திறை - சிற்றரசர் பேரரசர்க்குச் செலுத்தும் கப்பம்; கண்டார் - காணுதல் - கண்காணித்தல். |
களிற்றணியும் விளக்குமணி - துணைக்கனகம் - என்பனவும் பாடங்கள்.13 |
3955. | திறைகொணர்ந்த வரசர்க்குச் செயலுரிமைத் தொழிலருளி, “முறைபுரியுந் தனித்திகிரி முறைநில்லா முரணரசர் உறையரண முளவாகிற் றெரிந்துரைப்பீ” ரெனவுணர்வு நிறைமதிநீ டமைச்சர்க்கு மொழிந்தருளி நிகழுநாள், 14 |
3956. | சென்றுசிவ காமியார் கொணர்திருப்பள் ளித்தாமம் அன்றுசித றுங்களிற்றை யறவெறிந்து பாகரையுங் கொன்றவெறி பத்தரெதி “ரென்னையுங்கொன் றருளு”மென வென்றிவடி வாள்கொடுத்துத் திருத்தொண்டின் மிகச்சிறந்தார். 15 |
3955. (இ-ள்) திறை கொணர்ந்த.....அருளி - முன் கூறியபடி திறைகளைக் கொண்டுவந்து செலுத்திப் பணிந்த அரசர்களுக்கு அவ்வவரும் தத்தம் அரசுகளைச் செலுத்தும் உரிமைத் தொழில் செய்து வரும்படி பணித்தருளி; முறைபுரியும்....மொழிந்தருளி - நமது அரசாங்க முறை செலுத்தும் தனியாட்சியின் வழியில் அடங்கி நில்லாத மாறுபட்ட அரசர்கள் ஒதுங்கி இருக்கும் காவலிடங்கள் உள்ளனவானால் தெரிந்து சொல்வீர்களாக என்று அரசாங்க உணர்ச்சி நிறைந்த மதியால் நீடிய அமைச்சர்களுக்குக் கட்டளை யிட்டருளி; நிகழுநாள் - இவ்வாறு நிகழும் நாளிலே, 14 |
3956. (இ-ள்) சென்று....அற எறிந்து - சிவகாமி யாண்டார் என்னும் அடியவர் சென்று கொணர்ந்த திருப்பள்ளித் தாமத்தை அன்று அவர் கையிற் பறித்துச் சிதறிய பட்டத்து யானையினைக் கொன்று வீழ்த்தி; பாகரையும்...எதிர் - பாகர்களையும் கொன்ற எறிபத்தர் எதிரே; என்னையும்.....கொடுத்து - யானை செய்த இவ்வபராதத்துக்கு இவற்றாற் போதாது, என்னையும் இதனாற் கொன்றருளும் என்று இரந்து வெற்றிபொருந்திய தமது வடிவாளினை நீட்டி; திருத்தொண்டின் மிகச் சிறந்தார் - திருத்தொண்டின்றிறத்திலே மிகச் சிறந்து விளங்கினார். |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுரைக்கநின்றன. |
3955. (வி-ரை) திறை.....உரிமைத் தொழிலருளி - பணிந்து திறை செலுத்தும் சிற்றரசர்களைக் பேரரசர்கள் அங்கீகரித்து அவ்வவர் அரசுக்குட்பட்ட நாடுகளை அவ்வவரும் பயமின்றிச் சுதந்தரத்துடன் உரிமையாக அரசுபுரியும்படி நிறுவித் தமது ஆணையின் காவலை அருளுதல் முன்னாளில் தமிழ்ப் பேரரசர்கள் அரசு புரியும் முறை. இதனையே பின்னாளில் வந்த முகமதியர்களும் ஆங்கிலர்களும் கையாண்டமை நாட்டு நடப்புச் சரிதங்களால் அறியலாம். |
முறைநில்லா முரணரசர் உறை அரணம் உளவாகில் - முரண் அரசர் - இவர்கள் முடிமன்னராகிய இப்பேரரசரது ஆணையின் வழி நில்லாது முரண்பட்டோர்- பகையரசர்; அரணம் - என்றது அரணத்தின் வலிமையே துணையாகக் கொண்டிருப்பரன்றி வேறு வலிமையில்லாதோர்; அவ்வரணம் அழிக்கப்படின் அவரும் பணிகுவர் என்ற குறிப்பாகும்; இதனை “அரணம் துகளாகப் பற்றறுப்பீர்” (3958) என்று மேற் கூறுதல் காண்க. |