பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்236

நிரம்பிய நமது பெருநகரங்களுடன் இதனை ஒப்பிடுக. பிலத்தினும் நலஞ்சிறந்த
போகமாவன, பதும மாநாகம் உறையும் பிலத்தில் அம்மை தவஞ்செய்ய உறைந்தது
போல்வன.
 
     பொருவு - ஒப்பு; அளவுமாம். உறுப்பாம் - வளமாவன - உறுப்புக்களைத்
தரும் வளங்கள். ஆதனங்கள், சோலைகள், முதலிய பலவும், அணிகலன்கள்
பட்டாடைகள் முதலிய பலவும் இவற்றுள் அடங்கும்.
 
     மாகம் நிறைந்திட - மாகம் - ஆகாயம்; விண்ணுற வடுக்கிய ஈட்டங் குறித்தது.
 
     ஆகரம் - உறையுள்; கடல், எடுக்க எடுக்கத் தரும் சுரங்கம் என்றலுமாம்.
 
     ஆவண வீதிகள் - கடை வீதிகள்; அளவில் என்றது பற்பல வகை குறித்தது. 3
 
3945. பார்நனைய மதம்பொழிந்து பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும், புடையினமென் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச் சுடருநெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா களிற்றினிரைக் களமெல்லாம்.                4
 
     (இ-ள்) பார்நனைய.....கறையடியும் - நிலம் நனையும்படி மதநீரைப் பொழிந்து
குளிர்ந்த ஆகாயம் இடங் கொள்ளும்படி முழங்குகின்ற போர்த்தொழில் வாய்ந்த
வெவ்விய யானைகளும்; புடை இனமென்று அடைகின்ற - அவை தம்பக்கத்தில் உள்ள
இனமென்று வந்து கூடுகின்ற; சோர் ....கார்முகிலும் - பொழிகின்ற மழையாகிய விடும்
மதத்தினையும் மின்னலாகிய பட்டத்தினையும் உடைய கரியமேகங்களும்; களிற்றின்
நிரைக்களமெல்லாம் - யானைகள் வரிசைபெறக் கட்டும் யானைக் கூடங்களில் எங்கும்;
பல தெரியா - பலவாக வேறு பிரித்தறியப்படாது விளங்கின.
 
     (வி-ரை) இச்செய்யுள் மயக்கவணி; மழையை மதமாகவும், மின்னலை நெற்றிப்
பட்டமாகவும், கரியநிறத்தைக் காரின் நிறமாகவும் உருவகித்தார். மேகங்கள்
இவ்வாற்றாலும் பருத்த உருவுடன் மோதுபவை போலச் சேர்தலாலும், யானைகளை
வினை, மெய், உரு என்ற மூன்றானும் ஒத்திருந்தன. இவை உயர்ந்த யானைக்
கொட்டாரங்களிற் படிந்தன; இவற்றை இத்தன்மைகளால் தம்மின மென்று மயங்கி
யானைகள் அங்கு வந்து கூடின; இக்கூட்டத்தினுள் இவை மேகமோ களிறோ என்று
வேறு பிரித்துணரப்படாத நிலையில் விளங்கின என்பதாம். அரசரது யானைப்படையின்
சிறப்புக் கூறியவாறு. மேல்வரும் பாட்டில் குதிரைப் படையின் சிறப்பும், அதன்
மேற்பாட்டில் யானை குதிரையிரண்டன் சேர்க்கையின் சிறப்பும் கூறுவார்;
இந்நாயனாரது சரிதத்தின் முற்பகுதியின் விளைவு அவரது பட்டத்து யானைபற்றி
நேர்ந்தமையும், அப்போது அரசர் குதிரைமேலேறிச் சென்றபின்,
வெட்டப்பட்டுஉயிர்பெற்ற அவ்வியானையின் மீதே மீண்டமையும் ஆகிய சிறப்புக்களும்,
இங்குக் குறிப்பா லுணர்த்தப்பட்டன; “யானைமேற் கொண்டு சென்றா ரிவுளிமேல்
கொண்டு வந்தார்” (602); இக்குறிப்புப்படவே முன்னரும் இந்நாயனாரது வரலாறு பற்றிய
கருவூரைப் பற்றிக் “கடகரி துறையி லாடும்” (554) என்றமை காண்க.
 
     புடையினம் என்று அடையவரும் - வரும் என்பதற்கு அவை -
அவ்வியானைகள் என்ற எழுவாய் வருவிக்க. இவ்வாறன்றி அடைய வரும் செயலை
மேகங்களின் மேல் ஏற்றியுரைப்பாருமுண்டு. மேகங்கள் சூழும்படி மதில்கள்
உயர்ந்திருத்தலை முன்னரும் இவ்வரலாறு பற்றிய கருவூரினை “மாமதில் மஞ்சு சூழும்
" (553) என்று கூறினார். அதனையே தொடர்ந்து இங்குக் கூறியவாறு.