(வி-ரை) வானவர் சூழ்.....என எய்தி - தமது மந்திரிகள் முதலாயின அரசச் சுற்றம் சூழ மன்னர் வந்தது தேவர்கள் சூழ இந்திரன் வந்தமை போன்றது என்றபடியாம். அரசர் திருவுக்கும் சுற்றம் சூழ்தலுக்கும் அரச மாபுரி அணைதற்கும் வினையும் மெய்யும் பற்றி ஒருபுடை ஒப்புமை உலகியல் நிலையின் மேம்பட்ட தெய்வத் திருவின் விளக்கம் என்ற அளவே ஈண்டுக் கொள்ளத்தக்கது; இவ்வளவன்றி இந்திரன் எந்தம் பெருமக்களுக்கு எவ்வாற்றாலேனும் ஒப்பாவன் என்பது கருத்தன்று; “பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை - மாவா ழகலத்து மான் முதல் வானவர்-ஓவா தெவரு நிறைந்துறைந் துள்ளது” (136) என்றபடி அடியார்களது அருள் பெறுதற்குத் தவங்கிடந்து அவர்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டப வாய்தலிற் காத்திருக்கும் தேவர்களுள் ஒருவன் இந்திரனாகும்; “இந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும், வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கிச்” (11 - திருமுறை - பட்டின - இடை - மும் - கோ - 7); சிவானந்த வாழ்வில் தினைப்பவர் எந்தம் பெருமக்களாகிய அடியவர்கள். |
அமரர் பதி - முன்னர் “உம்பரூர்” (3947) என்ற கருத்தினைத் தொடர்ந்து கூறியது. |
அணைவார் - வினையாலணையும் பெயர்; மகிழ் - மொய் - வினைத்தொகைகள்; மாளிகை புகுந்தார் - 7ம் வேற்றுமைத்தொகை. |
சிந்தை....கோயில் முந்துற வந்தணைந் திறைஞ்சி - நகரத்தில் அணைந்தவுடன் திருக்கோயிலினை முன்னர்ச் சார்ந்து வணங்கிப், பின்னரே, தமது திருமாளிகையினுட் புகுந்தனர் என்ற திருத்தொண்டி னெறிமரபு குறிக்கப்பட்டது; முன்னர் வருவது திருத்தொண்டு; அதன்பின்னரே வருவது அரசாட்சி என்ற நிலைக்குறிப்பு. ஆனிலை - இத்திருக்கோயிலின் பெயர், |
மொய் ஒளி - ஒளி மொய்த்தலாவது பல ஒளிகளும் கூடுதல்; ஒளி மிகுதலுமாம். |
| 12 |
3954. | மாளிகைமுன் னத்தாணி மண்டபத்தின் மணிபுனைபொற் கோளரியா சனத்திருந்து குடபுலமன் னவர்கொணர்ந்த ஓளிநெடுங் களிற்றினணி யுலப்பில்பரி துலைக்கனகம் நீளிடைவில் லிலகுமணி முதனிறையுந் திறைகண்டார். 13 |
(இ-ள்) மாளிகைமுன்....இருந்து - அரசமாளிகையின் முன்னே அரசிருக்கை மண்டபத்திலே மணிகளாற் புனையப்பட்ட பொன்னானியன்ற சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து; குடபுல மன்னவர் கொணர்ந்த - மேற்குத்திசை நாடுகளின் அரசர்கள் கொண்டுவந்து செலுத்திய; ஓளிநெடும்.....திறைகண்டார் - வரிசை பெற நிறுத்தப்பட்ட பெரிய யானைக் கூட்டமும், அளவில்லாத குதிரைகளின் அணிவரிசையும், எடை நிறைவுடைய பொன் குவியலும், நெடுந்தூரத்தில் ஒளி வீசும் மணிகளும் என்றிவை முதலாகிய பொருள்கள் நிறைந்த திறையினைக் கண்காணித்தருளினர். |
(வி-ரை) அத்தாணி மண்டபம் -அரசர் அரசகொலுவிருக்கும் மண்டபம்; Court Hall என்பர் நவீனர். முன் - இஃது அரசமாளிகையின் முன்புறம் அமைவது மரபு. கோளரி ஆசனம் - சிங்காசனம். |
ஓளி - வரிசை - ஒழுங்கு; யானைப் பந்தி என்றலுமாம். துலை - எடைச் செறிவு. |
நீளிடை வில் இலகுதலாவது - நெடுந்தூரத்தில் ஒளி வீசுதல்; வில் - ஒளி. |