பக்கம் எண் :

பெரியபுராணம்233

     வகை;- நகுசுடர்வாள்.....வண்புகழே - வீசுகிற சுடரினையுடைய தமது
உடைவாளினை (என்னையும் கொல் என்று) வெற்றியில் நிலைபெற்ற எறிபத்த
நாயனார்பாற் கொடுத்ததாகிய ஒப்பற்ற வள்ளன்மையுடைய புகழானது;
புலமன்னிய.....பொடிபடுத்த - அயற்புலங்களில் நின்ற அரசனது சிங்கள நாட்டினை
அழித்து வெற்றிகொண்ட; குலமன்னிய....குலமுதலோன் - சோழர் குலத்துக்குரிய
புகழினையுடைய கோகன நாதன் என்னும் சோழன் மரபில் அவதரித்த முதல்வராகிய;
நலமன்னிய......என்பர் - நன்மை பொருந்திய புகழ்ச் சோழரது உடைமையாம் என்று
கூறுவர்.
 
     புகழே - புகழ்ச்சோழன தென்பர் - என்று கூட்டி முடித்துக் கொள்க; புலம் -
அயற்புலம், பகைப்புலம்; புலம் - நாடு ; சிங்களநாடு - மன்னை - என்று கூட்டுக.
சிங்கள நாட்டைச் சோழர்கள் வென்று அடிப்படுத்தி ஆண்ட சரிதவரலாறு
குறிக்கப்பட்டது. சிங்களம் என்பது ஈழநாடு. (ceylon); இலங்கை எனப்படுவது;
“தென்னாடு மீழமுங் கொண்டதிறல்” (தேவா) கோகனநாதன் - சோழரது பெயர்;
ஆதித்தச் சோழர் பெயரைக் குறிப்பிட்டது போலும். இந்நாடு பரதநாட்டுக்குத்
தென்பாலில் கடல் கடந்து சேரும் தொலைவில் உள்ளதனால் “அவனி யெலாம்
தாங்கிய” (3941) என்று இதனைக்குறிப்பித்தனர் ஆசிரியர். எறிபத்தனுக்கு - வாள் -
ஈந்த - புகழ்
- இது முன்னர் எறிபத்த நாயனார் புராணத்தில்
விரிவாயுரைக்கப்பட்டது. இப்புராணத்துள்ளும் ஆசிரியர் இதனை, மேல் (3956) சுருக்கி
உரைக்கின்றமை காண்க. ஈந்த - கையில் கொடுத்த; வலம் - வெற்றி; அரசரது
பட்டத்து யானை என்றும் பாராது, தம்முயிருக்கு நேரக்கூடிய பயத்தினையும் பாராது,
பாகரையும் யானையையும் வெட்டி வீழ்த்திச் சிவாபராதத்துக்குக் கழுவாய் செய்த வீரம்
வெற்றி எனப்பட்டது; நகுதல் - வீசுதல்,
 
     நாடும் பேரும் மரபும் வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது. இவை விரிந்தபடி
விரிநூலுட் காண்க.
 
     விரி: 3942. (இ-ள்) குலகிரியின்....எழுதி - இமயமலையின் உச்சியின்மேல் தமது
வேங்கைக் கொடியின் குறியினைப் பொறித்து; நிலவுதரும்........வளநாட்டு - வெள்ளிய
ஒளி வீசுகின்ற முழுமதி போன்ற வெண்கொற்றக் குடை நிழலின்கீழே நீண்ட
நிலவுலகத்தினைக் காத்து இன்பம் பெருக அரசளிக்கும் விரியும் புகழினையும்வண்மையினையும் உடைய தமிழ் மன்னர்களாகிய சோழர்களால்
ஆளப்பட்ட வளநாட்டில்; மாமூதூர்...உறையூர் - உலகில் வளர்ந்தோங்கும்
அழகுகளுக்கெல்லாம் உள்ளுறை இதுவேயாம் என்று சொல்லத்தக்க உறையூர் என்பது
பெரிய பழைய ஊராகும்.
 
     (வி-ரை) உறையூர் - சோழர் வளநாட்டு மாமூதூர் - என்க.
 
     குலகிரி - இமயம்; பொன்மலை என்பதுமாம்; மேரு - இமயம் - மந்தரம்
இவற்றை ஒன்றாகக் கூறுதல் வழக்கில் வந்தது. “புண்டரிகம் பொன்வரைமே லேற்றிப்
புவியளிக்கும்” (608), “பொன்மலைப் புலிவென்றோங்க” (55) என்று இதனை முன்னருங்
குறித்தமை காண்க. குலகிரி - வேங்கைக் குறி - நெடுநிலம் - வண்டமிழ் -
மூதூர்
- பண்புத்தொகைகள். மேல் - ஏழனுருபு நிலவுதரு - 2- ம் வேற்றுமைத்
தொகை” மதிக்குடை - உவமைத் தொகை; புகழ்ச்சோழரது சரிதந்
தொடங்குகின்றாராதலின் புகழ்பற்றிக் கூறினார். குலகிரியின்.....எழுதி - தங்கள்
ஆட்சி வடகோட்டுஇமயமலைவரையும் சென்றது என்றறிவிக்க, அவ்வளவும் நிலம்
அடிப்படுத்தி அதற்கறிகுறியாக வேங்கைக்குறியினை அம்மலையினுச்சியிற் சோழர்
பொறித்த