழ்ச்சோழ நாயனாரது
புராணங் கூறத் தொடங்குகின்றார். புகழ்ச்சோழ நாயனாரது சரித வரலாறும் பண்புங்
கூறும் பகுதி.
 
     தொகை :- சோலைகள் சூழ்ந்த கருவூரிலே துஞ்சிய புகழ்ச்சோழருக்கு நான்
அடியேனாவேன். துஞ்சுதல் - உயிர் நீத்தல்; தூங்குதல் என்ற பொருள் மங்கல
வழக்காக விழிப்பில்லாத பெருந்தூக்கம் என்னும் இறத்தலைக் குறித்து வழங்கப்படுவது;
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத்
துஞ்சிய பெருவழுதி என்று வருவன காண்க. துஞ்சிய செய்தியின் சிறப்பாலே
வந்தபெருமைபற்றி இவ்வாற்றாற் கூறுதல் மரபு. ஈண்டுப் புகழ்ச்சோழர்,
 சடைத்தலையினைக் கனகமணிக் கலத்தேந்தித் தீப்புகுந்து துஞ்சிய செயலே அவரது
செயற்கரிய திருத்தொண்டின் செயலாதலின் துஞ்சிய செயலாகிய இதுபற்றிப்
போற்றப்பட்டார். ஊரும் பேரும் பண்பும் வரலாறும் முதனுல் பேசிற்று.