பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்238

தற்குறிப்பேற்ற அணிநலம்பட உரைத்தவாறு; கள்வர் வல்லிதிற் கவர்ந்த பொருள்களைச்
சேமித்த இடம் தெரிந்தால் அவற்றைப் பறியுண்டோர் அவ்விடத்தினைச் சூழ்ந்து
காவல் இட்டு அவற்றை மீளப்பெற முயலும் உலகியல் நிகழ்ச்சி பற்றி உரைக்கப்பட்டது.
 
     அயிராவதம் - என்பது முதல்குறைந்து இராபதம் என நின்றது.
 
     துரங்க அரசு - குதிரைகளின் மேம்பட்ட அரசப் புரவியான உச்சைக் சிரவம்
என்பது.
     திரு - இலக்குமி; இங்கு அவள் உருவமாகிய செல்வங்களைக் குறித்தது.
 
     விளைத்த அமுது - விளைத்தல் - கடைந்தெடுத்தல்.
 
     தரு - கற்பகம்; மணி - சிந்தாமணி.
 
     கொடுபோத - கைப்பற்றிக் கொண்டு போதலினால்; கொடு - கொண்டு;
பறியுண்டமையால் என்பது குறிப்பு; உளைத்தகடல் - உளைத்த - வயிறு வாய்ந்து தான்
ஈன்றவற்றை இழந்ததனால் வருந்திய.
 
     ஒன்று - ஒன்றையேனும்; பெற - மீட்டுப்பெற.
 
     உம்பரூர் வளைத்தது போன்று - உம்பர் ஊர் - பொன்னகரம்; ஊரினை -
இரண்டனுருபு விரிக்க. வளைத்தல் - சூழ்தல்; முற்றுகையிடல் என்றுரைக்கவும் நின்றது.
 
     அவ்வூர் பொன்னகரம் போன்றுள்ளது என்பதும் அகழி கடல்போன்றுள்ளது
என்பதும் உட்குறிப்பு.
 
     இரவொழிய வெறிப்பன - போக மனைத்தினுக் குறுப்பரம் வளம் - களிற்று நிரை
- துரங்கசாலை - என முன்கூறியவற்றுள் ஒவ்வொன்றும் பாற்கடல் தந்த இவற்றை
ஒப்பன என்பது. அவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெற விரும்பியது பாற்கடல் என்பதன்
குறிப்பு.
 
     உம்பரூர் - இதுபோலவே கருவூரையும் அமரர்புரி (3953) என்பதும் காண்க. 6
 
3948. காரேறுங் கோபுரங்கள் கதிரேறு மலர்ச்சோலை
தேரேறு மணிவீதி திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார் மருங்கேறு மலர்க்கணையொண்
பாரேறும் புகழுறந்தைப் பதியின்வளம் பகர்வரிதால்.                7
 
     (இ-ள்) காரேறும்......வசையிலணி - மேகங்கள் தவழ்ந்தேறுகின்ற
கோபுரங்களையும், இரு கதிர்களும் ஏறும் மலர்கள் நிறைந்த சோலைகளையும், தேர்கள்
உலவுகின்ற அழகிய வீதிகளையும், எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிச் செல்கின்ற
வசையில்லாத அழகுகளையும் உடைமையால்; வாரேறும்....பாரேறும் புகழ - கச்சணிந்த
முலையினையுடைய பெண்களிடையேயேறும் மலரம்புகளின் செயல் வாய்ந்த ஒள்ளிய
உலக முழுதும் பரவும் புகழ்பூண்ட; உறந்தை....பகர்வரிதால் - உறையூர் என்ற
பதியினது வனங்களைச் சொல்லுதல் அரிதாகும் (எறிதன்று).
 
     (வி-ரை) ஏறும் - என்பன பெயரெச்ச முடிபுகளாகக் கொண்டு அங்கங்கும்
கூட்டிமுடித்துக் கொள்க. இங்ஙனமன்றி, முதல் நான்கினையும் வினைமுற்றுக்களாகக்
கொண்டு, (இந்நகரத்தின்) கோபுரங்களில் கார் ஏறும்; சோலைகளில் கதிர்கள் ஏறும்;
வீதிகளில் தேர் ஏறும்; அணிகள் திசை ஏறும் என்று முடித்துரைப்பதுமாம்.
 
     காரேறும் கோபுரங்கள் - கதிர்ஏறும் மலர்ச்சோலை - கோபுரங்
ளும் சோலைகளும் வானளாவ வுயர்ந்துள்ள சிறப்புக் குறித்தபடி.