பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்242

     முறை - சிவாலயங்களில் எல்லாம் நிறைபெரும் பூசனை விளங்கச் செய்தலும்,
திருத்தொண்டர்களுக்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தலும் ஆகிய முறை;
ஆண்டவன் வழிபாடும் அடியார் வழிபாடுமே நீற்று நெறியினைப் (சிவநெறியினைப்)
பாலிக்கும் முறை என்பதாம். நீற்றுநெறி - நீற்றினையே முதன்மையாகக் கொண்டுள்ள
சைவம்; நெறி - சமயம்.
 
     முதல் - முதன்மையான; பாலித்தல் - பரிபாலித்தல்; காத்தல், “மண்ணினிற்
பிறந்தார் - பெறும் பயன்” (2985) “வேத வுள்ளுறை யாவன” (1832) என்ற
திருப்பாட்டுக்களின் கருத்து ஈண்டு நினைவு கூர்தற்பாலன.
 
     நிறைபெரும் பூசனை விளங்குதல் - நித்திய நைமித்திகங்கள் சிறக்க நிபந்தம்
வைத்து நடத்துதல். விளங்க - முறை புரிந்து என்றும் கூட்டுக.            10
     3952. (வி-ரை) அரசிறைஞ்ச வீற்றிருத்தலாவது மன்னர் வந்து பணியும் படி
சிங்காதனத்தில் வீற்றிருந்து முறை புரிதல்.
 
     கொங்கரொடு....கொணர - கொங்கர் - கொங்கு நாட்டினை அரசு புரியும்
சிற்றரச மரபினர்; குடபுலத்துக் கோமன்னர் - மேற்குத் திக்கில் அரசு புரியும் குறுநில
மன்னர்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்க்குச் செலுத்தும் கப்பம்; திறைகொணர -
திறை கொணரும்பொருட்டு; இது பேரரசர்களின் அரசமரபு வழக்கு; தம்கீழ் உள்ள பல
தேயத்தின் அரசரும் திறைகொணர - அங்கங்கும் தம் தலைநகரங்கள் வகுத்து அங்குச்
சென்று வீற்றிருந்து முறைபுரிதல்; இவ்வழக்கு அவ்வக் குறுமன்னர்கள் திறை
செலுத்துதற்கும் பேரரசர் கொள்ளுதற்கும் இலகுவாதற் பயனுடைத்து; அன்றியும்
அவ்வவ் வரசர் மேலிட்டு அடராதபடி அடக்கியாளுதற்கும் சாதனமாகும்.
 
     தங்கள் குலமரபின் முதற் றனி நகராம் கருவூர் - சோழர்கள் முடிசூடும்
ஐந்து நகரங்களுள் ஒன்று. (1213)
 
     மங்கல நாள் - பேரரசர் அரசகாரியத்தின் பொருட்டு வந்தணைகின்றாராதலின்
மங்கல நன்னாட் குறித்து வந்தருளினர் என்க. இது நித்திய மங்கலமாகிய சிவப்பேறு
பெறுதற்கும் உரித்தாய் நிகழ்ந்தமை பின் சரித விளைவினா லறியப்படும். “சேவடியின் அக்கருணைத் திருநிழற்கீ ழாராமை யமர்ந்திருந்தார் (3981).
 
     அரசுரிமைச் சுற்றம் - மந்திரிகள் சேனைத் தலைவர் முதலாயினோர்; உடற் சுற்றத்தினைப் பிரித்தலின் அரசுரிமை என்பது பிறிதினியைபு நீக்கிய விசேடணம். அமைச்சர் (3955 - 3959 - 3979); ஐம்பெருங் குழு - எண்பேராயம் என்ற இத்திறத்தினர்.                                                     11
 
3953.     வந்துமணி மதிற்கருவூர் மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி யெய்துவா னெனவெய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார் மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.     12
 
     (இ-ள்) வந்து....அணைவார் - வந்து அழகிய மதிலையுடைய கருவூரின் பக்கத்தில் அணைவாராகிய புகழ்ச் சோழர்; வானவர் சூழ்......எய்தி - தேவர்கள் சூழ
இந்திரன் வந்து அமராபதியினைச் சேர்வான் போலச் சேர்ந்து; சிந்தை....இறைஞ்சி -
மனமிகக் களித்து அரனார் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் திருவானிலைத்
திருக்கோயிலினை முன்னாக வந்து சார்ந்து வணங்கி; மொய்....புகுந்தார் - மொய்த்து
விளங்கும் ஒளியினையுடைய தமது திருமாளிகையின்கட் புகுந்தருளினர்.