பக்கம் எண் :

பெரியபுராணம்237

     பார்நனைய மதம் பொழிந்து - மதநீரின் மிகுதி குறித்தது; இதனை
பார்நனையச் சோர் மழை என்று உவமேயத்துடனும் கூட்டுக. மழைக்கு அதுவே
பயனும் குறியுமாம்.
 
     பனிவிசும்பு கொளமுழங்கும் - பனி - குளிர்ந்த; பனித்தல் - அதிர்தல் -
நடுங்குதல் என்று கொண்டு யானைச் சத்தத்தின் எதிரொலியால் அதிரும் - நடுங்கும் -
என்றுரைத்தலுமாம். விசும்புகொள முழங்குதலாவது - சத்தம் என்னும் தன்மாத்திரை
ஆகாயத்தை யிடமாகக் கொண்டு விளங்கும் நிலையினையும் குறித்து நின்றது. விசும்பு
பனிகொள
என்று மாற்றிக்கூட்டி மேகங்களும் நடுக்கமடைய என்றுரைப்பாருமுண்டு.
“மேகமும் களிறு மெங்கும்” (81) என முன்னருங் கூறினார்.
 
     போர்முக வெங்கறையடி - போர்முகம் - போர்த்தொழில் பற்றி நிற்கும்;
இதற்குப் போர்த் தொழில்வல்ல கொம்பினையுடைய என்றுரைத்து , முகம் என்பது
அதில் உள்ள கொம்பினை உணர்த்தியது ஆகுபெயர் என்பாருமுண்டு. கறையடி -
யானை; உரல்போலும் அடியினையுடைமையால் வந்த காரணப்பெயர்; கறை - உரல்;
“கறையடியானை” (பெரும்பாண் - 351).
 
     விசும்பு கொளமுழங்கும் - மின்ஓடை - மின்னலும் அதனால்வரும்
இடிமுழக்கும் ஓரிடத்தொரு காலத்தில் மேகங்கள் கூடிய போது எழுவன. அவற்றுள்
முழக்கத்தைப் பொருளிலும், ஒளியினை உவமையிலும் வைத்தார் சொற்சுருக்கமும்
தொடர்புண்மை அறிவிக்கும் நிலையும் பற்றி.
 
     சோர்மழை - சோர்தல் - வீழ்தல்; நீராவியாயிருந்த நிலை நீங்கிப்
குளிர்ந்தபோது நீர்த்துளிகளாக மாறுதலாற் கனத்துத் தாமாக வீழ்தல் குறித்தது.
மழையின் விடும் மதம் - மழையாகிய மதம்; விடுதல் - விடப்பட்டு விழுதல்; இன் -
தவிர் வழிவந்த சாரியை என்பர்; மின்ஓடை - மின்னலாகிய ஓடை. ஓடை -
யானையின் நெற்றிப்பட்டம். கார்முகில் - கரியமேகம்; கார் - என்ற அடையினைப்
பொருளிலும் சேர்க்க; கார்காலத்து மேகம் என்றலுமாம்.
 
     பல தெரியா - பலவாகப் பிரித்து அறியப்படா - தெரியப்படா என்ற
செயப்பாட்டு வினை தெரியா - எனச் செய்வினையாய் வந்தது.
 
     களிற்றினிரைக்களம் - யானைகள் கட்டும் கூடம். யானைக் கொட்டாரம்.
 
     கனமெல்லாம் - என்பதும் பாடம்.                              4
    
3946. படுமணியும் பரிச்செருக்கு மொலிகிளரப் பயில்புரவி
நெடுநிரைமுன் புல்லுண்வாய் நீர்த்தரங்க நுரைநிவப்ப,
விடுசுடர்மெய் யுரையடுக்கன் முகில்படிய, விளங்குதலாற்
றொடுகடல்க ளனையபல துரங்கசா லைகளெல்லாம்.             5
 
     (இ-ள்) படுமணியும்....கிளர - ஒலிக்கின்ற மணிகளும் குதிரைகளின் கனைப்பும்
மிகவும் சத்திக்கவும்; பயில்புரவி....நிவப்ப - விளக்கமுடைய குதிரைகளின் நீண்ட
வரிசையில் புல்லை உண்கின்ற அவற்றின் வாய் நீரினானாகிய விலாழியானது அலை
விளிம்பில் உள்ள நுரையினை ஒப்ப விளங்கவும்; விடுசுடர்....படிய - சுடர்விடுகின்ற
கவசங்கள் மலையின்மீது முகில்கள் போன்று படியவும்; விளங்குதலால் - காட்சிப்பட்டு
விளங்குதலாலே; தொடு .....எல்லாம் - பற்பல குதிரைச் சாலைகள் எல்லாம்
தோண்டப்பட்ட கடல்களைப் போல உள்ளன.
 
     (வி-ரை) முன்பாட்டில் யானைக்கூடங்கள் மேகங்கள் படர நின்றன என்று
சிறப்புக் கூறிய ஆசிரியர், இப்பாட்டால் குதிரைக் கூடங்களின் சிறப்புக் கூறும்