(இ-ள்) அளவில்....அதனில் - அளவில்லாத பெறும்புகழினையுடைய அத்திருநகரத்தில்; அணி.....எறிப்பனவாய் -அழகிய மணிகளால் விளக்கம் பெறும் இளவெயில் போன்ற சுடர்களின் தொகுதி இராப்போதினை இல்லையாம்படி ஒளி வீசுவனவாக; கிளர் ஒளிசேர்...நிரைகள் - கிளர்கின்ற ஒளி சேரும் நீண்ட ஆகாயத்தின் உள்ள பெரிய கங்கையாற்றிலே கொடிகள் போன்று விளங்கும் ஒளிவளரும் மாளிகைவரிசைகள்; மறுகெல்லாம் மருங்குடைய - வீதிகள் எல்லாம் பக்கங்களில் உடையன. |
(வி-ரை) மணிவிளக்கும் சுடர்ப்படலை - மணிகளினின்றும் இயல்பின்எழுகின்ற ஒளிக்கதிர்களின் தொகுதி. |
இரவு ஒழிய எறிப்பனவாய் - இராப்போதென்பதே காணமுடியாதபடி ஒளி செய்ய; எறித்தல் - ஒளி வீசுதல்; இரவு -இருட்போது; இளவெயில் - வெப்பமில்லாத ஒளி. |
வானப்பேர்யாறு - ஆகாயகங்கை; கெழுவுதல் - விளங்குதல். |
எறிப்பனவாய் - மாளிகை நிரைகள் யாற்றுக் கொடி கெழுவும் - மணிகளின் ஒளித்தொகுதி மாளிகை வரிசைகளின் மேல் வீசுதலால் அவற்றின் நிழல் வானக்கங்கையிற் காணுதல் வரிசைபெற நீண்ட கொடிகள் போன்ற காட்சி தந்தன என்பதாம்; இவ்வாறன்றி எறிப்பன - கெழுவுவன என்பவற்றைத் தொடர்பின்றி வெவ்வேறாகக் கொண்டு, மணிகளின் கதிர்ப்படலை இரவொழிய எறிப்பன; மாளிகை வரிசைகளின் மேற்கட்டிய கொடிகள் வானக் கங்கையினிற் படிவன - தோய்வன - என்றுரைத்தலுமாம். முன்பொருளில் கொடிபோலப் படலை கெழுவும் என்றும், பின்னைப் பொருளில் கொடிகெழுவும் என்றும் கொள்க. “மாளிகை நிரைவிண் சூழும்” (553) என முன்னரும் இக்கருத்தைக் குறித்தமை காண்க. 2 |
3944. | நாகதலத் தும்பிலத்து நானிலத்து நலஞ்சிறந்த போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் மாகநிறைந் திடமலிந்த வரம்பில்பல பொருள்பிறங்கும் ஆகரமொத் துளவளவி லாவணவீ திகளெல்லாம். 3 |
(இ-ள்) நாகதலத்தும்....வளத்தினவாய் - மேலுலகமாகிய விண்ணுலகினும் கீழ் உலகமாகிய பாதலவுலகினும், நிலவுலகினும் நன்மையாற் சிறந்த போகங்கள் எல்லாவற்றுக்கும் உறுப்பாகிய ஒப்பற்ற வளங்களையுடையனவாகி; மாகம்....ஆகரம் ஒத்துள - ஆகாயமளாவக் குவிந்த எல்லையில்லாத பற்பல வகைப்பட்ட பொருள் யாவும் கூடி விளங்கும் உறைவிடம்போல உள்ளன; அளவில்....எல்லாம் - அளவில்லாத கடை வீதிகள் எல்லாம். |
(வி-ரை) நாகதலம் - விண்ணுலகம்; “அமரர்புரி” (3953) என்பதும் கருதுக. பிலம் - கீழ்உலகம்; பாதலம்; நானிலம் - மண்ணுலகம்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பகுக்கப்படுதலின் நானிலம் எனப்படும். |
நலஞ்சிறந்த போகம் - நன்மை பயக்கும் போகங்கள்; நலஞ் சிறவாத பொல்லாத போகங்களும் உள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்கு நலஞ்சிறந்த என்றார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; போகங்கள் - அனுபவங்கள்; உறுப்பு - அவற்றைப் பெறுதற்குத் கருவியாக உள்ளவை; நன்மையல்லாத போகங்களுக்குச் சோழரது தலைநகரமாகிய இப்பதியில் இடமில்லை என்றபடி; தீயபோகங்களே |