தேர் ஏறு மணிவீதி - ஏறுதல் - இயங்குதல் - உலாவுதல். இங்குக் குறித்தது போர் நிலையில் செல்லும் தேர்களி னியக்கமன்று; அரசமரபினர்களும் செல்வர்களும் தேர்ஏறி உலாவும் நிலைபற்றியது; “வளவநின் புதல்வ னாங்கோர் மணிநெடுந் தேர்மீ தேறி....அரசுலாந் தெருவிற் போங்கால்” (116). |
அணி - அழகின் பெருமை; திசைஏறுதலாவது எல்லாத் திசையின் நாட்டு மக்களாலும் புகழப்படுதல்; வசையில் - இழிபில்லாத; இழிபு - இகழ்ச்சி - யில்லாத அணி (அழகு) என்றது உயர்விலே மனம் செல்லக் காரணமாக விளங்கும் அழகுகள். “உலகில்வள ரணிக்கெல்லா முள்ளுறையூர்” (3942) என்ற கருத்தும் காண்க. இந்நாளில் மக்கள் கோலம் என்ற பெயரால் நாட்டிற் செய்து மகிழும் அலங்கோல அணி வகைகளைக் கருத, இவ்வேறுபாடு விளங்கும். வசையில்வளி - என்று பாடங் கொண்டு தென்றலைக் குறித்தாகக் கொள்வாரு முண்டு. |
மடவார் மருங்கு மலர்க்கணை ஏறும் புகழ் - என்க. மலர்க்கணை - மன்மதனது மலரம்புகள். அவை மடவார் மருங்கேறும் புகழாவது அவர்கள் இணையற்ற இன்பத்துக்கு இடமாய் விளங்குதல். மருங்கு - என்பதனை இடை என்று கொண்டு, மடவார்களது இடையின் காரணமாக ஆடவர்கள்பால் ஏறும் மலர்க்கணை என்றுரைப்பது மொருபொருள் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை; “நலஞ்சிறந்த, போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளம்” (3944) என்று முன்னர்க் கூறியது உயிரில் பண்டங்களாய்ப் போக உறுப்புக்களாய் விளங்கும் அணிகலன்களும் உணவுப் பொருள்களும், கண் - செவி - ஊறு முதலிய புலன்களினுகர்ச்சிக்குரியவையுமாம்; இங்குக் கூறியது அவ்வைம்புலனுகர்ச்சிக்கு ஒரே நிலைக்களமாய் உயிருள் பொருள்களாய், விளங்கும் மகளிரை; பார்ஏறும் புகழ் - என்றது இந்நகர் வாழும் மக்கள் மடவாருடன் கூடி நிகழும் இல்வாழ்க்கை யின்ப நிலைகள் உலகிற் புகழ்ந்துரைக்கும் தன்மையுடையன என்றதாம். |
கதிர் - இருசுடர்களாகிய சூரிய சந்திரர்கள். |
கதிர்ஏறும் - கதிர்கள் ஏறிச்செல்லுதற்கிடமாகிய; “வெண்மதியஞ், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது” (1906). |
உறந்தைப்பதி - உறையூர்; மரூஉ. பகர்வரிதால் - இதுவரை ஏழுபாட்டுக்களாலும் கூறிவந்த நகரச் சிறப்பினை முடித்துக் காட்டியவாறு. 7 |
3949. | அந்நகரிற் பாரளிக்கு மடலரச ராகின்றார் மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்குஞ் சென்னிநீ டநபாயன் றிருக்குலத்து வழிமுதலோர் பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழ ரெனப்பொலிவார். 8 |
(இ-ள்) அந்நகரில்....ஆகின்றார் - அத்திருநகரத்தினைத் தலைநகராகக் கொண்டு வீற்றிருந்து உலகத்தினைக் காவல்புரியும் வலிய அரசராகின்றவர்; மன்னு....வழிமுதலோர் - நிலைபெற்ற திருத்தில்லையம்பதியிலே அழகிய திருவீதிகளில் அழகு விளங்கும் பணிகள் செய்யும் சோழராகிய நீடுவிளங்குகின்ற அனபாயச் சோழருடைய திருக்குலத்தின் மரபு வழியிலே முதல்வராய் விளங்குபவர்; பொன்னி.....பொலிவார் - காவிரியாறு வளம்படுக்கும் சோழர் நாட்டினைக் காக்கும் அரசராகிய புகழ்ச் சோழர் என்ற பெயராற் சிறந்து விளங்குபவர். |
(வி-ரை) இப்பாட்டினால் இப்புராணமுடைய நாயனாரது மரபு விளக்கம் கூறியவாறு. |