அந்நகரில் - நகரினைத் தமது அரசமாநகரமாகக் கொண்டு வீற்றிருந்து. |
மன்னுதிருத் தில்லைநகர்.....வழிமுதலோர் - இஃது, ஆசிரியர் இப்புராணம் பாடுவித்த பெருமையுடைய தமது அரசரை இப்புராணத்துள் வைத்துப் பாராட்டிய பதினொரு இடங்களுள் ஒன்று. இதுபற்றி எனது சேச்கிழார் 180 - 184 பார்க்க. திருக்குலத்து வழிமுதலோர் - வமிசத்துக்கு வழிமுதலாயுள்ளவர். |
தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும் - “தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கியவளவர் போரேறு” (1213) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
திருக்குலத்து வழிமுதலோர் - பின்வந்த அரசர்களின் பெருமையினால் வழிமுதல் முன்னோரைப் பாராட்டிப் பெருமை கூறி அறிவித்தல் ஒரு மரபு. கண்டதனைக் கொண்டு காணாததனை அறிவிக்கும் அளவை முறையும், தமது அரசரையும் உடன்போற்றும் முறையும் ஆகிய இருபயன்களை விளைப்பது. “சென்னி வெண்குடை நீடன பாயன் திருக்குலம்” (404); “சென்னிவளர் மதியணிந்த சிலம்பணி சேவடியார்தாம் மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர்” (1900) என்பன முதலியனவாய் வந்த பல இடங்களிலும் இக்குலச் சைவப்பெருமை போற்றப்பட்டதாதலின் அவையெல்லாம் குறிக்கத் திருக்குலம் என்றார்; வழிமுதல் - வழி வழி முன்வந்த முதல்வர்; வழிக்கு முதல்; வழி - வம்மிசம்; “வழியெஞ்சல்” (குறள்). |
பொன்னிநதிப் புரவலனார் - நதி - அந்நதி வளம்படுக்கும் நாட்டினைக் குறித்து நின்றது. நதிபுரத்தல் - அந்நதியின் வளம்முழுதும் பெற நாட்டுக் காக்கிக் காத்தல். |
ஆகின்றார் - முதலோர் - பொலிவாராவார் - என்று பெயர்ப் பயனிலை கொண்டு கூட்டி முடிக்க. இங்ஙனம் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்ற மூன்று காலச் சிறப்பும்படக் கூறியது முக்காலத்தும் நிகழும் புகழுடையார் என்று குறித்தற்கு. |
அனபாயன் திருக்குலம் என்பது பற்றி ஈண்டுக் கூறியதுபோலவே இந்நாயனாரது தொடர்புடைய எறிபத்தர் புராணத்தும் கூறினார். “அனபாயன் சீர்மரபின் மாநகரமாகும்” (552) அங்குக் கூறும் கருவூரும் சோழர் தலைநகரமாதலானும் (3952). இந்நாயனாரது சரிதப் பெரும்பகுதிக ளிரண்டனுள் முற்பகுதி ஆண்டு நிகழ்ந்த தாதலானும் அவை குறிக்க முன்னருங் கூறினார் என்க. சண்டீசர் புராணம் 8-வது திருப்பாட்டிலும் இப்பெருமை கூறுதல் காண்க. 8 |
3950. | ஒருகுடைக்கீழ் மண்மகளை யுரிமையினில் மணம்புணர்ந்து பருவரைத்தோள் வென்றியினாற் பார்மன்னர் பணிகேட்பத் திருமலர்த்தும் பேருலகுஞ் செங்கோலின் முறைநிற்ப அருமறைச்சை வந்தழைப்ப வரசளிக்கு மந்நாளில், 9 |
3951. | பிறைவளருஞ் செஞ்சடையார் பேணுசிவா லயமெல்லாம் நிறைபெரும்பூ சனைவிளங்க, நீடுதிருத் தொண்டர்தமைக் குறையிரந்து வேண்டுவன குறிப்பின்வழி கொடுத்தருளி முறைபுரிந்து திருநீற்று முதனெறியே பாலிப்பார், 10 |
3952. | அங்கணினி துறையுநா ளரசிறைஞ்ச வீற்றிருந்து கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகொணரத் தங்கள்குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில் மங்கலநா ளரசுரிமைச் சுற்றமுடன் வந்தணைந்தார். 11 |